Published:Updated:

'மாதவி சொன்ன விஷயத்தை இன்னும் கடைபிடிக்கிறேன்'- 'மை டியர் குட்டிச்சாத்தான்' சோனியா!

Vikatan Correspondent
 'மாதவி சொன்ன விஷயத்தை இன்னும் கடைபிடிக்கிறேன்'- 'மை டியர் குட்டிச்சாத்தான்' சோனியா!
'மாதவி சொன்ன விஷயத்தை இன்னும் கடைபிடிக்கிறேன்'- 'மை டியர் குட்டிச்சாத்தான்' சோனியா!
பொல்லாதவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற 150 க்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்து, அவார்டையும் வாங்கியிருப்பவர் நடிகை சோனியா. இரண்டு வயதில் நடிக்க ஆரம்பித்து, ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிஸியான நடிகைகளில் இவரும் ஒருவர், 
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தைப் பற்றி கலகலவென பேசி முடித்தவர் நம்முடன் பேட்டிக்கு தயாரானார்,
சரோஜா தேவி, சாவித்ரி அம்மா என பலபேருக்கு மகளா நடிச்ச அனுபவம்?
''இரண்டு வயசுல குழந்தை நட்சத்திரமா நடிக்க ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு ஏழு வயசு. ''மை டியர் குட்டிச்சாத்தான்' படத்துக்காக தேசிய விருது வாங்கினேன். 10 வயசுல  மலையாளப் படத்துக்காக மாநில விருது. சின்ன குழந்தையா நடிக்கும் போது ஆரம்பத்துல ஆக்‌ஷன் சொல்றப்ப நடிக்கவே இல்லையாம். அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டு நடிக்க வச்சாங்களாம். ராதிகாவோட  பையனா ஒரு படத்துல நடிச்சிட்டு இருந்தப்போ கேமரா முன்னாடி நிக்கவாச்சாவே அழுவேனாம். 
நீங்க தீவிர ரஜினி ரசிகையாமே?
ஐந்து வயசுல அவர எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சுது. இப்போ வரைக்கும் அது மாறல.  இப்போ இருக்கிற நடிகர்கள்ள விஜய் சேதுபதி, கார்த்தி பிடிக்கும். ஹீரோயின்களில், சரோஜா தேவி அம்மா, சாவித்ரி அம்மா.. ரொம்ப பிடிக்கும். ராதா,  ராதிகா.. அதுக்கப்புறம் வேறு எந்த நடிகைகளும் பெருசா இம்ப்ரஸ் பண்ணல. 
இத்தனை வருஷத்துல நீங்க தவறாமல் கடைபிடிக்கும் விஷயம்?
எனக்கு இப்போ வரைக்கும் கிளிசரின் இல்லாம அழுக வராது. எந்தப்  படத்துல அழற சீன் வந்தாலும் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் நடிப்பேன். 'கருவேலம் பூக்கள்' படத்துல ராதிகா எனக்கு அம்மாவா நடிச்சிருந்தாங்க. அந்தப்  படத்தில் அம்மா இறந்து போனது போல ஒரு சீன். நேச்சுரலா நடிக்க வைக்கணும் என்பதற்காக டைரக்டர், 'அம்மா இறந்துட்டாங்க.'னு. சொல்லிட்டே இருந்தாங்க. அப்போ என்கூட அம்மா இருந்தாங்க. இருந்தாலும், அப்படி சொல்லச் சொல்ல எனக்கு அழுகை வந்துடுச்சு. கதறி அழ ஆரம்பிச்சுட்டேன்.  அதுக்கப்புறம், ராதா, ராதிகா, சரிதா அவங்கள எல்லாம் நேர்ல பர்ஃபாம் பண்ணிப்  பார்த்திருக்கேன். சின்ன குழந்தையில மாதவியோட மகளா நான் நடிச்சப்போ, கிளைமேக்ஸ் சீன்ல போய் ஃபேஸ் வாஷ் பண்ணாங்க. அப்போ ஏன் இப்படி பண்றீங்கனு மாதவிக்கிட்ட கேட்டப்போ ஃபேஸ் வாஷ்  பண்ணிட்டா அழற சீன் பர்ஃபெக்டா இருக்கும்'னு சொன்னாங்க. அதுல இருந்து நான் இப்போ வரைக்கும் இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.
உங்களுடைய வித்தியாசமான அனுபவம்?
ஆரம்பத்துல நடிக்கும்போது கட்டிப் பிடிச்சு நடிக்கப் பயப்படுவேன். ஒருமுறை, 'வெங்களம்' படத்தில் மனோஜ் கூட லவ் சீன்ல அவரோட நெஞ்சுல சாஞ்சிட்டு நடிக்கணும். ஆனா, டேக் சொன்னதும் பயத்துல அவரோட நெஞ்சுல சாஞ்சுட்டுஅழுதுட்டு இருக்கேன். ரீ டேக் சொல்லி சொல்லி பார்த்துட்டு டயார்டாகி கேமரா மேன், டைரக்டர் எல்லாம் போய்ட்டாங்க. அவங்கப் போனப்பவும் வெட்கத்துல அழுதுட்டே இருந்தேன்னா  பார்த்துக்கோங்க. இப்போ வரைக்கும் அதை மறக்கவே முடியாது.  
சீரியலுக்குள்ள வந்தது?
97-ம் ஆண்டு சினிமாத்துறையினர் பெரிய ஸ்டிரைக் பண்ணாங்க. சுமா  ஆறு மாதமா வேலையில்ல. வீட்ல சும்மா இருக்கிற நேரத்துல நடிக்கலாமே என 'கல்யாண கைதிகள்' ரஞ்சித்தோட ஒரு சீரியல்ல பண்ணேன்.  அதுக்கப்புறம் தொடர்ந்து சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். சன் டி.வி ஆரம்பிச்சதும் முதல்ல 'ஆங்கரிங்' பண்ணது நான்தான். பல வருடங்கள் தொகுப்பாளினியா இருந்தேன். தூர்தர்ஷன்ல 'பூந்தளிர் கனவுகள்' சீரியல்லதான் முதன் முதல்ல நடிச்சேன். அதுக்கப்புறம்  'வளர்ப்பு மகள்', செல்லமே, மாதவி, முகூர்த்தம் போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து நடித்தேன். 
உங்கள் குடும்பம் பற்றி?
'மெட்டி ஒலி' சீரியலில் நடித்த போஸ் வெங்கட் என்னோட கணவர். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பையன் தேஜஸ்வினுக்கு 12 வயசு ஆகுது. பொண்ணு, பாதாரணிக்கு எட்டு வயசு. 
உங்களைப் போன்ற பிரபலங்கள் சந்திக்கும் பிரச்னைகள்?
எல்லோருக்குமே ஸ்டேட்டஸை தக்க வச்சுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. நார்மலான ஒருத்தருக்கு அவங்கள சுத்தியிருக்கிற பத்து பேரத்தான் தெரியும். சினிமா, சீரியல்ல நடிக்கிறவங்கள ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த ஸ்டேட்டஸை மெயின்டெயின் பண்ண வேண்டியிருக்கும். ஆட்டோவுலயோ, பஸ்லயோ கூட போக மனசு வராது. இதை எல்லாம் பார்த்து நடக்கவேண்டியிருக்கும்.
உங்களின் நீண்ட நாள் ஆசை?
எனக்கு ஆச்சி மனோரமா,   கோவை சரளா, மாதிரி வரணும்னு ஆசை. அது என் அம்மாவுடைய ஆசையும் கூட.ஆச்சி மனோரமா மாதிரி நீ வரணும் என சின்ன வயசுலயே அம்மா என்கிட்ட சொன்னாங்க. என்னோட வாழ்க்கையில பெரும்பாலான விஷயங்கள் அம்மா சொன்னதும், ஆசைப்பட்டதும்தான் நடந்திருக்கு. அதனால கண்டிப்பா ஒரு நாள் இவங்கள மாதிரி வருவேன்னு நம்பிக்கை இருக்கு. 
-வே. கிருஷ்ணவேணி