ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

கேபிள் கலாட்டா!

வீடு தேடி வந்த தென்றல் !ஒரு சர்ப்ரைஸ் கொண்டாட்டம்

 ##~##

ஆபீஸ் வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு, எவ்ளோ டிராஃபிக் இருந்தாலும்... ராத்திரி சரியா 9 மணிக்கு வீட்டுக்கு ஓடி வர்ற மகன், அடுப்பிலிருக்கும் தோசைக் கல்லில் ஒரு கண்ணும் டி.வி-யில் மறுகண்ணுமா வேலை பார்க்கற அம்மா, ஒரு நாள் மிஸ் பண்ணிட்டாலும், இன்டெர்நெட்ல அதை தேடுற மருமகள்...

இப்படி ஒரு சீரியலை தினம் தினம் 'ஃபெஸ்டிவெல்’ போலவே கொண்டாடுற ஒரு வீட்டுல, அந்த மெகா தொடர் ஒளிபரப்பாகிட்டிருக்குற நேரத்துல, அந்தத் தொடரோட நாயகன், நாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் 'காலிங் பெல்’ அடிச்சா..?! கேட்கும்போதே பரவசமா இருக்குல்ல..?! லெட்ஸ் ஸ்டார்ட்!

இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்களே?!

யெஸ்... 'விகடன் டெலிவிஸ்டாஸ்’ தயாரிப்பில் சன் டி.வி-யில ஒளிபரப்பாகிற 'தென்றல்’தான்!

'தென்றல்' சீரியலை விடாம பார்த்துக்கிட்டிருக்கற குடும்பத்தைக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டமா என்ன? வீட்டுக்கு வீடு அதுதானே ஓடுது. சட்டுனு ஃப்ரெண்ட்ஸ் மூலமா தேர்ந்தெடுத்தோம்... சென்னை, சாலிகிராமம் சத்யா - ராஜு குடும்பத்தை!

கேபிள் கலாட்டா!

தமிழ் (தீபக்), துளசி (ஸ்ருதி), வரதன் (ராஜசேகர்), பிரபா எனும் பிரபாகர் (ஆடம்), கல்யாணி (சூசன்)... 'தென்றல்' சீரியலோட இந்த ஐந்து பேர்கிட்டயும் விஷயத்தைச் சொல்ல... ''வாவ்... இது எங்களுக்கே சந்தோஷ சர்ப்ரைஸ்!''னு குஷியாக... அப்படியே அவங்கள அள்ளிக்கிட்டுப் போனோம்.

('இப்படியான த்ரில் திட்டமெல்லாம், ரீட்டாவோட மூளைக்கு மட்டும் எப்படித்தான் எட்டுமோ!'னு நீங்க பாராட்டுறது, எனக்குக் கேட்குது! எல்லாம் ஒரு தன்னம்பிக்கைதான்! தேங்க்யூ... தேங்க்யூ..!)

கேபிள் கலாட்டா!

கதவைத் திறந்த சத்யா, 'தென்றல்’ டீம் பார்த்து கனவா, நிஜமானு கிள்ளிப் பார்த்துக்க.. அடுத்த நொடியே... 'ஹே...' என ஒரே உற்சாகக் கூச்சல், அந்த வீட்டையே அதிர வெச்சுடுச்சு. சத்யா, ராஜு, கௌசல்யா (ராஜுவின் அக்கா), ரங்கநாதன் (கௌசல்யாவின் கணவர்), சத்யா தம்பதியின் மகன்கள் ரகுராம், பிரபுராம், பத்மப்ரியா (ரகுராமின் மனைவி) மற்றும் குழந்தைகள்னு மொத்தக் குடும்பமும் பரவசமாக... கையில் கொண்டு வந்த ஸ்வீட் பாக்ஸை துளசி நீட்ட, குடும்பத்துக்கே சந்தோஷ ஷாக்!

''கேள்வியை நீங்க கேட்கிறீங்களா... இல்ல..?!''னு தமிழ் ஆரம்பிக்க, குபீர் சிரிப்போட ஆரம்பமாச்சு அரட்டை.

சத்யாவின் கணவர் ராஜு, ''எங்களோட தினசரி வேலைப் பட்டியல்ல... தென்றலுக்கும் தவறாம இடம் உண்டு. உண்மைக் கதையாத்தான் தினமும் விடாம பார்த்துட்டே இருக்கோம். நடிப்புல எல்லாரும் அசத்துறீங்க. ஏம்மா துளசி... நான் படம் எடுத்தா, அதுல நீதாம்மா ஹீரோயின். சபாஷ்மா!''னு பாராட்ட...

''சார், சீரியல்லதான் தமிழ் ஹீரோ. உங்க படத்துலயாச்சும் எனக்கு ஹீரோ சான்ஸ் கொடுப்பீங்களா..?''னு பரிதாபமா அப்ளிகேஷன் வெச்சார் பிரபா.

கேபிள் கலாட்டா!

உடனே சத்யா கொஞ்சம் முகத்தை சுளித்தவாறே, ''போப்பா 'பிரபா’... உனக்குத்தான் அழகா ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணமெல்லாம் முடிச்சுட்டாங்க இல்ல... அப்புறம் ஏன் பழைய லவ்வர் போன் பண்ணினா எடுத்துப் பேசுற? திரும்பவும் குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்னை ஆகவா..?''னு உரிமையோட கோபப்பட,

''நல்லாக் கேளுங்கம்மா... நம்ம மாதிரி பெரியவங்க பேச்சை கேட்டாதானே..!''னு உசுப்பேத்தினார் வரதன்.

ராஜு, ''எனக்கும்தான் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. அதெல்லாம் வொய்ஃப்கிட்ட சொல்லிக்கிட்டா இருந்தேன்? விடுங்க சார்''னு சொல்ல,

''அப்படியா சங்கதி... இருங்க இருங்க!''னு செல்லமா தன் கணவரை முறைச்சாங்க சத்யா.

கேபிள் கலாட்டா!

''இந்த தமிழ் பையன் மாதிரி வீட்டுக்கு ஒரு பிள்ளை கிடைச்சுட்டா போதும். குடும்பத்துல ஆயிரம் பிரச்னைகள், முடிச்சு விழுந்து கிடந்தாலும், அழகா அவிழ்த்துடலாம். உன்னோட அம்மா அவ்ளோ கொடுமைங்க செய்தும்... இவ்ளோ அன்பான புள்ளையா நடந்துக்கிறியே... ரொம்ப பெருமையா இருக்குப்பா தமிழ்!''னு கௌசல்யா உருக,

''என்ன கொடுமை மேடம் இது? டைரக்டர் குமரன் சாருக்குப் போக வேண்டிய பாராட்டு எல்லாம், இந்த 'தமிழு’க்கு போகுதே!''னு பிரபா தலையில கை வைத்தார்.

''பொறுக்காதே உனக்கு?!''னு அவர் கையை தட்டிவிட்ட தமிழ், ''சரி, வீடு தேடி வந்திருக்கோம். எங்களுக்கு என்ன கொடுக்கப் போறீங்க..? கூல் டிரிங்ஸ்ஸ விட்டுட்டு,  புதுசா, பெருசா யோசிங்க!''னு கிளறிவிட்டார்.

கேபிள் கலாட்டா!

''மாமியார் கொடுமைய தாங்கிட்டு இருக்குற 'துளசி’க்கு, எப்பவும் கூல்...லா இருக்க ஒரு ஏ.சி வாங்கிக் கொடுக்கலாம். 'துளசி’கிட்டயும், அம்மாகிட்டயும் பேலன்ஸ் பண்ணி அன்பா நடந்துக்கிற 'தமிழு’க்கு, ஒரு 'சீ-ஸா’ வாங்கிக் கொடுக்கலாம். கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டுற 'கல்யாணி’க்கு ஒரு கால் டாக்ஸி வாங்கிக் கொடுக்கலாம். அன்பு, பாசம்னு சிலிர்க்க வைக்கிற 'வரதன்’ சாருக்கு, அவர் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கலாம். என்ன... எங்களுக்கு ஒரு பம்ப்பர் பிரைஸ் விழணும்!''னு சத்யா சொல்ல,

''அப்பக்கூட என்னனு சொல்லவே இல்லையே..?!''னு ஆதங்கமானார் பிரபா.

''வேறென்ன... டிபன் பாக்ஸ்தான்!''னு துளசி சொல்ல,

''அதேதான்... அதேதான்..!''னு ஆதரிச்சாங்க கல்யாணி.

கேபிள் கலாட்டா!

''என்ன மேடம் நீங்க அமைதியா இருக்கீங்களே..?''னு சத்யாவோட மருமகள் பத்ம ப்ரியாகிட்ட, துளசி கேட்க,

''நான் உங்ககிட்டதான் ஒரு கேள்வி கேட்கணும்...''னு தயாரான பத்மப்ரியா, ''நீங்க எப்போதான் படிப்பை முடிப்பீங்க..!''னு  அதிமுக்கியமான கேள்வியைக் கேட்க,

''ஹய்ய்ய்ய்ய்! அப்படிப் போடுங்க அருவாள. பதில் சொல்லுங்க 'துளசி’ மேடம்!''னு கல்யாணி கலாய்க்க,

''ஏய்... யாருப்பா என் 'துளசி’ யைக் கலாய்க்கிறது..?''னு வந்தார் ஐ.எஸ்.ஓ ஹஸ்பண்ட் 'தமிழ்’.

''யேய்... அதெல்லாம் சீரியலோட பேக் அப்!''னு பிரபா சொன்ன நேரம், டி.வி-யில் ஓடிட்டு இருந்த 'தென்றல்’ சீரியலும் எபிசோட் முடியுற நேரத்தை நெருங்கிச்சு. பேச்சுல கவனமா இருந்தாலும், சீரியல்லயும் ஒரு கண் வெச்ச அத்தனை பேரும், அந்த ஃபைனல் ஸீனை பார்த்து முடிக்க...

''அங்க பாருங்க... ஒவ்வொரு நாளும் ஒரு சூப்பர் ட்விஸ்ட் வெச்சு முடிக்கறீங்களே... அதான் தென்றல்!''னு சொன்னாங்க சத்யா.

கேபிள் கலாட்டா!

''எங்களோட ஒவ்வொரு ஃபிரேமையும் இவ்ளோ அழகா ரசிச்சு ரசிச்சு பார்க்கற உங்களோட கொஞ்ச நேரம் டைம் செலவிடக் கிடைச்சது, எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு!''னு வரதன் சொல்ல...

''தமிழ், துளசி, கல்யாணினு தென்றலோட அத்தனை பாத்திரங்களும் எங்க குடும் பத்துல மட்டுமில்ல... பல தமிழ்க் குடும்பங்கள்லயும் உறுப்பினர்கள்!''னு சொல்லி எல்லாரையும் சிலிர்க்க வெச்சாங்க சத்யா!

இந்தக் கொண்டாட்ட நேரம் முழுக்க நிஜ ஹீரோயினாக இருந்தது... 25 நாள் குழந்தை ஆட்விகா ராம். ரகுராமின் இந்தக் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, துளசி... கல்யாணி இருவரும் கொண்டாடி தீர்த்தது... ஸ்பெஷல் எபிசோட்!

படங்கள்: கே.ராஜசேகரன்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

ஊரு பேரு... ஜோரு ஜோரு!

''வசந்த் டி.வி-யில் 'ஊரும் பேரும்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார் பிரபல 'நாட்டுப்புற பாடகர்' புஷ்பவனம் குப்புசாமி. ஏதாவது ஒரு ஊருக்குப் போய், 'உங்கள் ஊருக்கு அப்படியரு பெயர் சூட்டப்பட்டதற்கான காரணம் என்ன?' என்று அந்த ஊர் மக்களிடமே கேட்கிறார். ஒவ்வொருவரும் தெரியாமல் விழிக்கும்போதோ... அல்லது ஏதாவது உளறும்போதோ... காமெடி கமென்ட்டுகளைப் போட்டு ரசிக்க வைக்கிறார் புஷ்பவனம். பின்பு, ஊர் பெயருக்கான காரணங்களை தகுந்த சான்றுகளுடன் அவர் விளக்குவது வெகு சுவாரசியமாக இருக்கிறது'' என்று ரசித்து பாராட்டுகிறார் மதுரையைச் சேர்ந்த பி.எஸ்.லஷ்மி

அடிப்படை அறிவு கூட..?

''சன் டி.வி-யில் கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பான 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சியில், 'ஐம்பொறி கள் யாவை?' என்று மக்களிடம் கேட்டார் இமான் அண்ணாச்சி. அதற்கு... இதயம், நுரையீரல், நிலம், நீர், காற்று என ஆளாளுக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்ல, 'அப்படியா?' என்று வழக்கம்போலவே நக்கல் அடித்துக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. சுற்றி நின்றவர்கள் 'கொல்' என்று சிரித்தனர். நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத்தான் வேதனையாக இருந்தது. மிகமிக அடிப்படையான இந்தக் கேள்விக்குகூட... 'மெய், வாய், கண், மூக்கு, செவி'  என்கிற பதிலை தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்களே மக்கள்?'' என்று நொந்துகொள்கிறார் சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி சிவசங்கரன்.