Published:Updated:

இளைஞர்களை 'நாகினி’ ஷிவன்யா ஈர்த்தது ஏன்? #Naagini #TvSerial

Vikatan Correspondent
இளைஞர்களை 'நாகினி’ ஷிவன்யா ஈர்த்தது ஏன்? #Naagini #TvSerial
இளைஞர்களை 'நாகினி’ ஷிவன்யா ஈர்த்தது ஏன்? #Naagini #TvSerial


”சீரியல்னாலே பெண்கள்தானா? நீங்க வாங்க பாஸ்..” என இன்வைட் கொடுக்கறாள்  “நாகினி”

டிவியைப் போட்டாலே அழுக்காச்சி, ரிவெஞ்ச் என்று அலப்பறையைக் கூட்டி அக்கா, அம்மாக்களை கோபித்துக் கொள்ளும் அண்ணன், தம்பிகள் கூட கொஞ்ச நாளாக இரவு 10 மணியானால் ரிமோட்டும், கையுமாக  டிவி  முன் தவமிருக்கிறார்கள். நாகினியின் சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ், பழிவாங்கத் துடிக்கும் இச்சாதாரி பெண் நாகமாக நடித்திருக்கும் மெளனி ராய். சோஷியல் மீடியா பக்கம் சென்றாலே இந்த  நாகினி பொண்ணுதான் இப்போதைய ஹாட் டிரெண்ட் தமிழ்நாட்டு இளைஞர்களிடம்.

கலர்ஸ் டிவியில் பரபரப்பான திருப்பங்களுடன் ‘நாகின்’ என்ற பெயரில் ஒளிப்பரப்பான இந்த சீரியல், ‘அய்யய்யோ முடிஞ்சுருச்சே’ என்று இந்தி ரசிகர்களை தவிக்கவிட்டு கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. டி.ஆர்.பி ரேட்டிங்கையும், யூத்களின் பல்ஸ் ரேட்டையும் ஒருசேர  ஏறவைத்த இந்த சீரியலின் ’சீசன் 2’ மெளனி ராயின் ரசிகர்களுக்காகவே செப்டம்பர் மாதம்  கலர்ஸ் சேனலில் தொடங்க உள்ளது.

இந்த சீரியலில் கதை எல்லாம் முக்கியம் கிடையாது.  காலம் காலமாக பாம்பு பழிவாங்க வரும் அதே ‘நீயா’ ஸ்டோரிதான். நாகமணியைக் காலம்காலமாக காப்பாற்றி வருகின்ற தன்னுடைய அப்பா, அம்மாவைக் கொன்ற நண்பர்கள் ஐந்து பேரைக் கொல்ல, ஆத்திரத்தில் துடித்து பெண்ணுருவம் எடுத்து வரும் நல்லபாம்புதான் மெளனி ராய். கூடவே மற்றொரு நாகினியான ‘சேஷா’.

சீரியல் பேரில் சொல்லவேண்டுமானால், ‘ஷிவன்யா’. அதில் நாகமணியைத் திருடிக் கொண்டுவந்த நண்பர்களில் மெயின் வில்லனின் மகனுக்கு ஷிவன்யா மீது காதலோ காதல். கல்யாணத்தன்று ஏற்கனவே மணமகளாய் நிற்கும் நீண்ட நாள் தோழிக்கு டாட்டா காட்டிவிட்டு ஷிவன்யாவைக் கல்யாணம் கட்டிக் கொள்கிறார் ஹீரோ. இப்படிப் போகிறது கதை.

இதில் ஹைலைட்டே நாகினியாக வரும் மெளனி ராயும், குட்டி நாகினியான அடா கானும்தான். இந்தி சீரியல் டப்பிங் என்பதால் எந்த சென்சாரும் பெரிதாக கிடையாது. இயல்பாகவே அவர்களுக்கு ஆடைகளுக்கான கலர்களும், வடிவமைப்புகளும் கைவரப் பெற்றதென்பதால்  ஒற்றை பீஸ் மாடர்ன் டிரெஸ்சில் கூட இளவரசியாக ஜொலிக்கிறார் மெளனி ராய் என்பதுதான் பிளஸ் பாயிண்ட். கூடவே, நாகினியின் மாமியாராய் அசத்தியிருக்கும் நம்ம சுதா சந்திரனின் ஆடை, அலங்காரங்களும் பல பெண்களை இங்கே கட்டிப் போட்டிருக்கிறது.

மெளனியின் கண்களே பெரும்பாலும் எல்லாக் கதைகளையும் பேசிவிடுகின்றது. பெரிய உதடுகளும், பளபளவென ஜொலிக்கும் முகமுமாக அசத்தலான ஆடைகளுடன் ஸ்கீரினில் தோன்றும் ‘ஷிவன்யா’வாகிய மெளனி ராய், ஹீரோவான அர்ஜூனுடன் ’ஷார்ட் டைம்’ சீரியல் ரசிகர்களாகியிருக்கும் இளசுகளையும் கவர்ந்திழுத்து விடுகிறார். அடா கானோ உருவமெல்லாம் மாறாமலேயே, சேஷா என்னும் நாகினியாகவே வலம் வந்தாலும், பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்  களையான முகம் கொண்டவர்

 இந்தியில் 62 எபிசோட்களை எட்டிய ‘நாகினி’ சீரியல் முடிந்து, இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கப் போகிறது. ஷிவன்யாவும், சேஷாவும் என்ன ஆனார்கள்.. நாகமான ஷிவன்யாவும், மனிதனான ரித்திக்கும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா... ?

இந்த கேள்விக்கெல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால் இன்னும் ஒரு 50 எபிசோட்களுக்கு நீங்க வெயிட் பண்ணிதான் பார்க்கணும் யூத்ஸ்!

-பா.விஜயலட்சுமி