Published:Updated:

நான் ரித்திகா சிங்குக்கே டீச்சராக்கும்! - கலகல கலைராணி

நான் ரித்திகா சிங்குக்கே டீச்சராக்கும்! - கலகல கலைராணி
நான் ரித்திகா சிங்குக்கே டீச்சராக்கும்! - கலகல கலைராணி

சினிமா, நாடகம், நடிப்புப் பயிற்சி என பன்முகத்திறமைகளுடன் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார், குணசித்திர நடிகை கலைராணி. அசத்தலான நடிப்புக்காரரிடம் ஓர் அழகான சந்திப்பு!

‘‘சென்னையில நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த என் பெற்றோர் சினிமா துறையைச் சார்ந்தவங்களா இல்லாட்டியும், கலைமேல அவங்களுக்கு பெரிய ஈர்ப்பு. அதனாலதான் கலைவாணி, கலைவாணன், கலைராணி, கலைச்செல்வி, கலைச்செல்வன்னு அவங்களோட அஞ்சு பிள்ளைங்களுக்கும் ‘கலை’ன்னு தொடங்குற பேர் வெச்சாங்க. எங்க அப்பா, அம்மாவோட கலை ஆர்வம் எங்களுக்குள்ளும் இயல்பாவே இருந்தால, எங்க அஞ்சுபேரோட வாழ்க்கையும் கலைத்துறையிலயே அமைஞ்சுடுச்சு.
என் சின்ன வயசுல எங்க வீட்டுல நாங்க எல்லாருமா சேர்ந்து நிறைய நாடகங்கள் நடத்துவோம். நாலு வயசுல இருந்தே நிறைய படம் பார்க்க ஆரம்பிச்ச நான், பள்ளிக்கூடத்துல கிளாஸ்ல டீச்சர் இல்லாத நேரத்துல, எல்லா பசங்களுக்கும் நான் பார்த்த படங்களை டயலாக், முகபாவனையோட நடிச்சுக்காட்டிட்டு இருப்பேன். அப்போவே என்னை நானே ‘எடிட்டர்’ மாதிரி நினைச்சுட்டு, நியூஸ் பேப்பர், பத்திரிகைகள்ல இருக்குற சினிமா சம்மந்தமான படங்களை வெட்டி, நோட்டுல ஆல்பமா ஒட்டுவேன். மொத்தத்துல எங்க கலைக்குடும்பத்துல ராணி மாதிரி சுதந்திரமா வளர்ந்தேன்’’ என்றவர், பள்ளிப்படிப்பை அடுத்து அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புப் பயிற்சி முடித்திருக்கிறார்.

‘‘அந்த காலகட்டத்துலதான் நண்பர்கள் நடிகர் நாசர், மீனாட்சி சுந்தரம் ரெண்டு பேரோட உந்துததால நிறைய கூத்துப்பட்டறை நாடகங்கள்லயும், அதைத்தொடர்ந்து ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் படைப்பாளிகளின் படைப்பான ‘ஊமை விழிகள்’, ‘காணிநிலம்’ படங்களிலும் நடிச்சேன். தொடர்ந்து சோலோ, குரூப் மேடை நாடகங்களில் ஆர்வமாக நடிச்சதோட, இசை, நடனம், நாடக இயக்கம்னு பல பரிணாமங்கள்ல என் திறமையை வெளிக்காட்டினேன். கூடவே, அரசுப் பள்ளி மாணவர்களோட கலைத்திறமைகளை வெளிக்காட்டும் விதத்துல, இலவச நடிப்பு பயிற்சியும் கொடுத்துட்டு இருந்தேன்.

அப்போதான் ‘முதல்வன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் அழைச்சார். நான் ஸ்கூல் பசங்களுக்கு ஆக்டிங் க்ளாஸ் எடுத்துட்டு இருந்ததால, அவர் தரப்புல இருந்து  பல முறை என்னை தொடர்புகொண்டும், என்னால ஓ.கே சொல்ல முடியல. அவர்கிட்ட என்னோட சூழ்நிலையைச் சொல்லலாம்னு  ஒருநாள் போனேன். ‘ ‘தேவதை’ படத்துல உங்க நடிப்பைப் பார்த்துட்டு, இந்த கேரக்டர்ல நீங்கதான் நடிக்கணும்னு முடிவெடுத்துட்டேன்’னு சொன்னார். நடிகைங்கிற அடையாளம் துளியும் இல்லாம, படம் பார்க்கிறவங்களுக்கு நம்ம பக்கத்து வீட்டுக்காரங்க மாதிரி, பாடி லேங்குவேஜ்லதான் பிரதானமா நடிக்கணும்னு அவர் சொன்னார். நான் கடைபிடிச்சுட்டு இருந்த, ஷங்கர் சார் எதிர்பார்த்த அந்த மூணு விஷயங்களையும் திரையில் கொண்டுவந்த அந்த அம்மா கேரக்டர், எனக்கு வாங்கிக் கொடுத்த வெளிச்சம் நிறைய’’ என்றவர்,

‘‘குரல் பயிற்சி கத்துக்கிட்டதால, ஒவ்வொரு கேரக்டருக்கும் ஏத்தமாதிரி நானே நிறைய வாய்ஸ் மாடுலேஷன் செஞ்சு நடிப்பேன். அப்படித்தான் ‘முதல்வன்’ படத்துல
அர்ஜுன் டிவியில தெரியும்போது, ‘ஓடுது ஓடுது... பாருங்க பாருங்க’ன்னு வாய்ஸ்கொடுத்து ஒரு மிடில் கிளாஸ் அம்மாவா எதார்த்தமா பேசியிருப்பேன். அப்போ என் டயலாக் டெலிவரியைப் பார்த்து மொத்த டீமும் சிரிச்சிட்டாங்க. நான் பொருட்படுத்தல. படம் ரிலீஸ் ஆனதும், ‘உங்க வாய்ஸ் மாடுலேஷன்தான் அந்த கேரக்டருக்கே பெரிய ப்ளஸ்’னு எல்லோரும் பாராட்டினாங்க.

ஒவ்வொரு படத்துக்கும் அந்த கேரக்டர் சார்ந்த பகுதிகள்ல இருக்குற மக்களோட பழக்க வழக்கங்களை தெரிஞ்சுகிட்டு, அதுக்கு ஏத்தமாதிரியே நடிப்பது என் வழக்கம். அப்படி நான் நடிச்சதுதான் ‘கோடம்பாக்கம்’ படம். அந்தக் கேரடருக்கு எனக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைச்சுது. இதுவரை தமிழ்ல்ல 75-க்கும் அதிகமான திரைப்படங்கள்லயும், 6 தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கேன். இந்திய, வெளிநாட்டு இயக்குநர்கள் பலர் டைரக்‌ஷன்ல 45-க்கும் அதிகமான நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். குறிப்பா ‘ஹெலனாவின் தியாகம்’, ‘நல்லவள்’னு பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிற பல நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்'. எனக்கு ரவுடி, வில்லி மற்றும் மிகவும் சேலஞ்சான கேரக்டர்களில் நடிக்க ரொம்பவே ஆசை. எந்த கேரக்டரா இருந்தாலும்,  அதுல என்னோட நடிப்பை நூறு சதவீதம் முழுமையா செய்யணும் என்ற முனைப்புடன் செயல்படுவேன். கலகலப்புடன் புன்னகை மலர விடைபெறுகிறார், கலைராணி. 

கலை ஆர்வலரான சதானந்த் மேனனின் என்பவரின் ‘ஸ்பேஸஸ்' எனும் கலை ஊக்குவிப்பிற்கான பயிற்சிக் கூடம், பெசன்ட் நகரில் இருக்கிறது. அங்குதான் பலருக்கும் நடிப்பு பயிற்சியை கற்றுக்கொடுக்கிறேன். ‘‘கௌதம் கார்த்திக், துளசி, ரித்திகாசிங்னு நிறைய ஆர்டிஸ்ட்களுக்கு ஆசிரியையா மட்டும் இல்லாம, அன்போடும் நடிப்புப் பயிற்சி கொடுத்திருக்கேன். ‘இறுதிச்சுற்று’ பட நாயகியான பாக்ஸர் ரித்திகா சிங்கூட வொர்க் பண்ணினது வித்தியாசமான அனுபவமா இருந்தது. சினிமா, நாடகம் தாண்டி நவீன உலகத்துல பெண்கள் சம்மந்தமான விழிப்புணர்வு நாடகங்களையும் நடிச்சிட்டு இருக்கிறதில் ரொம்பவே மகிழ்ச்சி" என்று பூரிக்கிறார் கலைராணி.

- கு.ஆனந்தராஜ்
படங்கள்: எம்.உசேன்