Published:Updated:

'ஆண்கள்னா அப்படித்தான்... பெண்கள்னா இப்படித்தான்!' - இது நந்தினி லாஜிக்

'ஆண்கள்னா அப்படித்தான்... பெண்கள்னா இப்படித்தான்!' - இது நந்தினி லாஜிக்
'ஆண்கள்னா அப்படித்தான்... பெண்கள்னா இப்படித்தான்!' - இது நந்தினி லாஜிக்

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் அடாவடியாக நடிக்கும் பொண்ணு நந்தினிக்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம். வம்சம் சீரியல், கிச்சன் சூப்பர் ஸ்டார் போட்டியாளர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் என நந்தினி செம பிஸி. இப்போ ஒரு நாள் கூத்து படம் மூலம் சினிமாவுக்கும் நல்வரவு. திருமணமாகி நான்கு நாள் தான் ஆகிறது என்ற டபுள் குஷியில் இருந்தார்.

திருமண வாழ்த்துகள் நந்தினி? என்ன தீடீர்னு யாருக்குமே சொல்லாம கல்யாணம்?

“ யாருக்கும் சொல்லலியா , நீங்க வேற இப்ப நினைச்சாலும் கனவு மாதிரி இருக்கு. காதலிக்க ஆரம்பிச்ச நான்கு நாளில் அவரு வீட்டுல பேசிட்டாரு. உடனே ஓகே சொல்லிட்டாங்க. அடுத்து பெரிய கேப்லாம் குடுக்கல. நிச்சயதார்த்தம், அடுத்த நாள் கல்யாணம். இதோ அவரு வேலை விஷயமா துபாய் கிளம்பிட்டாரு. இப்போ நாலு நாள் ஆச்சு. தலைவனைப் பிரிந்த தலைவியா சின்னதா செல்லமான சோகத்துல இருக்கேன்!”

அப்போ இந்த ரிசெப்ஷன், பார்ட்டி இதெல்லாம் கிடையாதா? உங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எப்படி எஸ்கேப் ஆகப் போறீங்க?

” அது இல்லாம எப்படி.. 20 நாள் கழிச்சு கார்த்தி ஊர்ல இருந்து வந்தோன ரிசெப்ஷன். ஆனா எப்போ எப்படின்னு இன்னும் பிளான் பண்ணல!”

கார்த்தி பத்தி சொல்லுங்களேன்?

“ செம கேரக்டர். நான் போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம் தான் கார்த்தி எனக்குக் கிடைச்சுருக்காருன்னு சொல்வேன். அவ்ளோ என் மேல பாசம், லவ். ஆனா லவ்வ சரியா காட்டத் தெரியாது. எனக்கு ஒண்ணுனா பதறிடுவாரு. செலிபிரிட்டி ஜிம் டிரெய்னர்!”

உங்க அப்பா, அம்மா பத்தி சொல்லுங்களேன்?

“ அப்பா , அம்மா ரெண்டு பேரும் ஒரு சாதாரண ஜவுளிக் கடையில் சேல்ஸ் வேலை பாக்கற நார்மல் ஃபேமிலி. மதுரை சிம்மக்கல் . படிச்சது வொர்க் போர்டு(வக்பு வாரியம்) காலேஜ். பி.பி.ஏ படிச்சிருக்கேன். நான் மீடியா எண்ட்ரீன்னு சொன்ன உடனே, அப்பா, அம்மா முழு சப்போர்ட். ஆனா மதுரையாச்சே சுத்தி இருந்த அம்புட்டு பேரும் பஞ்சாயத்துக் கிளப்பினாய்ங்க. அப்புறம் எப்படியோ வம்சம் சீரியல்ல நடிச்சேன். அப்படியே மீடியாக் குள்ள பிரபலமானேன்!”

ஓ..அதான் மதுரப் பொண்ணா ஒரு நாள் கூத்து படத்துல வெளுத்து வாங்கினீங்களா?

“ ஓ நீங்க படம் பார்த்துட்டீங்களா… நான் இன்னும் பார்க்கல. கல்யாணம், இவரு ஊருக்கு கிளம்பின களேபரம்னு என்னோட சீன் படத்துல இருக்கான்னு கூட தெரியாம இருக்கேன் பாருங்க!”

சரி ஆண் – பெண் அப்படின்னா பொதுவா உங்க கருத்து என்ன?

“ ஒண்ணு சொல்லட்டுமா. ஆம்பள ஆம்பள தான் , பொம்பள பொம்பள தான். என்ன செஞ்சாலும் , எந்தக் காலத்துக்குப் போனாலும் மாத்த முடியாது. பொண்ணுங்க சில இடங்கள்ல கட்டுப்பாடா இருக்கணும்னா இருந்துதான் ஆகணும். அத விட்டுட்டு சும்மா புரட்சி பேசிகிட்டு இருக்கறது சுத்த வேஸ்ட். இது என்னிக்கும் மாறப் போறதில்ல. அப்படியே அந்த மாற்றமும் நம்ம வாழ்க்கை முன்னேற்றமா இருக்கணும். ஆடை குறைச்சல்ல முன்னேற்றம் இருக்கக் கூடாது. பொதுவாவே நம்ம சமுதாயம் ஆண்களுக்குன்னு ஒரு நியாயத்த வகுத்து வெச்சுருக்கு. அதத் தாண்டி சமமா இருன்னு சொன்னா அவங்களுக்கும் கஷ்டமாதான் இருக்கும். ஒருவேள மாறலாம் கொஞ்சம் லேட் ஆகும்!”

ஒரு நாள் கூத்து படத்துல முதல் பாதியில ஆண்கள நல்லவங்கன்னு சொன்ன நீங்களே அடுத்தப் பாதியில கெட்டவங்கன்னு சொல்லியிருக்கீங்களே? உங்க சொந்தக் கருத்து என்ன?

“ ஆண்கள் பிறப்புலயே கொஞ்சம் சுயநலவாதிகள். அவங்கள சொல்லிக் குத்தமில்ல. ஆண் பிள்ளைய ஒரு டைப்லயும், பெண் பிள்ளைய ஒரு டைப்லயும் பிறந்தது இருந்தே டியூன் பண்ணிடறாங்க. அதனால அவங்க முதல்ல தன்னோட சந்தோஷம், தன்ன சுத்தின்னு தான் பார்ப்பாங்க. பொண்ணுனா பொறுமையா இருக்கணும்னு பெண்களுக்கும், ஆம்பள சிங்கம் மாதிரி இருக்கணும்னு சொல்லிக் குடுத்தா எப்படி மாத்திக்க முடியும். ரொம்பப் பொதுவுடமையா சிந்திச்சு நடக்குற ஆண்கள் ரொம்பக் கொஞ்சமா தான் இருக்காங்க. என்ன ஒண்ணு அவங்க சுயநலம் அவங்களோட குடும்பம், மனைவி, குழந்தைங்கன்னு இருக்கும். அந்த வகையில பாராட்டலாம்!”

அப்போ ஆண்கள் சுயநலம் நல்லதுதானே, அவங்க குழந்தைகள், மனைவி அம்மா, அப்பான்னு இருக்கறது தப்பில்லையே?

“ அதையே தான் சொல்றேன். அவங்க தங்கச்சி, மனைவி, அம்மாவும் பாதுகாப்பா இருக்கணும்னு நினைக்கிற அதே சமயத்துல, அடுத்த வீட்டுப் பொண்ணுங்களோட பாதுகாப்பையும் பார்க்காம விடறதுனால தான் நாட்ல இன்னிக்கு பெண்களுக்கு கொடுமை அதிகமா நடக்குது. அதுக்காக எல்லா ஆண்களையும் சொல்லல. ஆனா இப்படியே போனா இன்னும் அதிகமாகும். ஆண் குழந்தைகள் தப்பா போறதுக்கும் வீட்டுப் பெண்கள் தான் காரணம். பிறந்ததுல இருந்தே அம்மாக்கள் அவங்களுக்கு பொதுநலம் சொல்லிக்குடுங்க அது போதும்!”

அப்போ பெண்கள் எப்படி தான் இருக்கணும்?

“ இந்த உலகம் ஆண்களுக்கு தான் பெரும்பாலும் சாதகமா இருக்குன்னு நமக்கே தெரியும் அப்புறம் ஏன் ரிஸ்க் எடுக்கணும். இப்போ இருக்கற காலத்துப் பெண்கள் முடிஞ்ச வரைக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் நெருக்கமான உறவுக்கு இடம்னு குறிக்கோளோட இருந்தாலே போதும். ஏன்னா எவ்ளோ நல்ல பையன்னாலும். எதாவது ஒரு பிரச்னைல சுத்தி இருக்கற ஃப்ரெண்ட்ஸ் பேச்சக் கேட்டுக்கிட்டு அவ தப்பானவதான்னு சொல்லிட நிறைய வாய்ப்பு இருக்கு. அதுக்காக கற்பு, கண்ணகின்னு நான் சொல்ல வரல. எதார்த்த வாழ்க்கைக்கு சில பாதுகாப்புகள நமக்கு நாமளே போட்டுக்கிறது தப்பில்ல. தீ’ன்னு தெரியும் எதுக்கு கைய வெச்சுக்கிட்டு அப்புறம் புரட்சி பேசிக்கிட்டு!”

ஆகா.. இவ்ளோ சீரியஸா போகுதே சரி சொல்லுங்க ஏன் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில இருந்து விலகிட்டீங்க?

“ நான் சொல்லாம இன்னொரு சேனல் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அதனால கொஞ்சம் வெளியேற வேண்டியதாப் போச்சு. அதுக்காக விஜய் டிவிய நான் தப்பு சொல்ல மாட்டேன். விஜய் டிவி எனக்கு ஒரு அம்மா வீடு மாதிரி. நான் சொல்லாம போனது என்னோட தப்பா நான் எடுத்துக்கிட்டேன்!’

ஊருக்குப் போனோன போன் பண்ணினாரா?

“ அத ஏன் கேட்கறீங்க. அங்க போயிட்டு போன்ல கூட பேச முடியாதுன்னு போன என் கிட்ட குடுத்துப் போயிருக்காரு. இன்னொன்னு பேசினாக் கூட என் குரல் கேட்டா அப்புறம் பாதி வேலைல ஓடி வந்துடுவாராம். அப்படி ஒரு லவ்!”

நூறுவருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்…

ஷாலினி நியூட்டன்