Published:Updated:

”இந்த உலகமே பெண்களால தான் இயங்குது” EMI சீரியல் நாயகன் விக்ரமன் பேட்டி!

”இந்த உலகமே பெண்களால தான் இயங்குது” EMI சீரியல் நாயகன் விக்ரமன் பேட்டி!
”இந்த உலகமே பெண்களால தான் இயங்குது” EMI சீரியல் நாயகன் விக்ரமன் பேட்டி!

மாமியார்-மருமகள் பிரச்னை, கணவன் - மனைவி பந்தம் இப்படி வழக்கமான சீரியல் கதைகளுக்கு இடையில் ஐடி வேலை, அலுவலக பாலிடிக்ஸ் என இளைஞர்களைக் குறிவைத்திருக்கிறது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘EMI - தவணை முறையில் ஒரு வாழ்க்கை’ சீரியல். அதன் நாயகன் விக்ரமனுடன் தேநீரோடு ஒரு மாலை நேர உரையாடல்;

உங்களைப் பத்தி சுருக்கமா சொல்லுங்களேன்!

“ சொந்த ஊரு திருநெல்வேலி , படிச்சது கம்ப்யூட்டர் இன்ஜினியர். எனக்கு விஸ்காம் படிச்சுட்டு மீடியாக்குள்ள நுழையணும்னு ஆசை. அதுக்கு முயற்சியெல்லாம் பண்ணினேன். ஒரு மாசம் விஸ்காம் க்ளாஸ் கூட போயிட்டேன். அதுக்குள்ள இன்ஜினியரிங் சீட் கிடைச்சுடுச்சு. அதுவும் நுழைவுத்தேர்வே கிடையாது. பிடிக்காமத்தான் படிச்சேன். ஆனா தானாவே அமைஞ்சது மீடியா ஜாப். தந்தி டிவி , புதிய தலைமுறை டிவிகள்ல ரிப்போர்ட்டர்.  அங்க வேலை செய்துட்டு இருக்கும் போது தான் சன் டிவி சீரியல் வாய்ப்பு வந்தது. ஆடிஷன் போனேன் உடனே செலக்ட் ஆனேன் இப்போ என்ன எல்லாரும் இந்த சீரியல்ல வர்ற பேரான மகேஷ்னுதான் கூப்டறாங்க!”

EMI சீரியல் பத்தி சொல்லுங்களேன்!

“ சீரியல்னாலே எப்பவுமே அழுகை, சோகம், இல்லைன்னா பெண்களோட போராட்டம் இப்படி தான் போரடிப்பாங்க. அந்த லிஸ்ட்ல இந்த EMI சீரியல் கொஞ்சம் வித்தியாசமா இளைஞர்கள் வாழ்க்கையை மையமா வெச்சு உருவாகியிருக்கு. ஐடி வேலைன்னாலே நிறைய சம்பளம், இஷ்டப்பட்ட வாழ்க்கைன்னு தான் நினைச்சுட்டு இருக்கோம் ஆனா அந்த வாழ்க்கை எவ்வளவோ போராட்டம் நிறைஞ்சதுன்னு அந்த வேலையின் இன்னொரு முகத்த காமிக்கிற சீரியல்!”

சீரியல்ல உங்க கேரக்டர் என்ன?

“ ரொம்ப எதார்த்தமான, கண் முன்னாடி யாருக்காவது கஷ்டம்னா உடனே உதவுறது, அநியாயம் நடந்தா கொஞ்சம் பொங்குறதுன்னு என்னொட உண்மையான கேரக்டர்தான் இந்த சீரியல்லயும். 

சரி.. ஐடி துறை பத்தி உங்க கருத்து என்ன?

” ஐடி வேலைல எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் வரும், அதே அளவுக்கு போராட்டங்களும் இருக்கும். நிறைய வருமானம் அத நம்பி வீட்டு லோன், கல்யாணம் ஏற்பாடு, இப்படி நிறைய பிளான் பண்ணுவோம். வேலை கிடைச்ச ஒரு மாசத்துல நம்ம வாழ்க்கையே மாறிடும். ஆனா எந்த நேரத்துல வேலைய விட்டுத் தூக்குவாங்கன்னே தெரியாது. வேலை போய்ட்டா சில பசங்களுக்கு கல்யாணம் கூட நிக்கும்.  நானும் கொஞ்சம் நாள் ஐடி துறையில வேலை செஞ்சேன். அந்த அனுபவம் தான்!”

சீரியல் நடிகரா மாறிட்டீங்க.. அடுத்த பிளான் என்ன?

“ நேத்து ரிப்போர்ட்டரா இருந்தேன், இன்னிக்கு சீரியல் நடிகர் நாளைக்கு என்னங்கறது பத்தி நான் இன்னும் யோசிக்கலை. இப்போ செய்திட்டு இருக்கற வேலைய சரியா பண்ணணும். நான் இன்னைக்கு வாழ்க்கைய வாழணும்னு நினைக்கற ஆளு!”

ரொம்பத் தத்துவமா, கவிதையா பேசுறீங்களே இந்தக் காதல் , கல்யாணம் ரொமான்ஸ்....

“ நமக்கும் அதுக்கும் என்னமோ செட்டே ஆகலை. அதே சமயம் கல்யாணம் பத்தி யோசிக்கற நேரம் இன்னும் வரல. காதல் ப்ரபோஸ் ஒண்ணு ரெண்டு வந்துச்சு. பெரிய ஹேண்ட்சம்லாம் இல்லை நான். ஆனாலும் வந்த ஒண்ணு ரெண்டையும் ஏதேதோ சொல்லி நழுவிட்டேன். 

ஏன் லவ் மேல நம்பிக்கை இல்லையா, இல்ல பெண்கள் மேல நம்பிக்கை இல்லையா?

“ ஐய்யய்யோ அப்படி எல்லாம் நான் சொல்லல.. நான் படிக்கும் போதே வேலை பார்த்துட்டு இருந்தேன், கொஞ்சம் கூட ரிலாக்ஸ் இல்லாம இருப்பேன். காதலுக்காக டைம் கூட இல்ல. பெண்கள் இல்லைன்னா எப்படி. இந்த உலகமே அவங்களால தான் இயங்குது.

பாரதியார் கவிதை ஒண்ணு சொல்லணும்னா

“ நானையே பெருக்கித் தானென மாற்றுஞ் சாகாச் சுடர்”. அதுதான் பெண்கள்!”

அடடே.. கவிதையெல்லாம் சொல்றீங்களே..வாசிக்கற பழக்கம் இருக்கா?

“ நிறைய இருக்கு . வீட்ல இருந்தா கண்டிப்பா எதாவது புத்தகம் படிச்சுட்டு தான் இருப்பேன். வீடுன்னா புக்ஸ்.. வெளிலன்னா ஃப்ரெண்ட்ஸ். இதுதான் என் உலகம்!”

 ஷாலினி நியூட்டன்