Published:Updated:

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

தார்மிக் லீ

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் : அத்தியாயம் - 9

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9
``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

டந்த அத்தியாயத்தில் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மூன்றாவது சீஸனின் பாதி வரை பார்த்திருந்தோம். ஜோஃப்ரி பராத்தியன் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதையடுத்து, இதற்குக் காரணம் டிரியன் லானிஸ்டர்தான் என்று அவரைச் சிறையில் அடைத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து முழு அதிகாரமும் டைவின் லானிஸ்டரிடம் சென்றுவிடும். தனது அதிகார பலத்தைக்காட்ட டிரியனை சிறையில் அடைத்து, அவருக்கு மரண தண்டனை கொடுக்கவும் திட்டமிட்டிருப்பார். பேச்சில் கில்லியான டிரியன், உணர்ச்சி பொங்கப் பேசி தன்னை நிரபராதியாக முன்னிறுத்திக்கொள்ள, `Trail by combat' கேட்டிருப்பார். அதைத் தொடர்ந்து நான்காவது சீஸனில் நடந்ததை முழுமையாக இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்! 

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

அரசர், அரசரின் ஆலோசகர்கள், தீர்ப்பளிக்கும் நடுவர்கள் என டிரியனைச் சுற்றி கிங்ஸ் லேண்டிங்கின் ஆளுமைகள் அனைவரும் அமர்ந்திருப்பார்கள். இவையனைத்தும் டிரியன் எதிர்பார்த்ததுதான். ஆனால், அவர் எதிர்பார்க்காதது, தான் காதலித்த ஷே தனக்கு அவருக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்ல வந்து நின்றது. ஒட்டுமொத்தக் கோபத்தையும் அவரால் சண்டையிட்டுக் காட்ட முடியாது என்று எண்ணிய டிரியன், தன் சாதுர்யமான பேச்சால் `டிரையல் பை காம்பட்' கோரிக்கையை முன் வைத்திருப்பார். டிரியன் அவர் சார்பாக ஜேமி லானிஸ்டரை சண்டையிடும்படி கேட்பார். `எனக்கிருக்கும் ஒரு கையை வைத்து நான் எப்படி சண்டையிடுவது' என ஒதுங்கிவிடுவார், ஜேமி. ஆனால், செர்சி லானிஸ்டர், டிரியனைத் தீர்த்துக்கட்ட கிங்ஸ் லேண்டிங்கின் அசைக்கமுடியா வீரனான `தி மவுன்டயின்' என்று அழைக்கப்படும் க்ரிகோர் க்ளிகேனைத் தயார்படுத்திக்கொண்டிருப்பார். ஆர்யா ஸ்டார்க்குடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் சாண்டோர் க்ளிகேனுடைய அண்ணன்தான், க்ரிகோர் க்ளிகேன். டிரியனுக்கு உதவவும், தன் பலியைத் தீர்த்துக்கொள்ளவும் ஓபரின் மார்டெல் டிரியனுக்காகச் சண்டையிட ஒப்புக்கொள்வார். இதற்குப் பின் நடந்ததைப் பிறகு பார்க்கலாம்.

சான்ஸா ஸ்டார்க், ஆர்யாவுக்கு முன்பே லைஸா டல்லியின் இருப்பிடமான ரிவர்ரனிற்குப் பீட்டர் பெய்லிஷோடு வந்திருப்பார். பீட்டர் பெய்லிஷ் எந்தளவுக்குச் சுயநலவாதி என்று சொல்கிறேன். பீட்டர் பெய்லிஷைக் கண்மூடித்தனமாகக் காதலிப்பார், லைஸா டல்லி. அதேசமயம் லைஸாவின் சகோதரியான கேட்டலின் ஸ்டார்க்கையும் பீட்டர் பெய்லிஷ் காதலித்திருப்பார். தன் காரியம் முடிந்த பிறகு அவர்களை ஒதுக்கி வைப்பதுதான், பெய்லிஷின் ஸ்டைல். சான்ஸா மேல் இருக்கும் பொறாமையில் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து, பீட்டர் பெய்லிஷிடம் அழுது புலம்பிக்கொண்டிருப்பார், லைஸா டல்லி. அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் பீட்டர் பெய்லிஷ், லைஸா டல்லியை அங்கேயே கொன்றுவிடுவார். இது சான்ஸாவுக்கும் தெரியும். ரிவர்ரன்னின் சில முக்கியப் புள்ளிகள் லைஸாவின் இறப்பு குறித்து பீட்டர் பெய்லிஷிடம் விசாரிக்கும்போது, `இது தற்கொலைதான்' எனச் சாதுர்யமாகப் பேசி நம்பவைத்துவிடுவார். 

சாண்டோர் க்ளிகேனின் உதவியோடு தனது அத்தை லைஸா டல்லியின் இருப்பிடம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருப்பார், ஆர்யா ஸ்டார்க். வழியில் அவருக்குச் சில வாள் பயிற்சிகளும், சண்டைப் பயிற்சிகளும் கொடுத்துக்கொண்டே வருவார், சாண்டோர் க்ளிகேன். மேலும், கிங்ஸ் லேண்டிங் பற்றியும், தனது சகோதரர் க்ரிகோர் க்ளிகேன் பற்றியும் சொல்லிக்கொண்டே  வருவார். சாண்டோரை ஆர்யாவுக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அவர் கொடுக்கும் பயிற்சிகளைச் செய்துகொண்டும், சொல்லும் விஷயங்களையெல்லாம் கேட்டுக்கொண்டும் வருவார், ஆர்யா. ஒருவழியாகத் தனது அத்தையின் இருப்பிடத்தை இருவரும் அடைந்துவிடுவார்கள். அப்போதுதான் அவரது அத்தை இறந்த செய்தி இவர்களுக்குத் தெரியவரும். தனக்கிருந்த இரண்டாவது வாய்ப்பும் கை நழுவிவிட்டதே என அங்கிருந்து இருவரும் கிளம்பிடுவார்கள். ஆனால், சான்ஸா ஸ்டார்க் பீட்டர் பெய்லிஷின் கட்டுப்பாட்டில் அங்குதான் இருக்கிறார் என்பது ஆர்யாவுக்குத் தெரியாது. காரணம், `வேல் ஆஃப் ஆர்ரின்' வீரர்கள் இவர்களை வாசலோடு அனுப்பி வைத்துவிடுவார்கள். 

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

ராம்சே போல்டனிடம் அடைபட்டுக்கிடக்கும் தியோன் க்ரேஜாய்யைக் காப்பாற்ற, அவரது சகோதரி யாரா க்ரேஜாய் போல்டனின் இருப்பிடமான டிரெட்ஃபோர்ட் நோக்கி வந்திருப்பார். நாய்களுடன் தூங்கிக்கொண்டிருக்கும் தியோனை விடுவித்து, தன்னுடன் அழைத்துச் செல்லும்போது யாராவுடன் வர மறுத்துவிடுவார், தியோன். அந்தளவிற்குத் தியோனை அடிமைப்படுத்தியும், பயமுறுத்தியும் வைத்திருப்பார், ராம்சே போல்டன். `என் தம்பி தியோன் க்ரேஜாய் இறந்துவிட்டான்' என மனதில் நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிடுவார், யாரா க்ரேஜாய். பிறகு போல்டனின் இருப்பிடமான டிரெட்ஃபோர்டை எதிர்த்து க்ரேக்கன்ஸ் என்பவர்கள் சண்டையிட வருவார்கள். தியோன் க்ரேஜாய்யைப் பயன்படுத்தி அந்தப் போரில் வென்றுவிடுவார், ராம்சே போல்டன். ரூஸ் போல்டனின் பாஸ்டர்ட்தான், ராம்சே போல்டன். போரில் வென்ற அவரைப் பாராட்டும் வகையில் அவரைத் தன் வாரிசாக ஒப்புக்கொள்வார், ரூஸ் போல்டன். 

எஸ்ஸோஸில், மரீன் எனும் ஊரில் இருக்கும் அடிமைகளை விடுதலை செய்ததையடுத்து, அந்த ஊரையே ஆட்சி செய்துகொண்டிருப்பார், டினேரியஸ். அரியணையில் அமர்ந்த பிறகு தன் டிராகன்கள் அங்கிருக்கும் பயிர்களை நாசம் செய்து, அங்கு மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளையெல்லாம் எரித்துத் தின்றுவிடும். இந்தக் குற்றச்சாட்டை டினேரியஸிடம் முன் வைப்பார்கள் ஊர் மக்கள். `ஒரு நாட்டை  கைப்பற்றி வெல்வதைவிட, ஆட்சி செய்வது ரொம்பவே கஷ்டம்' என்பதை அப்போது உணர்வார். பின் சில ராஜ யுக்திகளைக் கையாள முயற்சி செய்யும் டினேரியஸ், அவரது ஆலோசகர் சர் ஜோரா மோர்மன்டைப் பராத்தியர்களைப் பற்றின துப்புகளைத் தனக்காகக் கொடுக்க ஒற்றனாக அனுப்பி வைப்பார். இதில் துளிகூட விருப்பமில்லாத ஜோரா, டினேரியஸிடம் இந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மன்றாடுவார். எதையும் பொருட்படுத்தாமல் சொன்னதைச் செய்யச் சொல்வார், டினேரியஸ். இறுக்கமான இதயத்துடன் அங்கிருந்து கிளம்பிடுவார், ஜோரா மோர்மன்ட். 

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

வெஸ்டிரோஸிலும் எஸ்ஸோஸிலும் நடந்ததைப் பார்த்துவிட்டோம். இப்போது காஸ்டில் ப்ளாகிற்கு மீண்டும் திரும்பியிருக்கும் ஜான் ஸ்நோவைப் பார்க்க வருவோம். ஒருபக்கம் ஜான் ஸ்நோ, ஒயில்டுலிங்ஸைப் பற்றி அங்கு முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களிடம் எச்சரித்துக்கொண்டிருப்பார். சிலர் ஜான் ஸ்நோவுக்கு ஆதரவாக இருந்தாலும், பலரும் அவருக்கு எதிராகத்தான் நிற்பார்கள். அதில் முக்கியமானவர், ஆலிஸ்டர் தோர்ன். இவர் ஜான் ஸ்நோவை முழுக்கவே வெறுக்கக்கூடியவர். அதுவும் நைட்ஸ் வாட்சின் தலைவன் ஜியோர் மோர்மன்ட் இறப்புக்குப் பிறகு முழுப் பொறுப்பும் ஆலிஸ்டரிடம் சென்றுவிடும். 

மறுபக்கம் ஒயில்டுலிங்ஸ் முழுவீச்சோடு நைட்ஸ் வாட்ச்சின் இருப்பிடமான காஸ்டில் ப்ளாக்கை அடியோடு அழிக்கத் தன் படையை திரட்டிக்கொண்டு லட்சக்கணக்கான வீரர்களோடு அந்த 700 அடி சுவர் முன்பு வந்து நிற்கும். படையில் குறைவென்றாலும், நைட்ஸ் வாட்சின் மிகப்பெரிய பலம் அந்த 700 அடி சுவர்! அதைத் தாண்டி வருவது ரொம்பவே கடினம். இருப்பினும் ஒயில்டுலிங்ஸ் அவர்களிடம் இருக்கும் அரக்கர்களை இறக்கி சுவரைத் தரைமட்டமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கும். இன்னொரு பக்கம் ஒயில்டுலிங்ஸின் போர் வீரர்கள் காஸ்டில் ப்ளாக்கிற்கு உள்ளே நுழைந்துவிடுவார்கள். ரத்தம் தெறித்து, வாள் வீச்சு சத்தத்துடன் நடக்கும் அந்தச் சண்டையில் இருபக்கமும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஒயில்டுலிங்ஸ் மெல்ல தோல்வியைத் தழுவ ஆரம்பித்திருக்கும். அப்போது நடக்கும் ஒரு விபத்தால், ஜான் ஸ்நோவின் காதலி இக்ரிட் இறந்துவிடுவார். வெற்றியைக் கொண்டாடுவதா, இக்ரிட்டுக்காக அழுவதா என்று தெரியாமல் ஒயில்டுலிங்ஸின் தலைவனான மேன்ஸ் ரைடரைப் பார்க்க அவரது இருப்பிடம் நோக்கித் தனியாக சந்திக்கச் செல்வார். அப்போது, ஒயிட்வாக்கர்கள் இருப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும். திடீரென ஒயில்டுலிங்ஸை நோக்கி ஒரு படை வந்துகொண்டிருக்கும். அது, ஸ்டானிஸ் பராத்தியனுடையது. எல்லோரும் கைக்கோத்தால்தான் ஒயிட்வாக்கர்களை அழிக்க முடியும் என்றும், தனது தந்தை நெட் ஸ்டார்க்கைப் பற்றியும் ஸ்டானிஸ் பராத்தியனிடம் சொல்லி, மேன்ஸ் ரைடரை உயிரோடு விடச் சொல்வார். அதன்பின், ஒயில்டுலிங்ஸோடு சண்டையிடாமல் இருவரும் சுமுகமாகிவிடுவார்கள். அப்போது, தனது கண்ணில்படும் ஜான் ஸ்நோவை வியந்து பார்த்துக்கொண்டிருப்பார், மெலிஸாண்ட்ரே. இதற்குப் பின்னால் இருக்கும் தொடர்பை அடுத்தடுத்த எபிசோடுகளில் சொல்லப்படுவதற்கான காட்சியமைப்பு அது!

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

இறுதியாக, `Trail by Combat'க்கு வருவோம். டிரியனின் சார்பாக ஓபரின் மார்டெல்லும், அரசர் சார்பாக க்ரிகோர் க்ளிகேனும் சண்டைக்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். திறமையுடன் சண்டையிடும் ஓபரின் மார்டெல், க்ரிகோர் க்ளிகேனை அடித்துத் துவம்சம் செய்துவிடுவார். ஜெயிக்கும் தருவாயில் ஓபரின் செய்யும் ஒரு சிறு தவறால், சூழல்நிலையைத் தனக்குச் சாதமாக மாற்றிக்கொள்வார், க்ரிகோர் க்ளிகேன். துவண்டுகிடக்கும் க்ரிகோர் க்ளிகேன், ஒரே அடியில் ஓபரினைச் சாய்த்து, அவர் தலையை நசுக்கியே பிய்த்துவிடுவார். மறுநாள் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார், டிரியன். லானிஸ்டர் குடும்பத்தில் டிரியனைப் பிடித்த ஒரேஆள் ஜேமி லானிஸ்டர் மட்டும்தான். இதனால், இரவோடு இரவாக டிரியனைத் தப்பிக்க வைக்க ரகசியமாகச் சிறையைத் திறந்துவிடுவார், ஜேமி. கிங்ஸ் லேண்டிங்கிலிருந்து தப்புவதற்கு முன், தனது தந்தை டைவின் லானிஸ்டரைப் பார்வையிட அவரது அறை நோக்கிச் செல்வார், டிரியன். டைவின் லானிஸ்டரின் படுக்கையில் டிரியன் காதலித்த ஷே ஆடையின்றி ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார். தான் முட்டாளானதை உணர்ந்த டிரியன், ஷேவின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவார். பின் அங்கிருக்கும் வில், அம்பை எடுத்துக்கொண்டு தந்தையைப் பார்க்கச் செல்வார். 

கழிப்பறையில் இருக்கும் டைவினுக்கும், டிரியனுக்கும் இடையேயான உரையாடலைத் தனியாகப் பார்ப்போம்.

டைவின் : ``கையிலிருக்கும் வில்லை கீழே போடு. எதுவாக இருந்தாலும் என் இடத்திற்குச் சென்று பேசலாம்!"

டிரியன் : ``ஜோஃப்ரியை நான் கொல்லவில்லையென்று உங்களுக்கே தெரியும். பின் ஏன் எனக்கு மரண தண்டனை கொடுத்தீர்கள்... அதுமட்டுமன்றி, எதற்காக நான் காதலித்த ஷேவை இப்படிச் செய்தீர்கள்?"

டைவின் : ``என்ன இருந்தாலும் அவள் ஒரு Whore தானே?"

டிரியன் : ``இன்னொரு முறை அவளை அப்படிச் சொல்லாதே, உன்னைக் கொன்றுவிடுவேன்!"

டைவின் : ``அந்த Whore-க்காக என்னைக் கொல்வாயா...?" எனச் சொல்லி முடிப்பதற்குள், டிரியனின் கையில் இருக்கும் வில்லிலிருந்து பாய்ந்த அம்பு, டைவினின் இதயத்தில் செருகியிருக்கும். டைவின் அடுத்தது பேச வருவதற்குள் அடுத்த அம்பை அவர் மீது செருகி அவரைக் கொன்றுவிடுவார், டிரியன். இதற்குப் பின் அரசரின் ஆலோசகர் வேரிஸின் உதவியோடு கிங்ஸ் லேண்டிங்கிலிருந்து தப்பிவிடுவார்.

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

இதற்கு நடுவே டினேரியஸின் டிராகன்கள் ஆடுகளைக் கொன்றதோடு, ஒருவருடைய குழந்தையையும் கொன்றுவிடும். அதிகமாக செல்லம் கொடுத்ததால் இப்படி ஆகிவிட்டது என நினைக்கும் டினேரியஸ், கனத்த இதயத்துடன் இரண்டு டிராகன்களையும் சிறையில் அடைத்துவிடுவார். வெஸ்டிரோஸில் ப்ரான், ஜோஜன், மீரா, ஹோடோர் ஒரு வழியாக அவரது இலக்கை அடைந்துவிடுவார்கள். தனது கனவில் அடிக்கடி வரும் ஒரு மரத்தைப் பார்த்தபின், `இதுதான் நம்முடைய இலக்கு' என்று மற்றவர்களிடம் சொல்வார், ப்ரான். அப்போது சில ஒயிட்வாக்கர்களிடம் இவர்கள் மாட்டிக்கொள்வார்கள். சண்டையிடும் முயற்சியில் அவர்களுடன் பயணித்த ஜோஜன் ரீடு இறந்துவிடுவார். மற்றவர்களும் ஒயிட்வாக்கர்களுக்கு இறையாகிவிடுவோம் என்று நினைக்கும் நேரத்தில், அங்கிருக்கும் அடையாளம் தெரியாத ஒரு குழந்தை இவர்களைக் காப்பாற்றி, கனவில் பார்த்த அந்த மரப் பொந்துக்குள் அழைத்துச் சென்றுவிடும். தன் கனவில் அடிக்கடி பார்க்கும் Three eyed raven-ஐ மனித வடிவில் அங்கு பார்ப்பார், ப்ரான். `என்னைப்போல் நீயும் ஒரு `Three eyed raven'தான். உனக்கு சில மாய தந்திரங்களைச் சொல்லித் தருகிறேன்' என்று ப்ரானிடம் அவர் சொல்வார்.

ஆர்யாவுடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் சாண்டோருக்கும், அந்தப் பக்கமாக வந்திருக்கும் பிரையின் டார்த்துக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்படும். அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆர்யா, போக இடமில்லாமல் ப்ராவோஸ் நோக்கிச் சென்று அங்கிருக்கும் ஒரு கப்பலில் ஏறுவார். `Faceless men' இயக்கத்தைச் சேர்ந்த ஜேக்கனைச் சந்திக்கப்போகிறார் என்பது, பிறகுதான் தெரியும். 

``அந்த 700 அடி சுவர் என்ன ஆனது?! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம்" - அத்தியாயம் 9

தனது தந்தையைக் கொன்ற டிரியன் எங்கே செல்லவிருக்கிறார், ஜோஃப்ரியும், டைவினும் இறந்தபிறகு புதிய மன்னராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோமன் என்ன செய்யவிருக்கிறார், ஒயில்டுலிங்ஸிடமிருந்து நைட்ஸ் வாட்ச்சைக் காப்பாற்றிய ஸ்டானிஸ் அடுத்ததாக என்ன செய்யவிருக்கிறார், ஸ்டார்க் குடும்பத்தை மொத்தமாக அழித்துவிட்டதாக எண்ணி, வட பகுதியை முழுக்க ஆள நினைக்கும் ரூஸ் போல்டனும், ராம்சே போல்டனும் என்ன செய்யவிருக்கிறார்கள், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சான்ஸாவை பீட்டர் பெய்லிஷ் என்ன செய்கிறார், வெஸ்டிரோஸை விட்டுத் தொலைதூரம் பயணிக்கும் ஆர்யா ஸ்டார்க்கின் திட்டம் என்ன... என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்!

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...

தார்மிக் லீ