Published:Updated:

"நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்!’ - ஜோடிகளுக்கு சவால் விடும் மிஸ்டர் & மிஸஸ் கில்லாடீஸ்!

"நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்!’ - ஜோடிகளுக்கு சவால் விடும் மிஸ்டர் & மிஸஸ் கில்லாடீஸ்!
"நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்!’ - ஜோடிகளுக்கு சவால் விடும் மிஸ்டர் & மிஸஸ் கில்லாடீஸ்!

விறுவிறுப்பான போட்டிகள், சாகசங்கள் , எமோஷன்களுக்கு இடையில் போராடும் 10 ரியல் ஜோடிகள் என ஜீ தமிழின் Mr&Mrs கில்லாடிஸ் நிகழ்ச்சி இப்போது சேனல் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரைட். 'கேம்ஸ் எல்லாம் செம ரிஸ்க்கா இருக்கும் போல?'  என்றால் 'வாங்களேன் எங்க செட்டுக்கு..' என அழைப்பு விடுத்தனர்.  

ECRன் ஒரு பிரதான ரிசார்ட்டின் முகப்பு நம்மை வரவேற்க வெளியே கேரவன், தயார் நிலையில் இருக்கும் ஆம்புலன்ஸ், உடன் ஒரு முதலுதவி நிபுணர் என ஆரம்பமே ‘அட’ போட வைத்தது. உள்ளே சென்றால், ஒரு மாஸ் ஹீரோ படத்தின் ஆக்‌ஷன் சண்டைக் காட்சிக்கான ஆயத்தங்களுடன் போட்டி நடக்கும் இடம் பரபப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.  அஸிஸ்டெண்ட் இயக்குநர் சுப்ரஜா நம்மை வரவேற்று டெக்னீஷியன்கள் அறையில் அமர வைத்தார்.

அங்கே சுமார் 10க்கும் மேலான மானிட்டர்கள், அதில் 10க்கும் மேலான தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘கமான் கமான்’ என உற்சாகப்படுத்த அங்கே களத்தில் பிரபலங்களும் அவர்களின் ஜோடிகளும் இணைந்து போட்டியை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார்கள். ‘ இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தால் நெருப்புக்கு இடையில் கேமரா வைத்து ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்’ லெவல்ல போட்டி நடத்தினதைப் பார்த்திருக்கலாம்’  என்று பீதி கிளப்பியது டெக்னீஷியன்களின் குரூப்.
டெக்னீஷியன்களின் அறை
வெளியே ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தோம். ‘இந்தப் பெரிய வளையத்துக்குள்ள போய், அதுக்குள்ள இருந்தே அதை உருட்டிக் கொண்டே போய், கொஞ்ச தூரத்தில் இருக்கும் பலூன்களில் மோதி, அவற்றை உடைக்க வேண்டும்’ - தீபக் இப்படி விளையாடும் முறையை விளக்கி முடித்ததும், இரண்டு வளையங்களைக் காட்டினார் தீபக். ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா ஜோடியும், டான்ஸ் மாஸ்டர் மணி ஜோடியும் உருட்ட ஆரம்பித்தனர். மற்ற ஜோடிகள் ’கமான், கமான் , உங்களால முடியும்’ என சப்தமிட்டு உற்சாகப்படுத்திக்கொண்டிருக்க. கையில் டைமர் வாட்ச், விசில் சகிதமாக தீபக் ஒரு பக்கம் டென்ஷன் கொடுக்க போட்டி களைகட்ட ஆரம்பித்தது. போட்டியாளர்களுள் ஒருவரான படவா கோபியிடம், ‘மைக்கைப் பிடிங்க.. பேசுங்க’ என்றதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். 
கேம் விளையாட தயார் நிலையில் ரச்சிதா மற்றும் அவரது கணவர்

 ‘கல்யாணம் ஆனவங்க அல்லது ஆகப் போறவங்கதான் இங்க போட்டியாளர்கள். என்னதான் ஜெயிக்கணும், பரிசு அடிக்கணும்னு எங்களுக்குள்ள போட்டி இருந்தாலும் ஒரே குடும்பம் மாதிரி ஜாலியா இருக்கோம். ஒரு பிக்னிக் வந்த மாதிரி இருக்கோம். பொறாமையே கிடையாது எங்களுக்குள்ள. இங்க இருக்கற போட்டியாளர்களோட ஒப்பிட்டா எங்களை விட  குறைஞ்சது 15 வருஷமாவது சின்னப் பசங்களா தான் இருப்பாங்க. ஆனா அதுக்காக, ‘சீனியர்’ன்னு எங்கள தனிமைப்படுத்தியோ, ஒதுக்கியோ இவங்க பார்த்ததே இல்லை’ எனக்கூறி,  ஒவ்வொரு ஜோடியையும் கலாய்த்து , காமெடியுடன் அறிமுகங்களைக் கொடுத்தார். இதற்கிடையில் அடுத்தப் போட்டிக்கான களம் தயாராகிக் கொண்டிருந்தது.
ஜோடிகளை அறிமுகப்படுத்தும் ’படவா’ கோபி
அடுத்ததாக,  டெக்னீஷியன்களின் அறைக்குள் நுழைந்து ஒவ்வொருவராக அறிமுகம் கொடுத்தார் கோபி.
’ஏதோ ஒரு மணி நேரம் ஜாலியா டிவி பார்த்துட்டு போயிடுறோம்.. ஆனால் இதுக்குப் பின்னாடி இவ்வளவு இருக்கா?’ எனக் கேட்க, கோபி இன்னும் ஆச்சர்யங்களைக் கொடுத்தார்;
‘இங்க நீங்க பார்க்குற இந்த, வளையத்துக்குள்ள உருள்ற விளையாட்டு மட்டும் தான் கொஞ்சம் சுலபமா இருக்கும். போன எபிசோடுக்கு முன்னாடி ஒவ்வொருத்தரும் அவங்களோட மனைவி அல்லது காதலிய தோள்ல தூக்கிக்கிட்டு நடக்கணும்னு ஒரு போட்டி. அவங்க கையில குடுவை நிறைய தண்ணி வேற வெச்சுருப்பாங்க. எனக்கெல்லாம் இடதுபக்கம் ஒரு சில நிமிஷம் வேலையே செய்யல'.

 'அப்படி முடியாமப் போச்சுன்னா என்ன பண்ணுவாங்க?’

 “அந்த அளவுக்கு முடியாமப் போகறதெல்லாம் நடக்காது. லைட்டா சுளுக்கு, வலின்னு இருக்கும் அவ்ளதான். உடனேயே ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து நார்மலாக்கி நம்மள அடுத்த கேமுக்கு ரெடி பண்ணிடுவாங்க”

தீபக்குடன் கோபி

“இதையெல்லாம் பாத்தாலே பயமா இருக்கே..நீங்க எப்டி இந்த ரிஸ்கை எடுக்கறீங்க?”

 நாம் கேட்டதும் தூரத்தில் ஒரு செட்டைக் காண்பித்தார். ஆஜானுபாவாக சிலர் நடந்து கொண்டிருந்தார்கள்.

 “அவங்கள்லாம் யார்னு தெரியுமா? ஸ்டன்ட்மென். எந்த கேம் செட் போட்டாலும் மொதல்ல அவங்கள்லாரும் நடந்து, உருண்டு, விளையாடின்னு பல டெஸ்டை எங்க கண்ணு முன்னாடியே பண்ணுவாங்க. அந்த டெஸ்ட்லாம் முடிஞ்சுதான் எங்களையே விளையாட விடுவாங்க. அதுனால பயமா இருக்காது”

 ”இந்த மாதிரி ஜோடிகளா விளையாட விடறதால என்ன ப்ளஸ்?”

“ஒரே ஆஃபீஸ்லயே வேலை செஞ்சாக்கூட கணவனுக்கு மனைவியோட திறமைகளோ, மனைவிக்கு கணவனோட திறமைகளோ முழுசா தெரிஞ்சுடும்னு சொல்ல முடியாது. நானும் மனைவியும் வேற வேற ப்ரொஃபஷன்ல இருக்கோம். இந்த கேம் விளையாடினப்பாதான் என் மனைவியோட வலிமையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். மனதளவுல மட்டுமில்ல உடலளவுலயும் அவங்க ஸ்ட்ராங்க்னு புரிஞ்சது. எனக்கு மட்டுமல்ல.. இங்க இருக்கற பல ஜோடிகளுக்கு அப்படித்தான். அவங்க அடிபடறப்போ நாம டக்னு காட்ற அக்கறை, அவங்களுக்கு அவ்ளோ பிடிக்குது. இதெல்லாம் ப்ளான் பண்ணாம பண்றதால எங்களுக்குள்ள  பல எமோஷனலான விஷயங்கள் கடந்து போகுது. ஒரு பெரிய டூர் போனாக்கூட போனோம், வந்தோம்னுதான் இருக்கு. அட்வென்ச்சர் கேம்ஸ் அதுக்கும் மேல” சொல்லி முடிப்பதற்குள் அவரைச் சுற்றிகொண்ட மற்ற போட்டியாளர்கள் கோபியுடன் ஜாலி செல்ஃபி எடுக்க,  அதை நம் கேமராவிலும் படம் பிடித்துக்கொண்டோம்.
 
ஜாலி போஸ் கொடுக்கும் ஜோடிகள்

“இன்னும் திகில் கேம்ஸ்லாம் இருக்கு. வாராவாரம் பாருங்க” என்று கோரஸாகக் கத்தி விடைகொடுத்தனர் அனைவரும்.