Published:Updated:

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones
ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

இங்கு பலரும் தேடிக்கொண்டிருக்கும் கேள்விதான் அவனுக்குள்ளும் இருந்தது - நான் யார்? `நான் ஸ்டார்க்கா இல்லை கிரேஜாயா?' என்ற அவனது கேள்வி கேம் ஆஃப் த்ரோன்ஸ் முதல் சீசனிலிருந்தே தொடர்கிறது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் ஊடே, பலரின் ரத்தத்தையும் உறைய வைக்க வந்துகொண்டிருக்கிறது வெஸ்டரோஸின் பனி. வின்டர் இஸ் கம்மிங்! கேம் ஆஃப் த்ரோன்ஸ், இன்னும் ஒருசில நாள்களில் மிரட்டப்போகிறது. பெரும் போரின் முடிவுக்காக எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த 7 சீஸன்களில் போகிற போக்கில் பலரையும் கொன்று குவித்த இதன் படைப்பாளிகள், இப்போது யாரையெல்லாம் காவு வாங்கப்போகிறார்கள் என்ற விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. ஜான் ஸ்னோ, ஆர்யா ஸ்டார்க், டெனேரிஸ் ஆர்மிகள் இணையத்தில் பிசியாக இயங்கத் தொடங்கிவிட்டன. #GameofThrones

ஜான் ஸ்னோ, அந்த அயர்ன் த்ரோனில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் பலர். ஆர்யா ஸ்டார்க் வின்டர்ஃபெல் கோட்டையை ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் சிலர். கேஸ்டர்லி ராக், டிரியன் வசம் வர வேண்டும், வைட் வாக்கர்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஆசை. இந்த ஆறு எபிசோட்களின் முடிவில், தங்கள் விருப்பக் கதாபாத்திரம் வெற்றியடைந்திருக்க வேண்டும் என்ற ஆசைதான் எல்லோருக்கும். எனக்கு மட்டும், இந்த கதாபாத்திரங்களையெல்லாம் தாண்டி, ரீக்கின் வெற்றி பிரதானமாகப்படுகிறது. ஆம், தியான் கிரேஜாய்! 

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

ஒரு பார்வையாளன், தன்னோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும்போதுதான், அந்தக் கதாபாத்திரம் அவனுள் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது. ஜான், ஆர்யா, ஜேமி, டெனேரிஸ் போன்ற கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியானவை. ஆனால், 21-ம் நூற்றாண்டில் சராசரி வாழ்க்கை வாழும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத வாழ்க்கை அவர்களுடையது. ஆனால், டிரியன் லேனிஸ்டர், சான்சா ஸ்டார்க், தியான் கிரேஜாய் போன்ற கதாபாத்திரங்கள் ஏதொவொரு வகையில், சிலருக்குத் தாக்கம் ஏற்படுத்தும்.

தன் உடலின் குறைபாட்டை அனைவரும் கேலி செய்யும்போது, தன் குடும்பம்கூட வெறுக்கும்போது, உடன்பிறந்தவள் தன்மீது கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தும்போது, தன் குடும்பத்தின் அடையாளத்தால் தன்னுடைய குணங்கள் மறைக்கப்படும்போது, நிச்சயம் டிரியன் லேனிஸ்டர் அங்கு தெரிவான். உலகம் பற்றிய புரிதல் இல்லாமல் வளரும் பெண்ணை, அவளைச் சுற்றியுள்ள சமூகம் எப்படியெல்லாம் பயன்படுத்தும், இந்தச் சமூகத்தின்மேல் அவள் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மீது, அவள் அறியாமையையே அரியாசனமாக்கி அமர்ந்து, அவளையே எப்படி ஆட்டுவிக்கும் என்பதற்கு, சான்சா மிகப்பெரிய உதாரணம். ஆனால் தியான் - கிட்டத்தட்ட எல்லோருக்குள்ளுமே இருப்பவன். அவன் தன்னை நிரூபிக்க வேண்டி தவித்தவன், குற்றங்கள் செய்தவன், அதற்காக வருந்தி உருகியவன்... சாதாரண மனிதனைப்போல்!

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

பலரும் தியானை வெறுக்கலாம். அதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன. நிறையவே துரோகம் செய்திருக்கிறான். ராப் ஸ்டார்க், சான்சா, தன் அக்கா யாரா என நம்பிய ஒவ்வொருவரையும் ஏமாற்றியிருக்கிறான். அவன் மோசமானவன்தான். ஆனால், அதற்காக அவன் ஒதுக்கப்பட வேண்டியவன் இல்லை. சொல்லப்போனால், இங்கு யாருமே முழுமையான நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லையே! ஒவ்வொரு கதாபாத்திரமுமே இரண்டு குணங்களையும் பெற்றவைதான். ஒவ்வொரு வெள்ளைத் தாளிலும், ஒரு கறுப்புப் புள்ளி நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு இருண்ட அறையிலும், ஒளியின் கீற்று வெளிச்சம் பாய்ச்சும். தியானுக்குள்ளும் ஒரு வெளிச்சம் இருந்தது. இருக்கிறது. 

100 சதவிகிதம் மோசமானவர்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மற்றொரு தரப்பினர் இல்லவே இல்லை! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில கறுப்புப் பக்கங்கள் இருக்கவே செய்கின்றன. சிலரின் தவறுகள், பகலில் விழும் நிழல்போல் சுருங்கியிருக்கின்றன. சிலருக்கு, இரவு நேர நிழல்போல் எல்லைகள் கடந்து செல்கின்றன. தவறுகளின் எண்ணிக்கையும், அளவும் மாறுமே ஒழிய, கொஞ்சமும் மாசில்லாதவர்கள் யாருமில்லை. நிழல் இல்லாதவர்கள் புவியில் நடமாடுவதில்லையே! 

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

தியானின் நிழல், அவனுக்குள் வீசிய ஒளியின்மீது படர்ந்து அதை மறைத்ததுதான் பிரச்னை. இங்கு பலரும் தேடிக்கொண்டிருக்கும் கேள்விதான் அவனுக்குள்ளும் இருந்தது - நான் யார்? `நான் ஸ்டார்க்கா இல்லை, கிரேஜாயா?' என்ற அவனது கேள்வி கேம் ஆஃப் த்ரோன்ஸ் முதல் சீஸனிலிருந்தே தொடர்கிறது. நெட் ஸ்டார்க்கை தந்தையாக ஏற்றுக்கொண்டவனிடம், `நீ ஸ்டார்க் இல்லை' என்று ராப் சொல்லும்போது எந்த ஏமாற்றமும் வெளிப்படவில்லை. ஆனால், `நீ கிரேஜாய் இல்லை' என்று அவனைப் பெற்ற தந்தை பேலன் கிரேஜாய் சொல்லும்போது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி முடியும்?

எந்த மகனுமே தன் வாழ்வின் மோசமான தருணமாகக் கருதுவது அதைத்தான். தன் தந்தையின் முன் எதற்கும் உதவாதவனாய் நிற்பதை எந்த ஆணும் விரும்பமாட்டான். ஆயிரம் பேர் எதிரில் நின்று `உன்னால் என்ன செய்ய முடியும்' என்று கேட்டாலும் ஒருவனால் சமாளித்துவிட முடியும். ஆனால், அதே கேள்வியை அவன் தந்தையிடமிருந்து அவனால் கேட்க முடியாது. அந்தத் தருணம், அவன், அதுவரை வாழ்ந்த மொத்த வாழ்க்கையையுமே வெறுத்துவிடுவான். அவனையுமே வெறுத்துவிடுவான். தியான் - தன் வின்டர்ஃபெல் வாழ்க்கையை, வின்டர்ஃபெல் கோட்டையை, அந்தக் கோட்டையில் வாழ்ந்தவர்களை வெறுக்கிறான். அவன் உள்ளத்தின் வழியே அந்த நிழல் படர்ந்து துரோகமாய் வெளியேறுகிறது. 

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

வலியைப்போல், நாம் செய்யும் தவறுகளை வேறு எதனாலும் சுட்டிக்காட்டிடமுடியாது. ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போதுதான், வாழ்க்கையில் நாம் செய்த தவறுகள் கண்முன் வந்து பாடம் எடுக்கும். தியானுக்கும் அப்படித்தான். போல்டன் படை வின்டர்ஃபெல் கோட்டையைச் சுற்றிவளைக்கும்போதுதான், தன் தவறுகளை உணரத் தொடங்குகிறான் தியான். ராம்ஸியின் சித்ரவதைகளில் சிதைபடும்போதுதான், அந்தத் தவறின் மொத்த விபரீதமும் அவனுக்குப் புரிகிறது. தன் உடல் பாகம் இழந்து, தான் அதுவரை கொண்டிருந்த கேள்வியையும் மறந்து, தான் வாழ்ந்த வின்டர்ஃபெல் கோட்டையில், தன் துரோகம் செய்த மக்களின் ரத்தத்துக்கே நடுவேதான் மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்கத் தொடங்குகிறான் - குற்றவுணர்வு!

காயத்தின் தழும்புகளை ஆற்றும் ஆற்றல் காலத்துக்கு உண்டு. காலப்போக்கில் எந்த வலியையும் சரிசெய்துவிடும். ஆனால், குற்றத்தின் கறைகளை அகற்றும் சக்தி அதனிடம் இல்லை. மனிதனால் தாங்கமுடியாத கொடுமை அதுதான். எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் செய்துவிட்டு, சலனமின்றி வாழ்ந்துவிட முடியும். ஆனால், தான் செய்தது தவறு என்று அந்த மனம் நினைக்கத் தொடங்கிவிட்டால், அதைக் காப்பாற்றுவது கடினம். ஒவ்வொரு கணமும் கண்முன் நின்று கேள்வி எழுப்பும். சந்தோஷம், துக்கம், அழுகை என மற்ற உணர்வுகளுக்கு இடையேவும் கிளம்பி வரும். தன்மீதான வெறுப்பையே அதிகரிக்கச் செய்யும்.

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

தன் துரோகத்தின் தாக்கத்தை உணர்ந்த நேரம், தியான் தன்னையே வெறுக்கிறான். தான் அந்த வாழ்க்கைக்குத் தகுதியானவன் இல்லை என நினைக்கிறான். ரீக்காக இருப்பதே சரியென்று கருதுகிறான். ஒருகட்டத்தில் சான்சாவிடம் ``I deserve to be Reek" என்றுகூடச் சொல்கிறான். தன் தந்தையிடம் தன்னை நிரூபிக்க எதையும் செய்யத் துணிந்த அதே மனதுதான், குற்றங்களை உணர்ந்து கூனிக்குறுகி நின்றது. மலையையும் அரித்திடும் குற்றத்தின் எச்சம் மனிதனை விட்டுவைக்குமா என்ன?!

அந்தக் குற்றத்தின் வடுவை ஓரளவேனும் சரிசெய்யும் வல்லமை மன்னிப்புக்கு மட்டுமே உண்டு. டிராகன்பிட்டில், ஜான் ஸ்னோ கண்கள் பார்க்க முடியாமல் தலைகவிழ்ந்து நின்றபோது, ``நீ கிரேஜாய்... நீ ஸ்டார்க்கும்கூட" என்று சொன்ன ஜானின் வார்த்தைகள் வழியாக, தன் உயிரைப் பணயம்வைத்து காப்பாற்றியபோது கட்டிப்பிடித்த சான்சாவின் நன்றியின் வாயிலாக, ராபிற்கு செய்த துரோகத்துக்கு மன்னிப்பு பெற்றுவிட்டான் தியான். ஆனால், இப்போது தன் அக்காவின் நம்பிக்கையைக் குலைத்த கறையைத் துடைக்கச் சென்றிருக்கிறான் தியான். 

ஜான், ஆர்யா, டெனேரிஸ் ஜெயிப்பது இருக்கட்டும்... தியான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் #GameofThrones

தன்னை, தன் அடையாளத்தை, தன் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நின்றபோது, தன் அக்காவின் கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்ததைப் பார்த்தும் தப்பியோடிய அவனுக்கு மன்னிப்பு எளிதாகக் கிடைத்துவிடப்போவதில்லை. தன் தந்தையைக் கொன்ற, யூரானைப் பழிதீர்த்து, அவன் பிடியில் இருக்கும் யாராவைக் காப்பாற்றும்போதுதான் அவனுடைய அந்தக் குற்றம் மன்னிக்கப்படும். இம்முறை, வெற்றிதான் அவனுக்கான மருந்து. ராஜாக்களும், ராணிகளும் ஒருபுறம் அரியணைக்காகவும் மறுபுறம் மனிதரின் வாழ்வுக்காகவும் நடத்தப்போகும் இந்தப் போராட்டத்துக்கு மத்தியில், தியானின் வெற்றி, வாழ்க்கையோடு போராடும் சராசரி மனிதனுக்கான வெற்றி! 

அடுத்த கட்டுரைக்கு