மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

பெங்களூருல ரச்சிதா...சென்னையில் மகா !கேபிள் கலாட்டா! படம்: ஜெ.வேங்கடராஜ்

 ரிமோட் ரீட்டா

##~##

சேனல் பக்கத்துக்கு யாரை எல்லாம் பார்க்கலாம்னு, ரிமோட்டோட டி.வி முன்ன அப்பப்ப உட்கார்ந்து பார்த்ததுல... விஜய் டி.வி 'பிரிவோம் சந்திப்போம் - சீஸன் - 2’ மகாலட்சுமி, ஜீ தமிழ் 'துளசி’ சீரியல்ல வர்ற சந்திரா லட்சுமணன், ஆதித்யா சேனல் 'சின்னவனே பெரியவனே’ நிகழ்ச்சியில பட்டையைக் கிளப்பற 'நாக்க முக்கா’ செந்தில் - திருச்சி சரவணகுமார்... லிஸ்ட் ரெடி!

முதல் போணி, பெங்களூரு பொண்ணு மகாலட்சுமி! ''பெங்களூருல எல்லாம் சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல வெளிய போக முடியல... அவ்ளோ பனி. ஆனா, சென்னையில 8 மணி வரைக்கும் ஷூட் நடக்குது. இங்க க்ளைமேட் சூப்பர்தான் ரீட்டா!''னு சிரிச்சவங்ககிட்ட,

''எல்லாம் ஓ.கே... ஆனா, ரச்சிதாங்கிற பெயர்... எப்போ மகாலட்சுமினு மாறிச்சு..?''னு கேட்டேன்.

''ஆஹா... உன் காதுக்கும் சங்கதி வந்து சேர்ந்துருச்சா..! பெங்களூருல நான் அதே ரச்சிதாதான். ஆனா, சென்னையில, தமிழ்நாட்டு மக்களுக்குப் பிடிக்கிற விதமா இருக்கணும்னு, மகாலட்சுமினு மாத்திக்கிட்டேன். இனி நீ என்னை 'மகா'னுதான் கூப்பிடணும்.... ஆமா'' என்று கண்டிஷன் போட்ட மகா,

கேபிள் கலாட்டா

''இன்னொரு விஷயம் தெரியுமா? முன்ன எல்லாம் பாதி நாள் சென்னை, பாதி நாள் பெங்களூருனு பறந்துட்டு இருந்தேன். இப்போ சென்னையிலயே வீடு எடுத்துத் தங்குற அளவுக்கு தமிழ் உலகம் என்னை தத்தெடுத்துடுச்சு. 'பிரிவோம் சந்திப்போம் - 2’, சன் டி.வி 'இளவரசி’ சீரியல்னு பிக்-அப் ஆகியிருக்கு. 'இளவரசி’யில என்னோட ஒரிஜினல் கேரக்டர் போலவே பப்ளி ரோல்!''னு பெரிய கண்களை உருட்டினாங்க மகாலட்சுமி!

'ஜோதி’ வந்தாச்சு!

ஆதித்யா சேனல்ல தினமும்  மாலை ஐந்து மணிக்கு ஒளிபரப்பாகுற 'சின்னவனே... பெரியவனே’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கற 'நாக்கு முக்கா’ செந்தில் மற்றும் திருச்சி சரவணகுமார், சூப்பர் காமெடி ஜோடி! ரெண்டு பேரும் காலேஜ்ல இருந்து ஃப்ரெண்ட்ஸ் என்பது, ஆச்சர்ய செய்தி! ''சின்ன வயசுல இருந்தே நக்கல், குசும்புனு வளர்ந்த நாங்க ரெண்டு பேரும், திருச்சியில ஒரே காலேஜ்ல படிச்சோம். மிமிக்ரி, நகைச்சுவை டிராமானு ஒரு மேடையையும் விட்டு வைக்கிறதில்ல. நான் எங்க போனாலும் 'நாக்கு முக்கா’ பாட்டைப் பாடி கிளாப்ஸ் வாங்கிடுவேன். அதனாலதான் அந்த  அடைமொழி என் னோட ஒட்டிக்கிச்சு!

கேபிள் கலாட்டா

'திருச்சி போதும்... வா, சென்னைக்குப் போவோம்...’னு ரெண்டு பேரும் கிளம்பி வந்தோம். ஆதித்யா சேனல் ஆடிஷன்ல கலந்துகிட்டோம். ஆதித்யாவுல 'சின்னவனே... பெரியவனே’ நிகழ்ச்சியும், திண்டுக்கல் சரவணனோட சேர்ந்து கலக்குற 'டாடி ஒரு டவுட்’ நிகழ்ச்சியும்  போய்க்கிட்டுஇருக்கு!''னு செந்தில் தன் வரலாறு சொல்ல, தொடர்ந்தார் சரவணகுமார்.

''ஜெயா டி.வி-யில 'உங்க ஏரியா உள்ள வாங்க’ நிகழ்ச்சிதான் என்னோட ஃபர்ஸ்ட் என்ட்ரி ரீட்டா. பிறகு, 'சன்’ல 'அசத்தப்போவது யாரு’, 'கலைஞர்’ல 'எல்லாமே சிரிப்பு தான்’னு ஒரு ரவுண்டு வந்துட்டு... இப்போ ஆதித்யாவுல 'சின்னவனே... பெரியவனே’ நிகழ்ச்சியில வந்து நிக்கிறோம். நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த ஷோ. 300 எபிசோடுகளுக்கும் மேல கலக்கிட்டோம்!

கேபிள் கலாட்டா

காமெடி என்னன்னா... எங்க ரெண்டு பேர்ல யார் சின்னவன், யார் பெரியவன்னு பலருக்கும் டவுட். அதுக்கு மெயின் ரீஸன், நம்ம உடம்பு கொஞ்சம் வெயிட்டா இருக்கறதுதான். நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியும்னு நினைக்கிறேன்?''னு சரவணகுமார் நக்கலாகச் சொல்ல,

''போடா கி.மு-ல பொறந்தவனே!''னு செந்தில் அவரைக் கலாய்க்க, 'சின்னவனே... பெரியவனே' ஷோ பிரத்யேகமாக 'லைவ்' ஆக ஆரம்பித்தது!

கலக்குங்க பிரதர்ஸ்!

'கோலங்கள்’, 'காதலிக்க நேரமில்லை’, 'வசந்தம்’, 'காக்கி’, 'மகள்’னு பல காலமா சின்னத்திரையோட நெருக்கமான தோழியா இருக்கிற சந்திரா லக்ஷ்மண், இப்போ சன் டி.வி-யில 'சொந்த பந்தம்’, ஜீ தமிழ் சேனல்ல 'துளசி’னு அசத்திக்கிட்டிருக்கிறாங்க.

''பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ரீட்டா...''னு நலம் விசாரிப்போட ஆரம்பிச்ச சந்திரா...

''கேமராவுக்கு முன்ன நிக்க ஆரம்பிச்சு 12 வருஷங்கள் ஆச்சு ரீட்டா. இப்போ தமிழ்ல ரெண்டு சீரியல் மற்றும் தெலுங்குல 'மமத்தல்ல கோவிலா’ சீரியல்னு போயிட்டிருக்கு. அந்த சீரியலோட தமிழ் வெர்ஷன்தான் சொந்தபந்தம். அங்க அது 400 எபிசோடுகள் கடந்து போய்க்கிட்டிருக்கு ரீட்டா... பயங்கர ஹிட்! அந்த தெம்புலதான் தமிழ்லயும் ஆரம்பிச்சு, இப்போ 70 எபிசோடுகள் முடிஞ்சுருக்கு. அதேபோல 'துளசி’ சீரியலும் நல்ல டீம். சமீபத்துல அதோட ஷூட்டுக்கு சஞ்சீவ், ஸ்ரீ, நீபா, ஷபர்ணானு டீமோட பாங்காங் போயிட்டு வந்தது, சூப்பர் அனுபவம்!''னு சந்தோஷப்படுற சந்திராவோட அம்மா, ஒரு மியூரல் ஆர்ட்டிஸ்ட்.

''அவ்ளோ அழகா பெயின்ட்டிங் பண்ணுவாங்க. 'மியூரல் ஆரா’னு பொட்டிக் ஷாப்பே வெச்சுருக்கோம். அதை பெருசா டெவலப் பண்ணி, பிஸினஸ் பொண்ணா வளரணும்கிறதுதான் எதிர்கால திட்டம்!''னு கண் அடிச்சாங்க சந்திரா.

வாழ்த்துக்கள் மேம்!

 வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

150

ஏற்க முடியவில்லை!

''சன் டி.வி 'சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியில் சுகி.சிவம், சில கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார். அந்த வகையில், 'ஒரு தாய், தன் குழந்தைகளைப் போற்றிக் காப்பது ஒன்றும் அதிசயமில்லை. தான் பெற்ற குழந்தைகளைத்தானே பார்த்துக் கொள்கிறாள். அது அவளுடைய கடமைதானே! குழந்தைகள், தாயிடம் தங்களை உருவாக்கச் சொல்லவில்லையே. மேலும் பறவைகள், மிருகங்கள்கூடத்தான் தங்கள் குஞ்சுகளைப் போற்றிப் பாதுகாக்கின்றன’ என்கிற ரீதியில் ஒரு நாள் கருத்து சொன்னார். ஆனால், இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிருகங்கள், கடைசி வரை ஒன்றாக சார்ந்திருப்பதில்லையே. மனிதர்கள்தானே, இறக்கும்வரையிலும் ஏதாவது ஒரு பந்தத்தில் கட்டுண்டு கிடக்கிறோம். அப்படியிருக்க, தாயின் பெருமையை குறைத்துப் பேசுவது போல் இருக்கிறது... சுகியாரின் கருத்து!'' என்று வருத்தம்காட்டுகிறார் போரூரைச் சேர்ந்த சாவித்திரி விஸ்வநாதன்.

பெண்களுக்கு மட்டுமா கற்பு?

''சமீபத்தில் புதிய தலைமுறை டி.வி-யில், டெல்லி மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து கவிஞர்கள் நந்தலாலா, சல்மா மற்றும் திருமுருகன் கலந்துரையாடினர். அதில், 'பெண்களுக்கு மட்டுமா கற்பு?' என்ற விவாதத்தில் மூவரும் கூறிய கருத்துக்கள் மிகமிக ஏற்புடையதாகும். 'மக்களின் மதிப்பீடுகள் மாறவேண்டும். ஆண்களுக்கு சமமாக பெண்கள் கருதப்பட வேண்டும். பெரியாருடைய கருத்துக்களை மக்கள் புரிந்து கொண்டிருந்தால்... இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நீடித்திருக்காது' என இறுதியில் கூறி முடித்தனர். நல்லதொரு நிகழ்ச்சி!'' என்று பாராட்டுகிறார் திருச்சியைச் சேர்ந்த சங்கீதா.