Published:Updated:

" 'வட போச்சே' டீம்னால என் வாழ்க்கையே போயிருக்கும்!" - ப்ராங் ஷோ தடையை ஆதரிக்கும் ராணி

" 'வட போச்சே' டீம்னால என் வாழ்க்கையே போயிருக்கும்!" - ப்ராங் ஷோ தடையை ஆதரிக்கும் ராணி
News
" 'வட போச்சே' டீம்னால என் வாழ்க்கையே போயிருக்கும்!" - ப்ராங் ஷோ தடையை ஆதரிக்கும் ராணி

`பிரான்க் ஷோ’வுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதனால் மோசமான அனுபவத்தைச் சந்தித்தது குறித்து டிவி நடிகை ராணி பேசியிருக்கிறார்.

'ப்ரான்க் ஷோ'க்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு அளித்திருக்கும் சூழலில், சில வருடங்களுக்கு முன் அப்படியொரு ’ப்ரான்க் ஷோ’வால் மோசமான அனுபவத்தைச் சந்தித்த சீரியல் வில்லி நடிகை ராணியிடம் பேசினேன்.

"நான் நடிச்சுக்கிட்டிருந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்லதான் நடந்தது அந்தத் துயரமான சம்பவம். வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தது அந்த ஷூட்டிங் ஸ்பாட். அதனால, லன்ச்சுக்கு வீட்டுக்குப் போயிட்டு ஷூட்டிங் திரும்பிக்கிட்டிருந்தேன். அங்கே, 'வட போச்சே' டீம் ப்ராங்க் பண்ணத் தயாரா இருந்திருக்காங்க. சீரியல் டைரக்டர்கிட்ட அனுமதி வாங்கிட்டுத்தான் வந்திருக்காங்க. என்னைத் தவிர எல்லோருக்கும் என்கிட்ட ஃபன் பண்ணப்போற விஷயம் தெரியும். கரெக்டா நான் ஸ்பாட்டுக்கு வந்ததும், ஒருத்தர் பக்கத்துல வந்து, ‘நான் உங்க ஃபேன்.. ஆட்டோகிராப் வேணும்’னு சொன்னார். குடிச்சிருக்கிற ஆள் மாதிரி ஒரு தோற்றம். டைரக்டரும் 'அப்போயிருந்து இருக்கார் மேடம், கையெழுத்தைப் போட்டு அனுப்புங்க’னு சொன்னார். ’சரி’ன்னு ‘ஆட்டோகிராப்’ போட்டேன். பிறகு, ‘போட்டோ எடுக்கணும்’னு சொன்னார். அதுக்கும் சரின்னு சொல்லி எடுக்கப்போனா, உரசிக்கிட்டு வந்து நின்னார். போட்டோ எடுத்த பிறகும் போகல அவர். 'உங்களுக்கு என்னதான் வேணும்’னு கேட்டா, ‘நீதான் வேணும்’னு சொன்னார். எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. அந்த செகண்ட்கூட, யாரும் 'இது டிவி-க்கான ஃபன் ஷோ’ன்னு சொல்லலை. எனக்கும் சத்தியமா அப்படியொரு ஷோ ஒளிபரப்பாகிட்டிருந்த விஷயமும் தெரியாது.

தொடர்ந்து அந்த ஆள் ஒரு மாதிரியா பேசி காதுக்குப் பக்கதுல வந்து சத்தமா கத்தினார். அந்தச் சத்தத்துல என் காது என்னமோ ஆன மாதிரி இருக்க, நான் பயத்துல கத்திட்டேன். அதுக்குப் பிறகுதான், ‘அது ஜாலி ஷோ’னு சொன்னாங்க. அவங்க ஈஸியா சொல்லிட்டாங்க. ஆனா, என் காது ரிப்பேர் ஆனது ஆனதுதான். காதுக்குள்ள இரைச்சல் நின்னபாடில்லை. உடனே ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனேன். ரெண்டு நாள் இருந்தும் அங்கே குணமாகல. பிறகு, அப்போலோவுல அட்மிட் ஆகித்தான் சரியாச்சு. காதுப் பிரச்னை ஒருபக்கம்னா, திடீர்னு பயந்ததுனால ரெண்டுநாளா பேசவும் வரல. குளறிக் குளறிப் பேசினேன். ‘வட போச்சே’ டீம்னால என் வாழ்க்கையே போயிடுமோனு ஒருவித அழுத்தத்திலேயே 4 நாள் கழிஞ்சது. கடவுள் புண்ணியத்துல எல்லாப் பிரச்னையும் சரியாகிடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனாலும், அந்த டீம்மேல எனக்குக் கோபம் அப்படியே இருந்ததுனால, சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இந்தப் பிரச்னையை எடுத்துட்டுப் போனேன். தலைவரா இருந்த ராஜேந்திரன் சார் சேனல் வரைக்கும் பேசினார். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பு தரப்புல இருந்து மன்னிப்புக் கடிதம் அனுப்புனாங்க. சிகிச்சைக்கான மருத்துவச் செலவையும் ஏத்துக்கிட்டாங்க. கூடவே, என்னை வச்சு எடுத்த காட்சிகளை ஒளிபரப்பாமலும் நிறுத்திட்டாங்க.

அந்த ஷோ அதுக்குப் பிறகு ஒளிபரப்பாச்சானு எனக்குத் தெரியல. ஆனா, என்னைப் பொறுத்தவரை அது மோசமான அனுபவமே. அதனால இந்த மாதிரி ஷோக்களை ஒளிபரப்பக் கூடாதுனு தீர்ப்பு வந்திருக்கிறதை நானும் ஆதரிக்கிறேன். 'ஃபன்’பண்றதுதான், ஆனாலும் எல்லோரும் எல்லா நேரமும் ஒரேமாதிரி மனநிலையில இருக்க மாட்டாங்க. மன அழுத்தத்துல இருக்கிற ஒருவர்கிட்ட திடீர்னு போய் ஏதாவது காமெடி கீமெடி பண்ணினா, அவங்க எரிச்சலாகி, மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். அது அவங்க உடல்நிலையையும் பாதிச்சு, நடக்கக் கூடாத அசம்பாவிதம் ஏதாச்சும் நடந்ததுன்னா... யாருங்க பொறுப்பு? அதனால, நீதிமன்றம் ரொம்பவே ஒரு நல்ல உத்தரவைப் பிறப்பிச்சிருக்கு அப்டீங்கிறதுதான் என் கருத்து" என முடிக்கிறார் ராணி.