Published:Updated:

"வில்லனா நடிச்சுதான் கரியரை வேகப்படுத்தணும்னு இருக்கு!" - நடிகர் இர்ஃபான்

"வில்லனா நடிச்சுதான் கரியரை வேகப்படுத்தணும்னு இருக்கு!" - நடிகர் இர்ஃபான்

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார், ‘சரவணன் மீனாட்சி’ இர்ஃபான்.

"வில்லனா நடிச்சுதான் கரியரை வேகப்படுத்தணும்னு இருக்கு!" - நடிகர் இர்ஃபான்

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார், ‘சரவணன் மீனாட்சி’ இர்ஃபான்.

Published:Updated:
"வில்லனா நடிச்சுதான் கரியரை வேகப்படுத்தணும்னு இருக்கு!" - நடிகர் இர்ஃபான்

நடிகர் இர்ஃபான் நினைவிருக்கிறதா? 'சாக்லேட் பாய்' லுக்கில் விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீஸன் 2-ல் என்ட்ரியாகி, ரொமான்ஸ் காட்சிகளில் மீனாட்சி முன் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, சீரியல் பிரியர்களின் மனங்களை அள்ளிய சின்னத்திரை ஹீரோ. குறிப்பாக, இளம் பெண்களுக்குப் பிடித்த ஹீரோவாக இருந்தவர். அந்த சீரியல் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோதே, சினிமா வாய்ப்புகளால் சின்னத்திரைக்கு 'பை’ சொல்லிவிட்டுப் பறந்தார். இர்ஃபான் வெளியேறிய அடுத்த சில மாதங்கள் அந்தத் தொடரே தள்ளாடியது என்று சொன்னாலும் மிகையாகாது.

சினிமா பயணத்தில் ‘சுண்டாட்டம்’, ‘பொங்கி எழு மனோகரா’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும், எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. அதனால், சில காலம் ஃபீல்டில் ஆளையே பார்க்க முடியவில்லை. திண்டுக்கல்லில் குடும்பத் தொழிலான தோல் தொழிற்சாலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் என்றார்கள் சிலர். தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறபோதும், இன்றுவரை விடாப்பிடியாக அவற்றை எல்லாம் மறுத்தே வருகிறார். இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது சினிமாவில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் இயக்குநர் கம் நடிகர் சேரனுக்கு வில்லன்! ‘மழை’ படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கும்  ‘ராஜாவுக்கு செக்’ படத்தில்தான் இந்த வில்லன் கேரக்டர்.

இர்ஃபானிடம் பேசினேன்.

"சீரியல்லேயும் சரி, இப்போ பண்ணிக்கிட்டிருக்கிற வெப் சீரிஸ்லேயும் சரி, 'லவ்வர் பாய்’னு பெயரெடுத்தவன் நான். 'நேற்று இல்லாத மாற்றம்' வெப் சீரிஸ் ‘சரவணன் மீனாட்சி’ மாதிரி இருக்காது. அதைவிடப் பக்காவான லவ் சப்ஜெக்ட். கிட்டத்தட்ட '96 படம் மாதிரி இருக்கும்னு சொல்லலாம். அதனால, நெகட்டிவ் ரோல் கிடைச்சதும், ‘பண்ணணுமா’னு யோசிச்சேன். நல்ல ரீச் தந்த சீரியலை விட்டுட்டு சினிமாவுக்கு வந்ததே, ஹீரோ ஆகணும்னுதான். அதனால, முதல்ல இந்த வாய்ப்பை மறுத்தேன். டைரக்டர் 'ஸ்கிரிப்ட் படிச்சுப் பார்த்துட்டுச் சொல்லுங்க’னு சொன்னார். படிச்சுப் பார்த்ததும் உண்மையிலேயே பயந்துட்டேன். ஏன்னா, அப்படியொரு மோசமான வில்லன். உடனே கமிட் ஆனேன். 'ராஜாவுக்கு செக்' படத்துல ரொம்பக் கொடூரம் பண்ணியிருக்கேன்" என்றவர்,

"பொதுவாகவே சீரியல்  ஹீரோக்கள் சினிமா பிரவேசத்தை ஹீரோவா என்ட்ரி ஆகித்தான் தொடங்கணும்னு விரும்புவாங்க. நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா, மோசமான வில்லனா என்னோட சினிமா ஜர்னி வேகமெடுக்கணும்னு இருக்குபோல!" என்கிறார். வில்லன் கெட்டப்புக்காக ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கும் இர்ஃபான், ஷூட்டிங்கின் ஆரம்ப சில நாள்களில் ரொம்பவே தடுமாறினாராம். அதுகுறித்துக் கேட்டோம்.

"ஆமா ப்ரோ. மைண்ட் செட் ஆக ஆகலை. சிம்பிளா சொல்லணும்னா, 'சில அந்த மாதிரி சீன்' எடுக்கணும்னா, 'நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட'ன்னு என் மைண்ட் சொல்லுது. அந்தக் கொடூரமான வில்லன் கேரக்டராகவே மாறி நடிச்சுட்டு, ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, ராத்திரி தூக்கமே வரலை. டைரக்டர் தைரியம் கொடுத்துக் கொடுத்து நடிக்க வச்சார். என்ன பண்றது ப்ரோ, ஒரு நடிகனா சேலஞ்ச் எடுத்துப் பண்ற கேரக்டர் கிடைக்கிறப்போ பயந்து ஒதுங்கினா அது நல்லா இருக்குமா? அதனால, நடிச்சேன். சீரியல் சமயத்துல எனக்கு கேர்ள் ஃபேன்ஸ் அதிகம். அவங்களுக்கு என்னோட இந்தக் கேரக்டர் பிடிக்காது. அதனால அவங்க என்னை மன்னிக்கணும்" என்று முடித்தார்.