Published:Updated:

``கமாண்டர் ஜான் ஸ்நோ, கைதான செர்சி, வந்தான் நைட் கிங்!" - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' அத்தியாயம் 10

தார்மிக் லீ

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் : அத்தியாயம் 10

``கமாண்டர் ஜான் ஸ்நோ, கைதான செர்சி, வந்தான் நைட் கிங்!" - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' அத்தியாயம் 10
``கமாண்டர் ஜான் ஸ்நோ, கைதான செர்சி, வந்தான் நைட் கிங்!" - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' அத்தியாயம் 10

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியஸின் எட்டாவது சீஸன் ஏப்ரல் 15-ல் இருந்து இந்தியாவில் ஒளிபரப்பாகி வருகிறது. 8-வது சீஸனுக்கு முன் ஏழு சீஸன்களில் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தவே இந்த மினி சீரிஸ். இதுவரை நான்கு சீஸன்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்திருந்தோம். இந்த அத்தியாத்திலும், அடுத்த அத்தியாயத்திலும் 5-வது சீஸனில் நடந்ததைப் பார்ப்போம்!  

சீஸன் 4-ன் முடிவில் டிரியன் லானிஸ்டர்தான் ஜோஃப்ரி பராத்தியனைக் கொன்றார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவருக்கு மரண தண்டனையையும் விதித்தார், டைவின் லானிஸ்டர். தனது சகோதரர் ஜேமி லானிஸ்டரின் உதவியோடு சிறையிலிருந்து தப்பிக்கும் டிரியன், தனது தந்தையையும், காதலி ஷேவையும் கொன்றுவிடுவார். இப்படியாக முடிந்தது 4-வது சீஸன். 

சீஸன் 5-ன் ஆரம்பத்தில் டிரியன் டைவினைக் கொன்ற விஷயம் ஒட்டுமொத்த கிங்ஸ் லேண்டிங்கிற்கும் தெரிந்திருக்கும். ஏற்கெனவே டிரியன்மேல் கோபமாக இருக்கும் செர்சிக்கு, இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். சுற்றியிருக்கும் ஒட்டுமொத்த ஊர்களிலும் டிரியனின் சாயலில் இருக்கும் டுவார்ஃப்களைக் கொன்று குவித்துக்கொண்டிருப்பார், செர்சி. இதற்கு நடுவே கிங்ஸ் லேண்டிங்கில் திடீரென `ஸ்பேரோஸ்' என்ற அமைப்பு கோலோச்சத் தொடங்கி இருக்கும். கிங்ஸ் லேண்டிங்கைச் சேர்ந்த ஹை ஸ்பாரோ என்பவர்தான் இந்த இயக்கத்தை நடத்தி வருவார். செர்சியின் சித்தப்பா மகனான லேன்ஸல் லானிஸ்டர், அந்த இயக்கத்தில் சேர்ந்திருப்பார். 

டிரியன் லானிஸ்டரைக் கிங்ஸ் லேண்டிங்கிலிருந்து தப்பிக்க வைக்கும் வேரிஸ், அவரைப் பென்டோஸ் எனும் இடத்திற்கு அழைத்துச் செல்வார். "உனக்கு வெஸ்டிரோஸில் ஆபத்து அதிகம். அதனால், எஸ்ஸோஸிற்குச் சென்று டினேரியேஸ் டார்கேரியனுடன் இணைந்துவிடு" என்று லானிஸ்டருக்கு அறிவுரை அளிப்பார், வேரிஸ். வேறுவழியின்றி எஸ்ஸோஸை நோக்கிப் பயணத்தைத் தொடங்குவார், டிரியன். தவிர, டிரியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அவருக்காக டார்ன் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஓபரின் மார்டல் சண்டையிட்டு செத்து மடிந்தார் அல்லவா... அதற்குப் பழிவாங்கும் வகையில், செர்சி - ஜேமியின் மகளான மார்செல்லா பராத்தியனை அவர்களது இருப்பிடமான டோர்னுக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடத் தொடங்குவார், ஜேமி லானிஸ்டர்.  

எஸ்ஸோஸில் அமையப்பெற்ற மரீனில் இருக்கும் டினேரியஸ் டார்கேரியன், மொத்த நாட்டையும் மெள்ள மெள்ளத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துகொண்டிருப்பார். அந்தச் சமயத்தில், டினேரியஸின் ஆட்சியை எதிர்க்கும் சிலர், `Sons of Harpy' எனும் இயக்கத்தை ஆரம்பித்திருப்பார்கள். அந்த இயக்கத்தைச் சேர்ந்த சில வீரர்கள், டினேரியஸின் படையைச் சேர்ந்த சிலரைக் கொல்லத் தொடங்கியிருப்பார்கள். அதைத் தடுத்து நிறுத்தி, அந்த இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி தனது பாதுகாவலர்கள் க்ரே வார்மிடமும், நஹாரிஸிடமும் உத்தரவிட்டிருப்பார், டினேரியஸ். இதற்கு நடுவே டினேரியஸ் தான் அடைத்துவைத்த டிராகன்களைப் பார்வையிடச் சென்றிருப்பார். குறுகிய காலத்துக்குள் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் டிராகன்கள், டினேரியஸின்மேல் கடும் கோபத்தோடு இருக்கும். 

சில நிபந்தனைகளுடன் ஜான் ஸ்நோவுடன் இணைந்திருக்கும் ஸ்டானிஸ் பராத்தியன், கொஞ்சம் கொஞ்சமாக காஸ்டில் ப்ளாக்கையும், நைட்ஸ் வாட்சையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பார். அதோடு ஒயில்டுலிங்ஸையும் தன்னோடு இணைந்து போரில் சண்டையிடும்படி ஜான் ஸ்நோவிடம் கேட்பார். அதற்காக ஜான் ஸ்நோ ஒயில்டுலிங்ஸ் தலைவன் மேன்ஸ் ரைடரிடம் சென்று இது குறித்துப் பேச, `என் வீரர்களை இழக்க நான் தயாராக இல்லை' என்று நிராகரித்துவிடுவார், மேன்ஸ் ரைடர். அதற்குப் பின் ப்ளாக் மேஜிக்கையும், பலி கொடுத்தலையும் காரணமாக வைத்து மேன்ஸ் ரைடரை உயிருடன் எரித்துவிடுவார், மெலிஸாண்ட்ரே. அதுபோக, நைட்ஸ் வாட்ச்சின் `Lord of commander' ஜியோர் மோர்மன்ட் இறந்ததையடுத்து, அடுத்த `Lord of commander'ஐத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்துவார், மேய்ஸ்டர் ஏமன். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆலிஸர் தோர்னை வீழ்த்தி, புதிய 'Lord of commander' ஆகப் பதவியேற்பார், ஜான் ஸ்நோ. 

ரிவர்ரன்னில் இருக்கும் சான்ஸா ஸ்டார்க்கைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்த நினைக்கும் பீட்டர் பெய்லிஷ், அவரை அழைத்துக்கொண்டு போல்டனின் இருப்பிடத்துக்குக் கிளம்புவார். செல்லும் வழியில் சான்ஸாவைப் பார்க்கும் பிரான் டார்த், 'என்னுடன் வந்துவிடு. உன் அம்மாவுக்குச் சத்தியம் செய்ததுபோல் உன்னைக் காப்பாற்றி உன் உறவினர்களிடம் விட்டுவிடுகிறேன்' எனச் சொல்வார். அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத சான்ஸா, பெய்லிஷ்மேல் இருக்கும் கண் மூடித்தனமான காதலால் அவருடன் பயணப்பட முடிவெடுப்பார். சான்ஸாவை ரூஸ் போல்டனின் மகனான ராம்சே போல்டனுக்குத் திருமணம் செய்துகொடுத்து வடக்குப் பக்கம் தன் ஆதிக்கத்தை ஆரம்பிக்க நினைப்பதுதான், பீட்டர் பெய்லிஷின் சதித் திட்டம். அதற்கும் மந்தை மாடுபோல் தலையாட்டி திருமணத்துக்குத் தயாராவார், சான்ஸா. 

மறுபக்கம், ஆர்யா ஸ்டார்க் 'Faceless men' இயக்கத்தில் சேர ப்ராவோஸை அடைந்திருப்பார். அவர்களின் சண்டை முறைகளை வெறித்தனமாகப் பயிற்சியெடுக்க தயாராகிக்கொண்டிருப்பார். முதலில் `Faceless men' இயக்கத்தின் அடிப்படைகள் புரியாத ஆர்யா, அந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில சிரமங்களைச் சந்திப்பார். மேலும், அங்கிருக்கும் இறந்த நபர்களின் முகங்களைப் பார்க்கும்போது குழப்பமடையும் ஆர்யா, மெல்ல மெல்ல அவர்களது இயக்கத்தைப் புரிந்துகொண்டும், அவர்கள் அளிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டும் தன்னை மெருகேற்றத் தொடங்குவார். மறுபக்கம் டினேரியஸ் டார்கேரியனை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் டிரியன் லானிஸ்டரைக் கைதியாக்கி, 'கிங்ஸ் லேண்டிங்கைக் கைப்பற்ற நினைக்கும் எனது ராணி டினேரியஸிடம் உன்னைக் கொடுத்து, என்மேல் உள்ள கலங்கத்தைத் துடைக்கிறேன்' எனச் சொல்லி, தன்னோடு அழைத்துச் செல்வார், ஜோரா மோர்மன்ட்.

இப்படியாக நடந்துகொண்டிருக்கும்போது, கிங்ஸ் லேண்டிங்கின் மன்னனான டோமன் பராத்தியனின் புதிய மனைவி மார்ஜேரி டைரல்லையும், அவரது சகோதரர் சர் லோரஸையும் கைது செய்துவிடுகிறது, 'ஸ்பாரோஸ்' இயக்கம். 'இங்கு எல்லோரும் ஒன்றுதான். தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு' என்பதுதான் இயக்கத்தின் நோக்கமும், விதிமுறையும். மார்ஜேரி பொய் சொல்லியதற்காகவும், சர் லோரஸ் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்காகவும் இருவரையும் கைது செய்துவிடுகின்றனர். 'என் மனைவியை அடைத்துவிட்டனர். நான் போர் தொடங்கப்போகிறேன்' என்று குதித்துக்கொண்டிருப்பார், குட்டி மன்னன் டோமன். 'நான் போய் பேசி முடித்துவிட்டு வருகிறேன்' என ஹை ஸ்பாரோவைச் சந்திக்கச் செல்லும் செர்சி லானிஸ்டரைத் திடீரென, `நீ இன்செஸ்ட் உறவு வைத்துக்கொண்டதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேள். இல்லையென்றால் உனக்கும் தண்டனைதான்' என சிறையில் போட்டுவிடுவார், ஹை ஸ்பாரோ. அந்தச் சிறைக்குள் கத்திக் கதறி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார், செர்சி. 

ஒயிட்வாக்கர்களின் இருப்பை மெள்ள மெள்ள உணரும் ஜான் ஸ்நோ, தனது நைட்ஸ் வாட்ச் படை மட்டும் போதாது என்று எண்ணி, ஒயில்டுலிங்ஸையும் தன்னோடு இணைத்துக்கொள்ள நினைப்பார். அதற்காக, டோர்மண்ட் ஜெயின்ட்ஸ்பேனுடன் பேசி நட்பாகிவிடுவார். இருவரும் சேர்ந்து ஹார்டுஹோம் என்ற இடத்திற்குப் பயணப்படுவார்கள். காரணம், ஆயிரத்துக்கும்மேல் ஒயில்டுலிங்ஸ் வீரர்கள் அங்கு காலம் காலமாக வசித்து வருவார்கள். அவர்களையும் தம்மோடு இணைத்துக்கொள்ள நினைப்பார்கள். இருவரும் அங்கு சென்று, சூழ்நிலையை எடுத்துச் சொன்ன பின் சிலர் ஒப்புக்கொண்டாலும், பலரும் நிராகரித்துவிடுவார்கள். இப்படி நடந்துகொண்டிருக்கும்போதே திடீரெனக் கடுமையான பனிப்புயல் ஒன்று ஏற்படும். என்னவென்று அனைவரும் அண்ணாந்து பார்க்க... இவர்களை நோக்கி ஆயிரக்கணக்கான ஒயிட்வாக்கர்கள் படையெடுத்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும், ஒட்டுமொத்த ஊரும் பரபரப்பாகிவிடும். ஒயிட்வாக்கர் படையுடன் சேர்ந்து, அவர்களின் தலைவன் நைட்கிங்கும் மேலே தனது குதிரையில் அமர்ந்து அந்த மக்களை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருப்பான்.

குழந்தைகளும், பெண்களும் பல்லாயிரக் கணக்கில் வசித்துவரும் அந்த ஊர் மக்களின் நிலையும் என்னவாகப் போகிறது, படை திரட்ட வந்த ஜான் ஸ்நோவின் நிலை என்னவாகும், மார்செல்லா பராத்தியனைக் காப்பாற்றச் சென்ற ஜேமி லானிஸ்டரின் நிலை என்ன, தன் இன்செஸ்ட் உறவுக்காக ஸ்பாரோஸால் சிறையடைக்கப்பட்ட செர்சியின் நிலை என்ன ஆனது, டினேரிஸைப் பார்க்கப் பயணப்பட்ட டிரியனின் நிலை என்ன... அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்! 

வின்டர் வந்துகொண்டிருக்கிறது..!