Published:Updated:

`வெஸ்டரோஸ் மாதிரி ஆகிடக் கூடாது!' - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரெஃபரென்ஸ்

தினேஷ் ராமையா
`வெஸ்டரோஸ் மாதிரி ஆகிடக் கூடாது!' - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரெஃபரென்ஸ்
`வெஸ்டரோஸ் மாதிரி ஆகிடக் கூடாது!' - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரெஃபரென்ஸ்

ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார், சீன அதிபர் ஜி ஜின்பிங். 

ஒரு தொலைக்காட்சித் தொடரை ஹாலிவுட் படங்களுக்குச் சவால்விடும் வகையில் உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நிதர்சனத்தை உலகுக்கு உரக்கச் சொன்ன தொடர்களில் முக்கியமானது, கேம் ஆஃப் த்ரோன்ஸ். ஃபேன்டஸி வகை கதை, மிரட்டல் ட்ரீட்மென்ட், பிரமாண்டத் தயாரிப்பு எனத் தொலைக்காட்சித் தொடர்களின் தரத்தை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற இந்தத் தொடர், உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அரியணைக்கு அடித்துக்கொள்ளும் பழைய ஃபார்முலா கதைதான் என்றாலும், திரைக்கதையும் காட்சியமைப்பும் ஹாலிவுட் படங்களையும் மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். தொடரின் 7 சீசன்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், 8-வது சீசனில் 3 எபிசோடுகள் கடந்திருக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் கேம் ஆஃப் த்ரோன்ஸ், இந்த சீசனோடு முடிந்துவிடும் என்பதால், ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். இந்தக் காரணமும் இந்த சீசன் அதிரிபுதிரி ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறது. மூன்று எபிசோடுகள் முடிந்திருக்கும் நிலையில், பரபரப்பான 3 எபிசோடுகள் மீதமிருக்கின்றன. 

உலகின் பலநாடுகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். சமூக வலைதளங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் சீனாவில், இந்தத் தொடரை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்துவருகின்றனர். அங்கு, கடுமையான சென்சாருக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் ஒளிபரப்பப்படுகிறது. 

இந்த நேரத்தில், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் சீன அதிகார மையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. சமீபத்தில், குரோஷியாவின் டப்ரோன்விக் (Dubrovnik) நகரில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகள் மாநாட்டுக்குச் சென்ற சீன அரசின் பிரீமியர் லீகெகுயாங், அங்கு பேசியபோது, கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர்குறித்து குறிப்பிட்டுப் பேசியிருந்தார். குரோஷியாவின் அந்த நகரில்தான், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் கிங்ஸ் லேண்டிங் பகுதிகள் படம்பிடிக்கப்பட்டிருந்தன. 

லீகெகுயாங் பேசுகையில், `` `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் ஒருசில பகுதிகள் இங்கு படமாக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். கடைசி சீசன் ஒளிபரப்பாக இருக்கிற நிலையில், (அந்த மாநாடு இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது) இங்கு நாம் சந்தித்திருக்கிறோம். 
நம்மிடையேயான ஒத்துழைப்பு என்பது கேம் ஆஃப் த்ரோன்ஸில் வருவது போல இருக்கக் கூடாது. நம்முடைய பரஸ்பர முன்னேற்றத்துக்காகவும், நமது ஈடுபாடுகள் சார்ந்தும் உண்மையான ஒத்துழைப்பு நம்மிடையே வேண்டும்'' என்று பேசியிருந்தார். இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஆலோசனைக் கூட்டமொன்றில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரை ரெஃபரென்ஸுக்காகக் குறிப்பிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜி ஜின்பிங், ``வெஸ்ட்ரோஸில் ஏற்பட்ட குழப்பமான போர் போன்ற  சூழலுக்கு, நாம் வாழும் இந்த உலகம் சென்றுவிடக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டியது அனைவரின் கடமை'' என்று குறிப்பிட்டதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால், ஜி ஜின்பிங் எந்த இடத்தில் யாருடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கருத்தை முன்வைத்தார் என்பதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடவில்லை. கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில், வெஸ்ட்ரோஸில் உள்ள 7 நாடுகளிடையே குழப்பான நிலை உருவாகி, போர் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.