Published:Updated:

கேபிள் கலாட்டா! - 'தென்ற'லுக்குள் ஒரு 'புயல்'!

ரிமோட் ரீட்டா படங்கள்: கே.கார்த்திகேயன், சொ.பாலசுப்ரமணியன்

 ##~##

கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும்போதே, விபத்தில் வலது காலை இழந்தும், வாழ்க்கையில் தன்னம்பிக்கை இழக்காதவங்க... 'மயூரி’ படம் மூலமா தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி நடிப்பு, நாட்டியம்னு வெற்றிக் கொடி நாட்டினவங்க. இப்போ 'தென்றல்’ சீரியல்ல புயலா வந்து பட்டையைக் கிளப்புறாங்க! யெஸ்... சுதா சந்திரன் 'புவனா’வைப் பார்க்க 'தென்றல்’ ஷூட்டிங் நடக்குற கோயம்பேடு, லீ கிளப்புக்குக் கிளம்பினேன்!  

வாழை இலையைக் கிழிக்கிற மாதிரி அவ்வளவு மென்மையா பேசினாங்க சுதா.

''தென்றல் சீரியலுக்கு நான் ரசிகை ரீட்டா. ஆரம்பத்தில் இருந்து பார்த்துட்டு இருக்கேன். அதிலும் ஐஸ்வர்யா ரோல்... அட்டகாசம்! எந்த கேரக்டர்லயும் பின்னியெடுக்கிற ஐஸ்வர்யா, 'புவனா’ கேரக்டர்லயும் மிரட்டினாங்க. சொல்லப்போனா... இந்த ரோல் நமக்கு கிடைக்காமப் போச்சேனுகூட நினைச்சுருக்கேன்.

சில பர்சனல் காரணங்களால ஐஸ்வர்யாவால் தொடர்ந்து இதில் நடிக்க முடியாம போக, 'நீங்க பண்றீங்களா..?’னு விகடன் டெலிவிஸ்டாஸ்ல இருந்து எனக்கு போன். ஒரே சந்தோஷம். 'டிரிபிள் ஓ.கே’ சொல்லிட்டேன். 'எந்த மேக்கப்பும் வேண்டாம்... உங்க கோபம் மட்டும் போதும்’னு சொன்னார் டைரக்டர் குமரன்.

விசேஷம் என்னன்னா, ஸ்ருதியோட (துளசி) அம்மா தொடங்கி, சீரியல பார்க்கற ரசிகைகள் வரை, 'உங்களுக்கும் ஸ்ருதிக்கும் ஒரே முகவெட்டு... அம்மா - பொண்ணு அம்சமாப் பொருந்துறீங்க!’னு சொல்றாங்க. நீ நோட் பண்ணியா ரீட்டா..?!''னு குழந்தை மாதிரி கேட்டவங்ககிட்ட, கேமரா ஆன் பண்ணின உடனே வில்லியா மாறிடுற வித்தையைப் பத்திக் கேட்டேன்.

கேபிள் கலாட்டா!  - 'தென்ற'லுக்குள் ஒரு 'புயல்'!

''நான் இயல்பில் ரொம்ப சாதுவான கேரக்டர். ஆனா, ஹிந்தியில் நான் பண்றதெல்லாம் பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்கள்தான். இப்போ தமிழ்லயும் அது தொடருது. என் சுபாவத்துக்கு நேர் எதிரான ஒரு ரோலை நான் பண்ணும்போது, ஹெவி மேக்கப், ஓவர் எக்ஸ்பிரஷன்ஸ்னு அதை பேலன்ஸ் பண்றேன். அதுலயும், ஸ்க்ரீன்ல என்னைப் பார்த்ததுமே... கடந்த காலம் ஞாபகம் வந்து, எல்லோருக்கும் என் மேல் ஒரு பரிதாபம்தான் வரும். அதையும் மீறி அவங்க சாபம் கொடுத்து திட்டுற வில்லியா அவங்க மனசுல நான் பதியணும்னா, இதெல்லாம் அவசியம்தானே..?''னு அழகா சொன்ன சுதா, இப்போ சென்னைக்கும் மும்பைக்குமா பறந்துட்டு இருக்காங்க.

''17 வயசுல செயற்கை கால் பொருத்திக்கிட்டப்போ, என்னை கைப்பிடிச்சி நடக்கப் பழக்கி, மனசுல தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டி வளர்த்தது, என் அம்மா. என் வளர்ச்சிக்கு எப்பவும் பின்புலமா இருக்கார் என் அப்பா. என் வாழ்க்கையை இன்னும் அழகாக்குறார் என் கணவர் ரவிக்குமார். பள்ளி நாட்கள்ல இருந்து இப்போ வரைக்கும் எனக்குத் தோளுக்குத் தோளா தொடர்றாங்க என் மூன்று தோழிகள். என்னை ஒவ்வொரு நிமிஷமும் துடிப்போட இயங்க வைக்குது என்னோட டான்ஸ் ஸ்கூல். அருமையான வாழ்க்கையைத் தந்த இறைவனுக்கு நன்றி!''னு அழகா சிரிக்கிறாங்க சுதா!

ஆல் இஸ் வெல்!

 கோடி ஹீரோ... ஆன்ட்டிஹீரோ!

கேபிள் கலாட்டா!  - 'தென்ற'லுக்குள் ஒரு 'புயல்'!

கோடிகளோட விளையாடிட்டு இருக்கார் ரிஷி! ''தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், ஆங்கர், சினிமா நடிகர்னு நல்ல அடையாளங்களைச் சேர்த்திருக்கிறது சந்தோஷமா இருக்கு ரீட்டா. சன் டி.வி-யில 'கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சி இப்போ சூப்பர் ஹிட் ஆனதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. புதுமுகம் சிவாஜி, ஹீரோவா நடிக்கிற 'நந்தனம்’ படத்துல இப்போ ஆன்ட்டி ஹீரோ ரோல் பண்ணிட்டு இருக்கேன். எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருக்கு!''னு ஹார்ட்ல கை வைச்சு நிறைவா சிரிக்கிற ரிஷிக்கு, மேடை நாடகங்கள்ல, தான் அரங்கேற்றின சில செலக்ட்டிவ் ஸ்கிரிப்ட்களை படமாக்கறதுதான் கனவு!

 ஊர்க்காரப் பொண்ணு!

கேபிள் கலாட்டா!  - 'தென்ற'லுக்குள் ஒரு 'புயல்'!

தொகுப்பாளினி கன்னிகா, இசையருவி சேனல்ல 'கேளுங்க பசங்களா’, சிரிப்பொலி சேனல்ல 'விழுந்து விழுந்து சிரிங்க’ நிகழ்ச்சிகள்ல வந்து நமக்கு 'ஹாய்' சொல்ற பொண்ணு.

''விழுப்புரம் பக்கத்துல இருக்கிற கள்ளக்குறிச்சிதான் என் ஊர் ரீட்டா. அப்பா ஊர்ல இரும்புத் தொழில் செய்றார். மீடியா பேக்கிரவுண்ட் எதுவுமில்லாம ஒரு இரண்டாம் தர நகரத்துல இருந்து கிளம்பி, சொந்த முயற்சியில கேமரா முன்னால வந்து நிக்கற இந்தப் பொண்ணை, வாழ்த்து ரீட்டா!''னு சிரிச்ச கன்னிகா, பத்தாம் வகுப்பு முடிச்சுருக்கறதோட... கிராஃபிக் டிசைனர் கோர்ஸும் முடிச்சுருக்காங்களாம்! 

வாசகிகள் விமர்சனம் ! 

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!  - 'தென்ற'லுக்குள் ஒரு 'புயல்'!

150

நேரத்தை நீட்டியுங்கள்!

''பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு 'சுற்றுலா வாங்க’ என்கிற புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சுற்றுலா தலம் பற்றி விரிவாக விளக்கமாக தகவல்கள் இங்கே பரிமாறப்படுகின்றன. சமீபத்தில் மைசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பற்றி விரிவாக எடுத்துச் சொன்ன விதம்... நேரிலேயே விசிட் அடித்து வந்த திருப்தியைத் தந்தது. நிகழ்ச்சியில் ஒரேயரு குறை... அரை மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பப்படுவதுதான். இந்த நேரத்தை அதிகப்படுத்தினால், இன்னும் ஆழமாக விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் திருச்சியைச் சேர்ந்த எஸ்.வாணி.

என்ன கொடுமை தேவயானி?!

''சன் டி.வி, 'முத்தாரம்’ தொடரில் ஒரு காட்சி... பார்ப்பவர் மனதை பதைபதைக்கச் செய்தது. விறகடுப்பு மளமளவென கொழுந்து விட்டு எரிகிறது. தண்ணீர் ஆக்ரோஷமாகக் கொதித்துக் கொண்டுஇருக்கிறது. அப்போது அங்குவரும் மனநிலை சரியில்லாத தேவயானி, தான் பெற்றெடுத்த குழந்தையை கொதிக்கும் நீருக்குள் போட முயல்கிறாள். நடிப்பு அபாரம்! ஆனால், மிகமிக கொடூரமான அந்தக் காட்சி... 'ச்சீ.. இப்படியெல்லாம்கூட பயமுறுத்துவார்களா..?' என்று நொந்துகொள்ள வைத்துவிட்டது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான தேவயானி, இப்படியரு காட்சியில் நடிக்க எப்படி சம்மதித்தார்?'' என்று கோபக் கேள்வி வீசுகிறார்... சென்னையைச் சேர்ந்த ஏ.ஜஹ்பர் காதர்.

துளசியின் சூப்பர் சீறல்!

''தென்றல் சீரியலில் 'டைவர்ஸ்’ என்கிற வார்த்தையைக் கேட்டதும் பொங்கி எழுகிறாள் துளசி. அதைவிட சூப்பர்...  அவர் பேசும் வசனங்கள். 'டைவர்ஸ் என்பதே ஆபாச வார்த்தை. அண்ணன், தங்கை, தம்பி, அக்கா போன்றவர்களுடன் பிரச்னை என்றால், கோர்ட்டுக்கு போய் உறவே இல்லை என்று பிரிகிறோமா? இல்லையே! யார் இந்தச் சட்டத்தை கொண்டு வந்தது? டைவர்ஸ் செய்வதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே’ என்று பெரிய லெக்சரே கொடுத்து, எல்லோரையும் சிந்திக்க வைக்கிறார்.

எதற்கெடுத்தாலும் டைவர்ஸ் என்பவர்கள் பார்த்து திருந்த வேண்டிய காட்சி'' என்று சிபாரிசு செய்கிறார் திருச்சியைச் சேர்ந்த எஸ்.விஜயா சீனிவாசன்.