Published:Updated:

ரத்தத்தில் கடிதம் எழுதிய ரசிகர். காவியாஞ்சலி ஸ்ரீகன்யாவின் அதிர்ச்சியும் ஆச்சர்யமும்!

Vikatan Correspondent
ரத்தத்தில் கடிதம் எழுதிய ரசிகர். காவியாஞ்சலி ஸ்ரீகன்யாவின் அதிர்ச்சியும் ஆச்சர்யமும்!
ரத்தத்தில் கடிதம் எழுதிய ரசிகர். காவியாஞ்சலி ஸ்ரீகன்யாவின் அதிர்ச்சியும் ஆச்சர்யமும்!

'தெய்வம் தந்த வீடு' வீடு சீரியலில் அசத்தியிருப்பவர் ஶ்ரீ கன்யா. வில்லியாகவும், அதே நேரத்தில் காமெடி நடிகையாகவும் நடித்துக் கொண்டிருப்பவர். அவரைப் பற்றி அவரே பகிர்கிறார்..

''நான் பிறந்த வளர்ந்தது எல்லாம் கேரளா அடூர். சென்னை வந்து செட்டில் ஆகி, 20 வருடங்களுக்கும் மேல் ஆகுது. நான் நடிப்புத் துறைக்கு வந்தது ஒரு விபத்து. அப்போ நான் கேரளாவில் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். என்னோட பெரியப்பாவோட சிஸ்டர் டிராமா ட்ரூப் வச்சிருந்தாங்க. ஒரு நிகழ்ச்சிக்கு வரவேண்டிய நடிகை ஒருவர் வர முடியாததால் என்னை அழைத்து நடிக்க வச்சாங்க. அந்த வாய்ப்புக்கப்புறம் எனக்கு தூர்தஷனோட டெலி ஃபிலிமில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல்ல நடிச்சிட்டு இருக்கும்போது மலையாள புரடியூசர் ஒரு படத்துக்காக ஹீரோயின் தேடிட்டு இருந்தார். நான் நடிப்பதைக்  கேள்விப்பட்டு வந்து என்னைப் பார்த்தார். என்னை நேரில் பார்த்து தேர்வு செய்தார். அப்படித்தான் எனக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம் சீரியல், சினிமா என 100 க்கும் மேல் படங்களில் நடிச்சிருக்கேன். மலேசியாவுல நடந்த சீக்கா நிகழ்ச்சியில் பெஸ்ட் கேரக்டர் ஆர்டிஸ்ட் அவார்டு மாதிரி சில விருதுகளும் வாங்கிருக்கேன்.

எனக்கு மறக்க முடியாத படம்னா அது 'பெலி படம்தான். நான் நடித்ததிலேயே எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் அது. மெகா சீரியல் என்றால் மலையாளத்துல 'மானசி' சீரியல். இப்பவும் என்னை எங்காவது பார்த்தாங்கன்னா மலையாள மக்கள் 'மானசி' மீராதானேனு கேட்பாங்க. அதே போல விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான 'காவியாஞ்சலி' சீரியல் எனக்கு தமிழ் மக்கள்கிட்ட பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இதற்காக ரசிகர்களில் ஒருவர் எனக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். அதிர்ச்சியாக இருந்தது. அதே சமயம், இவ்வளவு தூரம் என்னுடைய கேரக்டர் ரீச் ஆகியிருக்கிறதா என்று ஆச்சரியமும் அடைந்தேன்.

இத்தனை வருடங்கள்ல நான் காமெடி கேரக்டர் எதுவும் நடிச்சது கிடையாது. முதன் முதல்ல விஜய் டிவி. 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் காமெடி கலந்த வில்லி ரோல் செய்துட்டு இருக்கேன். கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள ஆட்டுக்கால் அம்மன் கோவிலுக்கு வருடா வருடம் தவறாமல் போயிடுவேன். என்னோட பல புராஜக்ட்ஸ் இந்தக்  கோயிலுக்கு வந்ததுக்குப் பிறகுதான் ஓ.கே ஆகியிருக்கு என்பதால எனக்கு ரொம்ப பிடித்த கோயிலும், அம்மனும் இதுதான். ஒரு முறை அந்த கோயில்ல பொங்கல் வச்சிட்டு இருந்தப்போ, ஒரு பெண்மணி 'நீங்க கண்ணை அசைச்சுப் பேசுவீங்களே அதுமாதிரி பண்ணிக் காண்பிங்கனு கேட்டாங்க'' இப்படி பல இடத்துல என்னோட ரோல் ரீச் ஆகியிருக்கு.

என்னோட பல விஷயங்களுக்கு கணவர் கவிதா பாரதி துணையா இருக்கார். 'சித்தி' சீரியல் ரைட்டரும் இவர்தான். எங்களோட பொண்ணு, நிலா கேரளாவுல படிச்சுட்டு இருக்கா. நானே சமைச்சு, சாப்பிடுறது ரொம்ப பிடிக்கும். எனக்கு எப்பவும் வீடு ரொம்ப சுத்தமா இருக்கணும். என்னோட கணவரோட வெளியில போகும்போது ரோட்டோரக் கடையில சாப்பிடுறது ரொம்ப பிடிக்கும். படம் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா, அதற்கான நேரம் கிடைக்கறதே இல்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடமா எனக்கு நேரமே கிடைக்கல.

தெய்வம் தந்த சீரியல்ல நடிக்கும்போது, பணத்தை நான் திருடி ஒளிச்சு வச்சுக்கிற மாதிரி ஒரு சீன் வரும். அப்போ எங்க வச்சா கண்டுபிடிக்க மாட்டாங்கனு யோசிச்சு.. என்னோட தலைமுடிக்குள்ள வச்சு பின்னல்ல வச்சுப்பேன். இந்த சீன் நடிச்ச பிறகு, என் பொண்ணோட பிரண்ட்ஸ் எல்லாம், 'உங்க அம்மா தலைமுடிய அவிழ்த்தா பணமா கொட்டும் போல’ன்னு கிண்டல் பண்ணினாங்களாம். ''ஏம்மா இந்த மாதிரி சீன்லலாம் நடிக்க ஒத்துக்கிட்டனு என்கிட்ட கோபிச்சுட்டா...' என கலகலவென சிரிக்கிறார் ஶ்ரீகன்யா.

-வே. கிருஷ்ணவேணி