Published:Updated:

'அஜித் என்னை ‘குட்டி குஷ்பு'னு சொன்னாரே!' -செம குஷி ஸ்வேதா

'அஜித் என்னை ‘குட்டி குஷ்பு'னு சொன்னாரே!' -செம குஷி ஸ்வேதா
'அஜித் என்னை ‘குட்டி குஷ்பு'னு சொன்னாரே!' -செம குஷி ஸ்வேதா

ந்திரலேகா, லட்சுமி வந்தாச்சு சீரியல்களின் நாயகி.. ஸ்வேதா. இது தற்போதைய அறிமுகம். ஆனால் ’ஆழ்வார்’ படத்தில் அஜித் தங்கையாக நடித்தவர். இப்படி சொன்னால் உங்கள் கண்கள் விரியும்.
’நான்தான் பாலா’, ’வள்ளுவன் வாசுகி’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இப்போது முழுநேர தமிழ் சீரியல் நாயகி...

வழக்கமா சீரியல் டூ சினிமாதான். நீங்க ரிவர்ஸ். எப்படி இருக்கு?

“சினிமா எப்போதாவது ஒரு படம் வரும், ஆனால் டிவி அப்படி இல்ல. தினம் தினம் டிவியில வருவோம், அதுவும் வீட்டுப் பெண்கள் கிட்ட ரொம்ப ஈஸியா நெருங்க முடியும். எனக்கு சினிமாவுல நடிச்சப்போ கூட இவ்ளோ பிரபலம் கிடைக்கல. இப்போ எங்க போனாலும் நீங்க சந்திரா தானேன்னு கேட்கறாங்க!

இப்போ என்னென்ன சீரியல்ல நடிக்கிறீங்க?

“ சன் டிவியில சந்திரலேகா. சந்திரா என்னோட கேரக்டர். அதுல எனக்கு தைரியமான ரிப்போர்ட்டர் ரோல். லட்சுமி வந்தாச்சு சீரியல்லயும் எனக்கு இன்னொரு நாயகி கேரக்டர். வாணி போஜன் ஒரு நாயகி. எங்க ரெண்டு பேர் பேரும் லட்சுமி தான்!”

ஸ்வேதா - சிறுகுறிப்பு வரைக.

“பிறந்தது வளர்ந்தது புனே. பி.டெக் எம்.பி.ஏ படிச்சிருக்கேன். அப்பா அக்கவுன்டன்ட், அம்மா ஆசிரியை. தம்பி +2. எனக்கு நடிப்பு தான் ரொம்பப் பிடிக்கும்!”

பி.டெக், எம்.பி,ஏ படிச்சிட்டு சினிமா என்ட்ரி, வீட்ல ஓகே சொல்லிட்டாங்களா?

”அவங்களோட ஒரே கண்டிஷன் ‘படிச்சு முடிச்சுட்டு நடிப்பு’ -ங்கறதுதான். மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். அப்போ தான் அஜித் சார் படத்துல தங்கச்சி. அதுவும் ரொம்ப முக்கியமான ரோல். தலைக்குத் தங்கச்சின்ன உடனே ஓகே சொல்லிட்டேன். அப்புறம் வள்ளுவன் வாசுகி, நான் தான் பாலா ஆகிய படங்கள் பண்ணினேன்!”

அஜித் என்ன சொன்னாரு? பல வருஷம் ஆச்சே திரும்ப அஜித்த பாத்தீங்களா?

“ எனக்கு அவர பார்த்த உடனே மைண்ட் ப்ளாக் ஆயிடுச்சு. ஏதோ பேசிட்டு இருக்காரு. ஆனா என்ன பேசினாருன்னே தெரியல. ஒண்ணே ஒண்ணு மட்டும் இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு. “ நீ குட்டிக் குஷ்பூ மாதிரி இருக்கே’னு சொன்னாரு. பயங்கர கலரு,  ரொம்பப் பணிவு. ஆனா கடைசி வரைக்கும் என்ன சொன்னாருன்னு தெரியல. அந்தப் படத்துல பார்த்ததுக்கப்பறம் எனக்கு நேர்ல பார்க்கற வாய்ப்பே இல்ல!”

’ஆழ்வார்’ படத்தில் அஜித்துடன்

இப்போ அஜித் பார்த்தா என்ன சொல்லுவீங்க?

“ ‘சார்.. நான் உங்க தங்கச்சி’ம்பேன். ஆழ்வார் படத்துல! ஒருவேள ஞாபகம் வரலைன்னா சார் நான் உங்க பெரிய ஃபேன்னு சொல்லி செல்ஃபி எடுத்துட்டு வந்துடுவேன்!”


இப்போ படங்கள் நடிக்க ஆர்வம் காட்றதே இல்லையே?

“ இப்பவும் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனால் எனக்கு சீரியல் கரெக்டா செட் ஆயிடுச்சு. ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்னா ஓகே சொல்லிடுவேன்!”

சினிமா , சீரியல் வொர்க்கிங் டைம் எப்படி? என்ன வித்தியாசம்?

“ சினிமாவுல ஒரு நாளுக்கு ஒண்ணு அல்லது ரெண்டு சீன் போகும். பல மணிநேரம் சும்மா உக்காந்துகிட்டு இருப்போம். ஆனா இங்க அப்படி இல்ல ஒரே டைம்ல நாலு , அஞ்சு சீன் போவாங்க. எனக்கும் பிஸியாவே இருக்கற மாதிரி இருக்கும்!”

உங்களோட வொர்க் லைஃப் பேலன்ஸ் பத்தி சொல்லுங்களேன். சமீபகாலமா டிவி பிரபலங்கள் வாழ்க்கைல நிறைய பிரச்னைகள் இருக்கே?

“ என்ன சொல்ல. ரொம்ப வருத்தமா இருக்கு. தற்கொலை கோழைத்தனம்னெல்லாம் சொல்ல மாட்டேன். நமக்குக் குடுத்த உயிர நாமளே போக்கிக்கணும்னா அதுக்கு ஒரு அசால்ட் தைரியம் வேணும். ஆனா எப்படி அந்த முடிவ எடுக்கறாங்க. அந்த அளவுக்கு அவங்க வாழ்க்கை ஏன் இவ்ளோ சிக்கலா இருக்குன்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு. ஆனா ஒரு நிமிஷம் நம்மள சுத்தி இருக்கற நட்பு, உறவு, நமக்குக் கிடைச்ச பேரு எல்லாத்தையும் சிந்திக்கணும். வேலையையும் , சொந்தப் பிரச்னையும் குழப்பிக்கக் கூடாது. எவ்வளவோ வேலை இருக்கு. ஒரு வருஷம் கஷ்டப் படுவோமா. அதுக்காக ஏன் விபரீத முடிவு. அடுத்த ஜென்மம் இருக்கா இல்லையான்னு தெரியல. கிடைச்ச இந்த ஜென்மத்துல சந்தோஷமா இருப்போம். ஞானி மாதிரி பேசுறதா நினைக்காதிங்க. உங்கள சுத்தி இருக்கற சின்னச் சின்ன விஷயங்கள ரசிக்க ஆரம்பிங்க வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும். நான் அதான் செய்யறேன். சின்ன இடைவெளி கிடைச்சாலும் தம்பி, அல்லது ஃப்ரெண்ட்ஸோட ஊரு சுத்துவேன். என்னைச் சுற்றி தனிமையே இல்லாத அளவுக்கு பார்த்துப்பேன்!”


நீங்களே நல்லா பேசுறீங்களே.. அப்புறம் ஏன் சீரியல்ல டப்பிங் குரல்?

“ நீங்க வேற நான் இந்த அளவுக்கு பேசுறதே சீரியல், தமிழ் சேனல்களால தான். என் குரல் கொஞ்சம் மாடுலேஷன் போகும் போது க்ரீச்னு இருக்கும். ஆனா கண்டிப்பா மாத்தணும்.கூடிய சீக்கிரம் டப்பிங் பேசுறேன்!”

நிறைய சீரியல் நடிகர்கள் தொகுப்பாளர் ஆகறாங்களே... நீங்களும் முயற்சிக்கலாமே?

“ ஹ்ம்ம்.. என்னைக் கலாய்க்கறீங்களா? இன்னும் எனக்கு சாதாரணமாப் பேசறப்பவே சில தமிழ் வார்த்தைகள் கபடி ஆடுது..  இதுல தொகுப்பாளினியா! அதுக்கு இன்னும் நிறைய பயிற்சி தேவை. அந்த வாய்ப்பு ஒரு தடவை வந்துச்சு. அப்போ, இந்த அளவுக்குக் கூட தமிழ் பேசமாட்டேன்.  அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இருந்தாலும் உங்க கேள்விய நான் மைண்ட்ல வெச்சுக்கறேன்!”

நீங்க ஒரு வட இந்தியப் பொண்ணு. வட இந்திய சீரியல் தமிழ் சேனல்கள்ல நடத்துற ஆளுமைய எப்படிப் பார்க்குறீங்க?

  என்னைக் கேட்டா அது வேண்டாம்னு தான் சொல்லுவேன். இங்கயும் நிறைய நடிகர்கள் சேனல்கள நம்பி தான் இருக்காங்க. இப்படியே வட இந்திய சீரியல்கள் உள்ள நுழைஞ்சா நடிகர்கள் மட்டுமில்ல, இயக்குநர்கள், டெக்னீஷியன்கள், லைட் மேன்கள் இப்படி பலபேரோட குடும்பங்கள் பாதிக்கப்படும். கலர்ஃபுல்லா இருந்தாலும் நம்ம கலாச்சாரத்துக்கு சரி வருமான்னு ஒரு விஷயம் இருக்கு. இப்போ எனக்கே தமிழ்நாட்ல செட் ஆனதுல இருந்து அந்தக் கலாச்சாரம் கொஞ்சம் சிக்கலா தான் இருக்கு!”

உங்க பலம் பலவீனம்?

 என்னோட ஃபேமிலி எனக்கு பெரிய பலம். எனக்கு யாராவது கொஞ்சம் எமோஷனலா பேசினா உடனே நான் நம்பிடுவேன். இது என் பலவீனம்!

தமிழ் சீரியல்கள்ல இருக்கற மைனஸ் என்ன?

“வெறும் ஒரு ஹால், ஒரு கேரக்டர் யோசிக்கறது மட்டுமே ஒரு நாள் முழுக்க ஓட்டுவாங்க. திடீர்னு பார்த்தா செம ஸ்பீடா, த்ரில்லா போகும். இது கொஞ்சம் மைனஸா இருக்கு.  ஒரு ஸ்பீடு கொண்டுவந்தா அத அப்படியே கொண்டு போகணும். அப்போதான் சுவாரஸ்யமா இருக்கும். அப்புறம் மேக்கப். கொஞ்சம் ட்ரெண்டியான நகைகள், ஆடைகள் பயன்படுத்தினா வட இந்திய சீரியல்களை மக்கள் மறந்துடுவாங்க!”

சீரியல் இயக்குநர்களே நோட் பண்ணிக்கோங்க!...

- ஷாலினி நியூட்டன்