Published:Updated:

சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்

Vikatan Correspondent
சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்
சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் ஐந்தின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. ஒருசில நிமிட இடைவெளியில் தொலைக்காட்சியில் நீங்கள் கண்டுகளித்திருந்தாலும், நேரில் பார்ப்பதற்கும் நேரலையில் பார்ப்பதற்கும் பற்பல வேறுபாடுகள் உண்டு. (இளையராஜா 1000 ஒளிபரப்பப்படும்போது இந்த வேறுபாடு பற்றி விரிவாகப் பேசலாம்)

அதன்படி நேரில் நடந்தவைகளைத் தொகுத்திருக்கிறோம். நேரில் ரசிக்கப்பட்டவை, கடுப்பானவையையும் கொடுத்திருக்கிறோம்!

ஐயையையோ.. ஆரம்பமே

சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்

று மணியிலிருந்து ரசிகர்கள் கூட ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் தொடங்கியது நிகழ்வு.  ‘சூப்பர் சிங்கர் ஃபேமலி’ சிவசக்த்யா.. என்று தொடங்கி சக்தி கொடு என்று பாடி முடித்தனர், உஷா உதூப்தான் இந்தக் கூட்டத்தினரை உற்சாகமூட்ட சரியான சாய்ஸ் என்று தெரிந்து வைத்திருந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அஜெண்டா படி, அவர் மேடையேறுகிறார். ‘பம்பரக்கண்ணாலே.. காதல்’ என்று அவர் தொடங்க ‘சங்கதி சொன்னாளே’ என்று கூட்டத்தினரைக் கூடவே பாட வைக்கிறார். தீதி, கலக்கீட்டேள் போங்கோ!

மகாபா ஆனந்த், ப்ரியங்கா, பாவனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். வழக்கம்போலவே மகாபாவின் கலாய்த்தல் கமெண்ட்ஸுக்கும் கைதட்டல்கள். ‘வாய்ஸ் ரெஸ்ட் சிங்கருக்குத்தானே சொன்னார் அனந்த வைத்தியநாதன் சார்.. ஆடியன்ஸும் ஏன் இப்படி யோகா க்ளாஸ்ல ஒக்கார்ற மாதிரி உம்ம்ம்ம்முன்னு உட்கார்ந்திருக்காங்க’ என்று அவர்களையும் கலாய்த்தார்.

முதல்சுற்றில் ஃபரிதா ‘பழம் நீயப்பா’, ராஜகணபதி ‘அறுபடை வீடுகொண்ட’, சியாத் ‘ராசாத்தி. என் உசுரு’, லக்‌ஷ்மி ‘எங்கே எனது கவிதை + மார்கழித் திங்களல்லவா’, ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் ‘வேதம்.. அணுவிலும் ஒரு நாதம்’ அகிய பாடல்களைப் பாடினர். ஒவ்வொரு பாடல் முடிவிலும் அவர்களை நேசிக்கும் மக்களின் வீடியோ பதிவு போடப்பட்டது.

களத்தில் கலக்கிய ஸ்டீஃபன் தேவஸி

சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்


இரண்டாவது சுற்று ஆரம்பிப்பதற்கு முன்னால் இறங்கினார் ஸ்டீஃபன் தேவஸி. கூட்டத்தினர் சாமியாடிய  அவரது ஐந்து நிமிட நிகழ்வுக்குப் பின் சூப்பர் சிங்கர் ஜூனியரான பரத் மேடைக்கு வந்து வேலையில்லா பட்டதாரி பாடலைப் பாடினார்.

இரண்டாவது சுற்றில் லக்‌ஷ்மி ‘மோனா மோனா மோனா’, ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் ‘அன்பின் வாசலே’, ராஜகணபதி, ‘அடியே அடியே எனை எங்க நீ.. + ஆலுமா டோலுமா’, சியாத் ‘விடுகதையா + மோகம் என்னும் தீயில்’, ஃபரிதா ‘சரிகம பதநிசே’ ஆகிய பாடல்களைப் பாடினர்.

அதன்பின் ADK (ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்) நீருஜன் (மகுடி மகுடி), சித் ஸ்ரீராம் (தள்ளிப்போகாத), கனா பாலா (அவரது பாடல்களின் தொகுப்பு), பென்னி தயாள் (ஊர்வசி ஊர்வசி), விஜயப்ரகாஷ், ஹரிப்ரியா, சத்யப்ரியா, அர்வின் விக்டோரியா மனோ (ஏஞ்சோடி மஞ்சக்குருவி) ஆகியோரின் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பரிசு அறிவிக்கப்பட்டது.

வின்னர்ஸ்

சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்


வெகுநேரக் காத்திருத்தலுக்குப் பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. டாப் ஐந்திலிருந்து, சியாத், லக்‌ஷ்மி ஆகியோர் வெளியேறுகிறார்கள் என்று அறிவித்தார்கள். சியாத்திற்கு, - 2 லட்சமும், லக்‌ஷ்மிக்கு 3 லட்சமும் வழங்கப்பட்டது.

ராஜகணபதி நடுவர்கள் மதிப்பெண்களில் முதலிடத்தில் இருப்பதால் அவர் பத்து லட்சம் பரிசுடன் ‘நடுவர்களின் தேர்வு’ என அறிவிக்கப்பட்டார்.

 ஃபரிதா இரண்டாமிடத்தையும் (10 லட்சம்), ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் 70 லட்சம் வீடையும் தட்டிச் சென்றனர்.

 நேரடி நிகழ்வில் மக்கள் ஆரவாரித்த டாப் 5 மொமண்ட்ஸ்:-

இளையராஜா ஆயிரம் போன்று மிக அதிகக் கட்டணமெல்லாம் இல்லை. (அதிகபட்சம் 3000) வளவள பேச்சுக்கள் இல்லை. ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும், நேரடியாகப் பார்க்க வந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமொன்றுமில்லை. இந்நிகழ்வில் மக்கள் மகிழ்ந்த டாப் 5 மொமண்ட்ஸ்;

1) ஸ்டீஃபன் தேவஸி விரல்களால் பியானோவில் ஜெய்ஹோ, மாங்குயிலே என்று கபடி விளையாடிய நிமிடங்கள்.

2) ‘அடியே அடியே.. எனை எங்க நீ கூட்டிப்போற என்று பாட ஆரம்பித்த ராஜ கணபதி ஸ்டீஃபன் தேவஸி களத்தில் இறங்க.. பாடிய ‘ஆலுமா டோலுமா’

3) சியாத் பாடிய ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ + ’மோகம் என்னும் தீயில்’ ஃப்யூஷன்

4) சித் ஸ்ரீராம் + ADK தினேஷ் (ராப்) பாடிய ‘தள்ளிப்போகாதே..’ - மாஸ் அள்ளிய நிகழ்வு இதுதான்!

5) கானா பாலா தொடங்கும்போது சூப்பர் சிங்கருக்காக பாடிய குட்டிப்பாடல் (வரிகள் கீழே)

மொத்தம் அஞ்சு பேரு -மோதி
ஜெயிப்பதிங்கு யாரு
சூப்பர் சிங்கர் ஜோரு -விஜய்
டிவில பாரு


சுதியப் பிடிச்சு பாடணும்டா பாட்ட.. கொஞ்சம்
மெர்சனாலா விட்டுடுவான் கோட்டை
உங்கள நம்பி நெறைய பேரு போட்டோம் ஓட்டை
இன்னும்கொஞ்ச நேரத்துல கொடுக்கப்போறாங்க வீட்டை!

கடுப்பான 5 மொமண்ட்ஸ்:-


1. ஆறு மணி நிகழ்ச்சியை ஆறேமுக்காலுக்குத் தொடங்கியதற்கு ரசிகர்கள் சிலர் உச்சுக் கொட்டினாலும், ‘ஏப்பா.. இருட்ட வேணாமா? அப்பத்தானே கலர்ஃபுல்லா இருக்கும் பார்க்க?’ என்று சக ரசிகர்களே விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

2. மொத்தம் இரண்டே சுற்றுகள்தான். இரண்டாவது சுற்றில் மூன்றாவது பாடகர் பாடிக் கொண்டிருந்தபோதுகூட (மணி பத்தை நெருங்கியிருந்தது) வந்து ‘என் சீட் நம்பர் எங்கிருக்கு’ என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிக சிகாமணிகள்.

3. ‘ராசாத்தி என் உசுரு என்னுதில்ல’ மற்றும் ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ இரண்டையும் பாடி நெகிழ வைத்திருந்தார் சியாத். ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக பின்னுக்குத் தள்ளப்பட்டதை பலர் விரும்பவில்லை.

4. ‘இதோ இன்னும் சற்று நேரத்தில்’.. ‘இதோ இன்னும் சில நிமிடங்களில்’ என்று கிட்டத்தட்ட இரண்டு சுற்றுகள் முடித்த பிறகும் இரண்டு மணிநேரம் இழுத்தது.

5. பாடகர்கள் பாடிமுடித்து வலிக்க வலிக்க கைதட்டிய பிறகும், தொகுப்பாளர்கள் மேடைக்கு வந்து  ‘மீண்டுமொருமுறை கரகோஷங்களை எழுப்புங்கள்!’ என்கிற பாணியில் ஒவ்வொரு பாடகருக்கும் திரும்பத் திரும்பச் சொன்னது.

டெய்ல் பீஸ்: இதுமாதிரி நிகழ்வுகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக இரண்டு வேளைக்கு டிஃபன் பாக்ஸ் எடுத்துச் செல்லவும்.அடிக்கடி வெளியில் போய் ஸ்நாக்ஸ் வாங்கி, முக்கிய நிகழ்வை மிஸ் பண்ணாமல் இருக்கலாம்!

சத்ரியன்