Published:Updated:

’நாகினிப் பாம்பா, மோகினிப் பேயா?’ - சீரியல் உலகின் ’த்ரில்லர்’ கலாட்டா!

’நாகினிப் பாம்பா, மோகினிப் பேயா?’ - சீரியல் உலகின் ’த்ரில்லர்’ கலாட்டா!
’நாகினிப் பாம்பா, மோகினிப் பேயா?’ - சீரியல் உலகின் ’த்ரில்லர்’ கலாட்டா!

'நான் அவளது உயிர் புகுந்த உடல்...அவள் எனக்குள்ளே உலவும் உயிர்’ என்று அழகான பெண் ஒருத்தி, அசுரத்தனமான டயலாக்குடன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பேயாட்டம் ஆடும் டிரெய்லரைப் பார்த்து பத்து நாளைக்கு வேப்பிலை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் நம் சீரியல் ரசிகக் கண்மணிகள்.

இந்த கொலைவெறி தாண்டவம், அடுத்த டப்பிங் சீரியலுக்கான ஆட்டம்... இம்முறை சன் டிவியில் இருந்து சற்றே தாவி, விஜய் டிவியும் இந்த சீரியல் சாகரத்தில் இணைந்திருக்கிறது. ஏற்கனவே டப்பிங் சீரியல்களை ஒளிப்பரப்பி வருகிறது விஜய் டிவி என்றாலும் கூட, ‘த்ரில், அமானுஷ்யம், பேய், காத்து, கருப்பு’ என்ற டப்பிங் சீரியல்களின் அல்டிமேட் மாய உலகில் இப்போதுதான் காலடி வைத்திருக்கிறது.

’சரக்க்..சரக்குனு ஓடுதாம்; உடையுதாம்’ என்று கருப்புக் கலரில் புடவை கட்டி, பேய்களுக்கே உரித்தான மேக்கப் இத்யாதிகளில் கொஞ்சம் கூட குறை வைக்காமல் ஹீரோயினைச் சுற்றிவரும் மோகினிப் பிசாசு, குட்டியான டிரெய்லர் வீடியோவிலேயே கொஞ்சம் ‘ஜெர்க்’ காட்டித்தான் மறைகிறது.

சன் டிவியில் ஏற்கனவே ‘நாகினி’ சீரியலில் ஷிவன்யா ரசிகர் மன்றம் ஆரம்பித்த பல இளைஞர்களும், வீட்டுக்குள் நுழையும் பாம்பைக்கூட அடிக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டு திரிகிறார்கள்... இந்தப் பாம்பு ‘நாகினி நாகம்’ஆ இருக்கக் கூடாதா? என்ற கற்பனைக் கனவுகளுடன்.

இந்த நிலையில் சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ‘நாகினி’ சீரியலை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்கும் இளசுகளைக் கவர, விஜய் டிவி களமிறக்கும் புத்தம்புது சீரியல் ஆயுதம்தான் மேற்சொன்ன ஒன்பது கோள்களும் உச்சம் பெற்ற  ‘மாய மோகினி’ சீரியல். (ஹப்பா... ஒருவழியா சீரியல் பேரைச் சொல்லியாச்சு!).

ரெண்டு சீரியல்களுக்குமே பூர்வீகம் ஒரே இந்தி சேனல்தான். நாகின்(நாகினி) முடிவடைந்தபின் அந்த இடத்தை நிரப்ப உருவானது ‘கவச்’. அதாங்க தமிழில் வரப்போகும் ‘மாய மோகினி’.அங்கிருந்து பயணப்படும் வழியில், எதிர்ப்பட்ட சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் நாகினி பாம்பையும், மோகினிப் பேயையும் ஆளுக்கொன்றாக தத்துக் கொடுத்துவிட்டது அந்த இந்திச் சேனல்.

’பிறந்த இடம் ஒன்றுதான் என்றாலும், தமிழிக்கு வந்துட்டா தனித்தனி தான்டா’ என்று சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக நாகினி Vs மாயமோகினி கதைதான் இப்போ டாப் டக்கர் யூத்ஃபுல் கலாட்டா. மொத்தத்தில், இந்த டப்பிங் ரேசில் ஜெயிக்கப் போவது நாகினியா, மோகினியா அப்படிங்கறதைத் தெரிஞ்சுக்க கொஞ்சம் பொறுத்திருக்கணும் பாஸ்...காரணம், விஜய் டிவி இன்னும் ‘மாய மோகினி’ தமிழில் அவதாரமெடுக்கப் போகும் தினத்தை அறிவிக்கலை!

’மாயமோகினி’  நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது:

1. பேய் புகப் போகும் பெண்ணாக நடித்திருக்கும் அந்த ஊதாக்கலர் புடவை (டிரெய்லரால் கிலி ஆனவங்களுக்கும், மேலே போட்டோ பார்த்தவர்களுக்கும் தெரியும்) இந்தி சீரியல் கதாநாயகி மோனா சிங். (மெளனி ராய் - மோனா சிங்! பேர் கூட பொருத்தம்தான்). பேய் இப்போதைக்கு மகேக் சஹால்...அப்புறமா சரா கான். (இவருக்கு பதில் இவர் கதைதான்)

2. ஹீரோயின் கணவராக வரும் ஹீரோவின் பெயர் விவேக் தாஹியா. இந்தி ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் ஹீரோயின் ’திவ்யங்கா’ பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொண்ட காதல் கணவர்.

3. இந்தியில் 23 எபிசோட்களைத் தாண்டிவிட்ட இந்த சீரியல், விரைவில் தமிழ் பேசி ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறது.

4. இந்தியிலேயே இதன் கதைக்கருவாக சொல்லப்படுவது ‘சத்தியவான் - சாவித்ரி’ ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி தான். அதன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, களத்தை முழுவதுமாக மாற்றித்தான் சீரியல் எடுத்திருக்கிறார்கள். அதனால், யூகமெல்லாம் இல்லாமல் டிவியில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

இன்னொரு விஷயம், எத்தனை டப்பிங் சீரியல் வந்தாலும், நாகினி VS மோகினி ரசிகர் பட்டாளமே உருவானாலும், நம்மோட குடும்ப உறவுகளைக் கண் முன்னே நிறுத்தும் நம்ம ஊர் சீரியல்களையும் மறந்துடாதீங்க மக்களே!

-பா.விஜயலட்சுமி

பின் செல்ல