Published:Updated:

'குழந்தைக்கு தமிழ்ல பேர் வைக்க மாட்டியா?’ - ஆர்த்தியை அதட்டிய பாலா

'குழந்தைக்கு தமிழ்ல பேர் வைக்க மாட்டியா?’ - ஆர்த்தியை அதட்டிய பாலா
'குழந்தைக்கு தமிழ்ல பேர் வைக்க மாட்டியா?’ - ஆர்த்தியை அதட்டிய பாலா

மக்கள் தொலைக்காட்சி ஆர்த்தி என்றால் பலருக்கும் பரிச்சயம். வீட்டில் வாயாடி என்று பெயர் வாங்கிய அவருக்கு வாயாடுவது என்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு, மக்கள் தொலைக்காட்சி ஆரம்பித்து, தற்போது வானவில் தொலைக் காட்சி வரை 16 வருடங்களைத்  தொட்டிருக்கும் அவரிடம் பேசும்போது மீடியாவில் இருக்கும் பெண்கள்,குழந்தை பெற்றெடுத்த பிறகு செய்ய வேண்டிய... செய்யக்கூடாத விஷயம் என நம்மிடம் பலவற்றைப்  பகிர்ந்துகொண்டார்.

'இவ்வளவு அழகாகத் தமிழ் பேச எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

'மக்கள் தொலைக்காட்சி'க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வீட்டில் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பேன். 'கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா.. எப்பப் பாரு பேசிட்டே இருக்க.. உனக்கு கால்சென்டர்தான் சரிப்பட்டு வரும்' என அம்மா திட்டிக் கொண்டே இருப்பார். நானும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கால்சென்டர்தான் என கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டேன்.

மக்கள் தொலைக் காட்சி 2006-ம் வருடம் தொடங்கப்பட்டது. அப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்திருந்தேன். நான் கல்லூரி முடித்து வெளியில் வந்ததும் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. 'சின்ன சின்ன ஆசை', 'சொல் விளையாட்டு' என பல நிகழ்ச்சிகளைத்  தொகுத்து வழங்கினேன். 'வளாகம்' நிகழ்ச்சி எனக்கு மிகப்பெரும் பெயர் எடுத்துக் கொடுத்தது. அங்குதான்  தமிழ் எப்படி உச்சரிக்க வேண்டும், உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என பல விஷயங்களைக்  கற்றுக் கொண்டேன். எட்டு வருடங்கள் கழித்து, சன் டி.வியில் 'சூரிய வணக்கம்', 'ராசி பலன்' நிகழ்ச்சிகளைத்  தொகுத்து வழங்கினேன். அதற்குப் பிறகு திருமணம் முடிந்து, ஆறு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு தற்போது 'வானவில்' தொலைக்காட்சியில் இணைந்து, 'நல்வரவு', 'திரைப்படம் உருவான கதை' என இரண்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் கணவர், குழந்தை பற்றி?

நான் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது குறும்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்கிரீனிங்கிற்காக, பல பேரை அழைத்திருந்தோம்.. அதில் கேப்டன் தொலைக்காட்சியும் ஒன்று. கேப்டன் தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவேக் குமார் எனக்கு அப்போதுதான் பழக்கமானார். இருவருக்குமிடையே நட்பு, காதலாகி... கடந்த வருடம் கல்யாணத்தில் முடிந்தது. எங்களுக்கு 'தியோடன்' என்று அழகான ஆண் குழந்தை பிறந்தான்.

தியோடனுக்கு அர்த்தம்?

தியோடன் 'theodden' என்றால் ஆட்சி செய்பவன், கடவுள் கொடுத்த பரிசு' என்று அர்த்தம். இந்த பெயரை என் கணவர்தான் தேர்வு செய்தார். குழந்தைப் பிறந்தவுடன் எனக்கு பரிசாக கொளத்தூரில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கித் தந்தார் என் கணவர். எல்லா புகழும் தியோவுக்கே...!

என் கணவருக்கு இயக்குநராக வேண்டும் என்பது தான் ஆசை. ஊடகத்திலிருந்தவர் இயக்குநர் பாலாவிடம், 'பரதேசி', 'தாரை தப்பட்டை' என அவருக்கு உதவி இயக்குநராக இருந்தார். எங்கள் திருமணத்திற்கு பாலா சார்தான் முதல் சீர்வரிசைத் தட்டை எடுத்துக் கொடுத்தார். அதேபோலதான் தியோடன் பிறந்த பிறகு பாலா சாரிடம் ஆசி பெற சென்றோம். குழந்தையை கையில் வாங்கியவர் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு 'பெயர் என்ன?' எனக் கேட்டார். தியோடன் என்றதும், 'நீ தமிழ் பெயர் தானே வைப்பே.. ஏன் இப்படி ஒரு பெயர்...?'னு கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'பகீர்' என்றது. என் கணவர் தேர்வு செய்த பெயர் சார் என சொல்லி சமாளித்தேன்.

திருமணம், குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு உங்களுடைய செகண்ட் இன்னிங்சில் கஷ்டம் இருந்ததா...?

நிச்சயமாக இருந்தது. திடீரென மன அழுத்தம் அதிகமாயிடுச்சு. இவ்வளவு நாட்கள் வேலை செய்துவிட்டு, திடீரென ஆறு மாதம் வேலையில்லாமல் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது தேவையில்லாத மன அழுத்தத்தைத் தந்தது. என் குழந்தைக்கு அருகிலேயே இருப்பதால் நேரம் போவதே தெரியாது. அந்த நேரத்தில் நம் குழந்தைதான் நம் கண்ணிற்குத் தெரியும். நம்மைக்  கவனிப்பதை விட்டுவிடுவோம். தேவையில்லாமல் எடை கூட ஆரம்பித்துவிடும். குடும்பம் மற்றும் கணவருடைய உதவி இருந்தால் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வர முடியும். திறமையான பல பெண்கள் இருக்கும் இடம் இல்லாமல் காணாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஊடகத்தில் முகம் காட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென விலகி, நீண்ட இடைவெளி எடுத்துவிட்டால் மக்களுக்கு நம்முடைய முகம் மறந்துவிடும். அவர்களுக்கு மீண்டும் நம்மைப்  பார்க்க வைக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். நான் சீக்கிரமா உள்ள வந்ததால் அவர்களுக்கு இன்னும் என்னுடைய முகம் மறக்கவில்லை என்பதைத்  தெரிந்துகொண்டேன். இது ஊடகத்திற்கு மட்டுமல்ல எல்லா வேலைக்குமே பொருந்தும்.

ஒரு தாயாக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ்?

குழந்தைப் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது மிக மிக அவசியம். மேலும், நாமும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். பால் கொடுக்கும் நேரத்தில் டயட்டில் இருக்க முடியாது. பால் தருவதை நிறுத்திய பிறகு, ஃப்ரூட்ஸ், ஃப்ரெஷ் ஜூஸ் என அதிகமாக இயற்கை பழங்கள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியம். மிக முக்கியமாக பால் எடுத்துக் கொள்ளவேண்டும்.' என்றவர் 'எப்பொழுதும் நம்முடைய தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். முகம் மட்டுமல்ல மனதையும் எப்போதும் ஃப்ரெஷாக வைத்திருக்கப் பழகிக் கொண்டால் நீங்கள் எப்போதும் இளமையாகவே இருப்பீர்கள்'' என்று முடித்தார்.

-வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு