Published:Updated:

'அண்ணாமலை' சீரியல் ஐஸ்வர்யா இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

வெ.வித்யா காயத்ரி
'அண்ணாமலை' சீரியல் ஐஸ்வர்யா இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?
'அண்ணாமலை' சீரியல் ஐஸ்வர்யா இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

வெள்ளித்திரை, சின்னத்திரை என ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் ஐஸ்வர்யா. சீரியலில் பிஸியாக நடித்து வந்தவர் திருமணத்துக்குப் பின்னர் நடிப்பிற்கு பிரேக் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட10 வருடங்களுக்கும் மேலாக நடிப்பிலிருந்து விலகியிருப்பவரை, தீவிர தேடலுக்குப் பின்னர் கண்டுபிடித்தோம். தன் கேமரா நினைவலைகளைப் பேசினார் ஐஸ்வர்யா.

'அண்ணாமலை' சீரியல் ஐஸ்வர்யா இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

''நான் நடிப்பை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல இருக்கும். என்னை ஞாபகம் வச்சு பேட்டி எடுக்க வந்ததுக்கு நன்றி!

என்னுடைய 15 வயதில் நடிக்க வந்தேன். 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிப்பில் ஒரு சீரியலில் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்த நேரம் 'டும் டும் டும்' படத்தில் ஜோதிகா மேமுக்கு தங்கச்சியா நடிக்கத் தேர்ந்தெடுத்திருந்த நடிகைக்குத் தேதி இல்லைன்னு, என்னுடைய தேதியை அந்தப் படத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்டாங்க. அதனால, அந்தப் படத்தில் ஜோதிகா மேமுக்கு தங்கச்சியாக நடிச்சேன். அதைத் தொடர்ந்து படங்கள், சீரியல்கள்னு நடிச்சிட்டிருந்தேன். 2002-க்கு அப்புறமா முழுசா சீரியல்களிலேயே கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.

அப்போ சன் டிவி மட்டும்தான் சீரியலில் ஃபேமஸ். சன் டிவியில் பெரும்பாலான மார்னிங் ஸ்லாட் சீரியல்களில் நடிச்சேன். 'கங்கா யமுனா சரஸ்வதி' சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். என்னுடைய கரியரில் எனக்கு பிரேக் கொடுத்த சீரியல்னா, அது 'அண்ணாமலை' சீரியல்தான். அந்த சீரியல் எனக்குன்னு ஒரு அடையாளத்தைக் கொடுத்துச்சு. 10 வருஷமா சீரியலில் பிஸியா ஓடிட்டிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு துபாய்க்குப் போக வேண்டிய சூழல். அதனால, நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு துபாய் கிளம்பினேன். அப்புறம் எனக்கு பையன் பிறந்தான். அவனைப் பார்த்துக்க வேண்டி இருந்துச்சு. இப்போ என் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு'' என்றவரிடம் 'இப்போ என்ன பண்றீங்க?' என்று கேட்டோம். 

'அண்ணாமலை' சீரியல் ஐஸ்வர்யா இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

''இப்போ கனடாவில் இருக்கோம். என் கணவர் இங்கே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துட்டு இருந்தேன். பொண்ணு பிறந்து சில மாதங்கள்தான் ஆகுது என்பதால, பேறுகால விடுமுறையில் இருக்கேன். இது தவிர்த்து, இங்கே ஒரு ரேடியோவில் பார்ட் டைம் ஆர்.ஜே-வாக இருக்கேன். நடிப்பையே சுத்தமா மறந்துட்டேன். என் பையன் யூடியூப்ல என் சீரியலையெல்லாம் பார்த்துட்டு, 'இப்போ ஏம்மா நடிக்க மாட்டேங்குற?'ன்னு கேட்குறான். அவன்கூட சேர்ந்து, நான் நடிச்சதைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருது. இப்படியெல்லாம் நடிச்சிருக்கோமான்னு என்னை நானே கேட்டுக்கிறேன்'' என்றவரிடம் ஆர்.ஜே பணி பற்றிக் கேட்டோம்.

''மீடியாவைத் தவிர வேற எந்த வேலையும் தெரியாதுங்குறதால, அந்த ஃபீல்டில் வேலை பார்க்கலாம்னு முடிவெடுத்தேன். கனடாவில் ஒரு சேனலில் வி.ஜே-வாக இருந்தேன். 'சூப்பர் சிங்கர்' மாதிரி கனடாவில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இங்கே பட்ஜெட் ஷோ தான் நிறைய பண்ணுவாங்க. நான் பண்ணின ஷோ முடிஞ்சதும் அடுத்து ஷோ இல்லை. அந்த நேரத்தில் ஆர்.ஜே ஆக டிரை பண்ணிப் பார்க்கலாமேன்னு தோணுச்சு. கனடாவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம். அதனால நிகழ்ச்சியில் பேசும்போதும் இலங்கை தமிழில்தான் பேசுவாங்க. நான் போனப்போ அந்த எஃப்.எம்மில், 'சரி நேயர்களுக்கு இந்தியத் தமிழ் பிடிக்குதான்னு ட்ரை பண்ணிப் பார்க்கலாம்'னு என்னை செலக்ட் பண்ணினாங்க.

'அண்ணாமலை' சீரியல் ஐஸ்வர்யா இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

கனடாவில், ஷோ புரொடியூசர், சவுண்ட் இன்ஜினீயர், கன்டென்ட் கிரியேட்டர், கன்சோல்னு எல்லா வேலைகளையும் ஆர்ஜே தான் பார்க்கணும். ஆரம்பத்தில் கன்சோல் கத்துக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். நம் தமிழில் பேசுனப்போ நிறைய நேயர்கள், 'நீங்க பேசுறது தமிழா?'ன்னு கேட்டாங்க. நம்ம தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்கும் என்ன வித்தியாசம்னு கத்துக்க, என்கூட வேலை பார்க்கிறவங்களுடைய ஷோவைக் கேட்டேன். அவங்க பேசும்போது ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் கலக்காம பேசுனாங்க. ஆர்.ஜே ஆனதுக்கு அப்புறம்தான் தமிழ்மொழி மேல் தீராக்காதல் ஏற்பட்டுச்சு. நிறைய தூயதமிழ் வார்த்தைகளைக் கத்துக்கிட்டுப் பேச ஆரம்பிச்சேன். இப்போ 'தமிழ் எக்ஸ்பிரெஸ்'னு ஒரு ஷோ பண்றேன். நான் கர்ப்பமா இருந்தப்போ என்னைப் பார்க்க நிறைய நேயர்கள் வந்ததெல்லாம் நெகிழ்ச்சியான அனுபவங்கள். ஆர்.ஜே ஆக இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

நானும் குட்டி பூஜாவும் ரொம்ப குளோஸ். அவளும் கனடாவுக்கு வந்தது எதிர்பாராம நடந்தது. இப்போ நாங்க ரெண்டு பேரும் ஒரு ஃபேமிலி மாதிரி இருக்கோம். என் பையன் அவளை அத்தைன்னுதான் கூப்டுவான். அவளோட பசங்க என்னை அத்தைன்னு கூப்டுவாங்க. அவளைத் தவிர்த்து, வெங்கட், சஞ்சீவ், கமலேஷ், பிருந்தா தாஸ், தேவ்னு மீடியா ஃப்ரெண்ட்ஸ் கொஞ்சம் பேர் இருக்காங்க. இந்தியா வரும்போது அவங்களையெல்லாம் பார்க்காமல் இருக்க மாட்டேன். எல்லோரையும் மீட் பண்ணிடுவேன்'' என்றவரிடம், அவரின் அடுத்த பிளான் குறித்துக் கேட்டோம்.

'அண்ணாமலை' சீரியல் ஐஸ்வர்யா இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

''என் பையனுக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கு. அவன் எதிர்காலத்தில் நடிக்க வருவான்னு நினைக்கிறேன். எனக்கு மறுபடியும் நடிக்கிற எண்ணம் இல்லை. ஆர்.ஜே-வாக இருக்கிறதே ரொம்பப் பிடிச்சிருக்கு. பசங்க வளர்ந்ததும் என்னுடைய கரியரில் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். முன்னாடி செலிப்ரிட்டி ஃபேம் இருக்கும். இப்போ பக்காவான குடும்பத்தலைவி. அதைவிட இந்த லைஃப் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் தமிழில் பேசி நேயர்களை ஈர்த்துட்டிருக்கேன். ஆனா என் பையன் தமிழ்ல பேசமாட்டான். தப்பா தமிழில் பேசிட்டா சிரிச்சிடுவாங்களோங்குற எண்ணம். நான் தமிழில் பக்கம் பக்கமாகப் பேசினாலும் அவன் ஆங்கிலத்தில்தான் ரிப்ளை பண்ணுவான். பொண்ணு ரொம்பக் குட்டி! பையனையும் பொண்ணையும் நல்லா வளர்க்கணும், என் கரியரையும் நல்லவிதமா அமைச்சிக்கணும். என் கணவர், உனக்கு பிடிச்ச வேலையைப் பாருன்னு சுதந்திரம் கொடுத்திருக்கார். வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு. இது போதும்!" என்கிறார் நிறைவுடன்.

Vikatan