Published:Updated:

''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி

''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி
''டஸ்கி ஸ்கின் வேணும்னு கூப்பிட்டாங்க'' - 'பாரதி கண்ணம்மா' ரோஷினி

"இப்போ என் ஸ்கின்னால இப்படியொரு நல்ல இடத்துல நான் நிற்கிறேன். அப்போ அது என் குறையில்லை. இப்போ எங்கே போனாலும் கொஞ்சம் அதிக கலரா மேக்கப் பண்ணாங்கன்னா இல்லை வேண்டாம் இதே ஸ்கின் டோன் இருக்கட்டும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்."

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரோஷினி ஹரிபிரியன். மாடலிங், நடிப்பு என வலம் வந்து கொண்டிருக்கும் அவரிடம் பேசினோம்.

"நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். காலேஜ் முடிஞ்சதும் ஐடி கம்பெனியில் இரண்டு வருஷமா வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் இது நமக்கான இடம் இல்லைன்னு தெரிஞ்சது உடனே அந்த வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். சின்ன வயசுல இருந்தே மாடலிங் பண்ணனும் என்கிற ஆசை இருந்துச்சு. ஆனா, நான் கொஞ்சம் டஸ்க்கி ஸ்கின்ல இருப்பேன். சின்ன வயசுல இருந்தே கலரா இருக்கிறவங்களால் மட்டும்தான் இதெல்லாம் பண்ண முடியும்னு எல்லோரும் நினைக்கிற மாதிரி நானும் நினைச்சிட்டு இருந்தேன். என்னுடைய ஸ்கின் டோன் நிறைய பேருக்கு பிடிச்சிருந்தது. என்னைத் தேடி ஃபோட்டோஷூட் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இந்த மாதிரி ஸ்கின் டோன் உள்ளவங்களை மையமா வைச்சு ஒரு சீரியல் எடுக்கிறோம்னு டைரக்டர் பிரவீன் சார் எனக்கு ஃபோன் பண்ணாங்க. இதுக்கு முன்னாடி நான் நடிச்சதே இல்ல.. எப்படி சாத்தியம்னு கொஞ்சம் யோசிச்சேன். பிரவீன் சார் தான் எனக்குள்ள ஒரு நம்பிக்கை கொடுத்தார். என்னால முடியும்னு என்னை விட அவர் நம்பினார். அவர் சொல்லிக் கொடுக்கிறதை ஸ்கிரீன்ல வெளிப்படுத்துறேன்" என்றவரிடம் ஃபேமிலி சப்போர்ட் குறித்து கேட்டோம்.

"ஆரம்பத்தில் ஐடியில் வேலை பார்த்தப்போ எனக்குன்னு ஒரு நிரந்தரமான சம்பளம் கிடைச்சது. மாடலிங்ன்னு வர்றப்போ அப்படி நிரந்தர சம்பளம் எதுவும் கிடைக்காதுன்னு ஆரம்பத்தில் திட்டினாங்க. சீரியலுக்குள்ளே என்ட்ரி ஆனப்பவும் அவங்க கொஞ்சம் யோசிச்சாங்க. எங்க ஃபேமிலியில் யாரும் மீடியா ஃபீல்டில் இல்லை. அதனால அவங்களுக்குள்ளே ஒரு வித பயம் இருந்துச்சு. இப்போ நான் பண்றதை பார்த்துட்டு சரி, நம்ம பொண்ணு சூப்பரா பண்றான்னு மனசு மாறிட்டாங்க.

நான் படிச்சது ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல். அங்கே என்னுடைய நிறத்தினால் நிறைய விஷயங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அதே மாதிரி காலேஜிலும் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்திச்சிருக்கேன். நாம கறுப்பா இருக்கோம்னே மனசளவுல நானே டவுணா ஃபீல் பண்ணியிருக்கேன். நான் கலரா இல்லைங்குறதை விட நாம அழகா இல்லைங்குற உணர்வு எனக்குள்ளே இருந்துச்சு. காலேஜ் விட்டு வெளி உலகத்துக்கு வரும்போது என்னை நானே மாத்திக்க ஆரம்பிச்சேன். இந்த கலரும் அழகுதான்! நாமளும் அழகாதான் இருக்கோம்னு நினைக்க ஆரம்பிச்சேன். கலரை விட மனசுதான் முக்கியம்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன். டஸ்க்கியா இருக்கேன்னு மாடலிங்கில் கூட ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. ஆனா, அதை நான் நெகட்டிவா எடுத்துக்கிட்டதில்லை. 

வெள்ளையா அழகா இருக்கிற பொண்ணுங்கன்னா கலர்ஃபுல்லான டிரெஸ்ஸைப் போட்டா சூப்பரா தெரிவாங்க. டஸ்க்கி ஸ்கின் இருக்கிறவங்க நகைகள் போட்டாங்கன்னா நகைகள் பிரைட்டா தெரியும். அந்த மாதிரியான நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம்தான் எல்லாத்தையும் கடந்து வந்தேன். இப்போ என் ஸ்கின்தான் எனக்கு ஹிரோயின் என்கிற அடையாளத்தைக் கொடுத்திருக்கு" என்றவரிடம் பாரதி கண்ணம்மா சீரியல் குறித்துக் கேட்டோம்.

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ என் ஸ்கின்னால இப்படியொரு நல்ல இடத்துல நான் நிற்கிறேன். அப்போ அது என் குறையில்லை. இப்போ எங்கே போனாலும் கொஞ்சம் அதிக கலரா மேக்கப் பண்ணாங்கன்னா இல்லை வேண்டாம் இதே ஸ்கின் டோன் இருக்கட்டும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். நீளமான முடி வைச்சிருக்கிறது ஒரு சிலரோட அடையாளம்னு சொல்லுவாங்களே அதே மாதிரி இந்த டஸ்க்கி ஸ்கின் என்னுடைய அடையாளம்னு நினைக்கிறேன். இதைக் குறையா நினைக்காமல் கொண்டாட ஆரம்பிச்சிருக்கேன்.

டார்க் ஷேடில் நிறைய ஷேட் இருக்கு. டஸ்க்கியில் என்னுடைய ஷேட் வேற. டார்க் மேக்கப்பில் ஒரு ஷேட் கம்மியாக போட்டு மேக்கப் பண்றேன். நிறையப் பேர் இந்த சீரியலில் நான் மேக்கப் போட்டு நடிக்கிறேன்னு நினைக்கிறாங்க. இது என்னுடைய ரியல் ஸ்கின் டோன்தான். ஆனா, என் ஸ்கின் டோன்ல ஒரு ஷேட் கம்மியா டார்க் கலர் போடுறேன் அவ்வளவு தான்! 

டைரக்டர் சார் ரொம்பவே ஜாலி டைப். எப்படி நடிக்கணும்னு அவர்தான் சொல்லிக் கொடுத்தார். கூட ஒர்க் பண்ற ஆர்ட்டிஸ்ட்டும் பயங்கரமா குளோஸ் ஆகிட்டோம். அவங்க கூட ஒர்க் பண்றது ரொம்ப பிடிச்சிருக்கு. சீரியல் ரிலீஸானதும் பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் வந்துச்சு. டைரக்டா ஆடியன்ஸ் கூட கனெக்ட் ஆகிட்டேன்னு நினைக்கிறேன். நிறையப் பேர் 'கண்ணம்மா'ன்னுதான் கூப்டுறாங்க.

இப்போ மாடலிங், சீரியல்னு போயிட்டு இருக்கேன். 'பாரதி கண்ணம்மா' சீரியலில் எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கணும். நல்லா நடிக்கணும் அதுதான் இப்போதைக்கு என் இலக்கு" என்கிறார், டஸ்க்கி ஸ்கின் நாயகி ரோஷினி.

அடுத்த கட்டுரைக்கு