Published:Updated:

"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை!" - 'சரிகமப' ரமணியம்மாள்

"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை!" - 'சரிகமப' ரமணியம்மாள்
"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை!" - 'சரிகமப' ரமணியம்மாள்

'சரிகமப’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரமணியம்மாள், தனக்கான நிலம் ஓராண்டாகியும் கிடைக்கவில்லை என்கிறார்.

'சரிகமப' நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான மியூசிக் ரியாலிட்டி ஷோ. இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் டைட்டில் வாங்கினார், வர்ஷா. அவருக்குப் பரிசாக வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை வென்றவர், சென்னையில் வீட்டு வேலை செய்துவரும் 63 வயது ரமணியம்மாள். ரமணியம்மாளுக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பலர் பார்த்தார்கள் என்றும் சொல்லலாம். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து செண்ட் விவசாய நிலமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஜுங்கா 2, சண்டகோழி 2 போன்ற படங்களில் பாடியும் இருக்கிறார். 

நிகழ்ச்சி நிறைவடைந்து சரியாக ஓராண்டு கடந்த நிலையில், ‘எப்படி இருக்கிறார் ரமணியம்மாள்?’ என அறிய தொடர்பு கொண்டோம்.

"எனக்கென்ன ராசா, நான் பாட்டுக்கு அதே வேலையைப் பார்த்துக்கிட்டு, முன்னாடி இருந்த அதே வாடகை வீட்டுலதான் இருக்கேன். வீடுகள்ல பாத்திரம் தேய்க்கிறப்போ, பாடிக்கிட்டே வேலை பார்ப்பேன். அப்போல்லாம், இந்தக் குரலும் சபையேறும்னு நினைச்சுக்கூட பார்த்திருப்பேனா... ஏதோ சில நல்லவங்க மனசு வைக்க, நான் டிவி-யில வந்து பாடி, இன்னைக்கு உலக ஃபேமஸ் ஆகிட்டேன். முன்னாடி எங்க தெருவைத் தாண்டி யாருக்கும் என்னைத் தெரியாது. இன்னிக்கு வெளிநாடுகளுக்கு ஃபிளைட்ல கூட்டிக்கிட்டுப் போறாங்க. அங்கே கச்சேரி மேடையில ஏறினா, 'ராக் ஸ்டார்.. ராக் ஸ்டார்'னு என்னை என்னவோ 'சூப்பர் ஸ்டார்' மாதிரி நினைச்சுக்  கை தட்டுறாங்க. எல்லாம் கடவுள் அருள் தம்பி." என்றவரிடம், பரிசாக வாங்கிய பணம், நிலம் குறித்துக் கேட்டோம்.

"எங்கிட்ட மனசுல என்ன இருக்கோ, அதை அப்படியே சொல்லிடுவேன். ஒளிச்சுப் பேசல்லாம் எனக்குத் தெரியாது. 'ரெண்டாவது பரிசு வாங்கியிருக்கேன்'னு அஞ்சு லட்சம் பணம் தர்றதா சொன்னாங்கல்ல... அதுல ஒரு லட்சம் ரூபாயை சத்து மாவு கம்பெனி தரும்னாங்க. அந்தக் கம்பெனி, 'பணமா தரமாட்டோம்; எங்காவது வெளிநாடு போனா சொல்லுங்க, ஃபிளைட் டிக்கெட் போட்டுத் தர்றோம்’னு சொல்லிட்டாங்க. அதனால, அதை  விட்டுட்டேன். மீதி நாலு லட்சத்துல வரி போக 2,80,000 ரூபாய் கிடைச்சது. என் ஏழு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு 40,000 ரூபாய்னு பிரிச்சுக் கொடுத்துட்டேன். ஒரு ரூபாய்கூட நான் எடுத்துக்கலை. பிள்ளைங்க நல்லா இருக்கட்டும்யா! பணம் என்ன தம்பி பணம்... 'நாலு எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினா போதும், இருபதாயிரம் தர்றோம்'னு  இன்னைக்கு கச்சேரிக்குக் கூப்பிடுறாங்க. அதை வெச்சு நான் பொழச்சுக்கமாட்டேனா?" என்கிறார், ரமணியம்மாள்.

’சரி பாட்டி, நிலம் என்னாச்சு?’ என்றேன்.

"அஞ்சு செண்ட் நிலம். 'திண்டிவனம் தாண்டி இருக்கு; விவசாய நிலம். அதனால, விவசாயம்தான் செய்யணும்'னு சொன்னாங்க. இவ்வளவு வயசுக்குப் பிறகு நான் அங்கே போய் என்ன விவசாயம் செய்வேன்?! அந்த நிலத்தோட மதிப்புல பாதியைப் பணமா கொடுத்தா, தேவலை. ஆனா, இப்போவரைக்கும் நிலம் எனக்குக் கிடைக்கலை." என்றார்.

ரமணியம்மாள் இப்படிச் சொன்னாலும், ஷோவில் டைட்டில் வென்ற வர்ஷாவிடமும் வீடு கிடைத்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியபோது, ‘அடுத்த வாரம் ரெஜிஸ்ட்ரேஷன்!’ என்றார்.

'சரிகமப' ஷோவின் இயக்குநர் விஜயகுமார் என்ன சொல்கிறார்?!

'டைட்டில் ஸ்பான்ஸரா இருந்த நிறுவனம்தான், அந்த நிலத்தை வழங்குறதா அறிவிச்சாங்க. அந்த நிலம் நிச்சயம் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சில வழிமுறைகள் இருக்குமில்லையா.. அதை ஃபாலோ பண்றதாலகூட கொஞ்சம் தாமதம் ஆகியிருக்கலாம். மத்தபடி, நிலம் கிடைக்குமா இல்லைன்னு ரமணியம்மாள் பயப்படத் தேவையில்லை. ரமணியம்மாளுக்கு நிலத்தை வாங்கி ஒப்படைக்கிறதுல சேனலுக்கும் பொறுப்பு இருக்கு!" என முடித்துக்கொண்டார். 

அடுத்த கட்டுரைக்கு