Published:Updated:

நோ செல்ஃபி, விஹான் சிரிப்பு, 'நல்ல மருமகள்'... நான் சிநேகா பேசுகிறேன்!

நோ செல்ஃபி, விஹான் சிரிப்பு, 'நல்ல மருமகள்'... நான் சிநேகா பேசுகிறேன்!
நோ செல்ஃபி, விஹான் சிரிப்பு, 'நல்ல மருமகள்'... நான் சிநேகா பேசுகிறேன்!

நோ செல்ஃபி, விஹான் சிரிப்பு, 'நல்ல மருமகள்'... நான் சிநேகா பேசுகிறேன்!

'புன்னகை அரசி' என்று அழைக்கப்படும் நடிகை சினேகா 2000ம் ஆண்டு சினிமாத்துறைக்கு அறிமுகம் ஆனவர். 2001ம் ஆண்டு வெளிவந்த 'விரும்புகிறேன்' படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் தொடந்து நடித்து பல விருதுகளையும் வாங்கிக் குவித்தார். கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில விளம்பரங்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் சினேகா, பிரசன்னா இருவரும் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு 2015ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தைக்கு தாயானார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தத் திரையிலும் தலைகாட்டாமல் இருந்தவர் இந்த மாதம் ஜீ தமிழ் ஆரம்பித்துள்ள 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி:


இரண்டு வருடங்கள் கழித்து திரைக்கு வருகிறீர்கள், எப்படி இருக்கிறது டி.வி அனுபவம்?

எனக்கு டான்ஸ் என்றால் உயிர். ஆனால், படத்தில் நான் நடிக்கும்போது என்னுடைய நடனத்திற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும்தான் என்னுடைய நடனத் திறமையைக் காட்ட முடிந்தது. குறிப்பாக லாரன்ஸ் மாஸ்டருடன் 'பாண்டி' படத்தில் நான் ஆடிய வெஸ்டர் டான்ஸ் பல பேருக்குப் பிடித்திருந்தது. இப்படிக்கூட ஆடுவீங்களா என கேட்டுப் பாராட்டினார்கள். நான் பேசிக்காக கிளாசிக் டான்ஸர். எனக்கு வெஸ்டர்ன், கிளாசிக், ஃபோக் என எல்லா வகையான டான்ஸூம் தெரியும். அதனால் இந்த 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சிக்கான வாய்ப்பு வந்ததும் ஒப்புக் கொண்டேன்.

வெள்ளித்திரை, சின்னத்திரை நீங்கள் பார்க்கும் வித்தியாசம்?

எனக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டிலும் திறமையை காண்பிக்க முடியும். சாதாரணமான ஒருவரை நடுவராக உட்கார வைக்க மாட்டார்கள். சினேகா என்கிற பெயருக்கு கண்டிப்பாக ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கும். நான் படத்தில் கடந்த 15 வருடமாக இருந்த அனுபவம் இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பார்க்கும் வித்தியாசம்?

இப்போ இருக்கும் பலரோட ஆர்ட்டிடியூட் பார்த்தீர்கள் என்றால், ஒரு படம் அல்லது ஒரு சீரியலில் முழுவதுமாக வந்தாலே அவர்களுடைய கேரக்டர் முற்றிலுமாக மாறியிருக்கும். ஆனால், இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நல்லப் பெயர் வாங்கிய, பல பேருக்கும் தெரிந்த பிரபலங்கள், நன்றாக நடம் ஆடக்கூடியவர்கள் மற்றும் சாதாரண குடும்பப்பின்னணியில் இருந்து வந்திருக்கக்கூடிய டான்ஸர்கள் என மூன்று வித்தியாசமான நடனக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சரியான போட்டியாளர்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். டான்ஸ் மேல் உயிர் வைத்திருப்பவர்கள் தான் இந்த 12 பேரும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கதை இருக்கு. இவங்க 12 பேரும் ஜெயிக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை.

உங்கள் மகன் விஹான் எப்படி இருக்கான்?

ரொம்ப குறும்புக்காரன். ரொம்ப சமத்து. அவன் செய்யுற ஒவ்வொரு விஷயத்தையும் ரசிச்சிட்டு இருக்கோம். விஹானுக்கு ஒரு வருடம் ஒரு மாதம் ஆகிறது. எங்களோட மொத்த அன்பையும் அவன் மேல காண்பிச்சிட்டு இருக்கோம். இப்போ நான் நடிக்க ஆரம்பித்த பிறகு ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறேன். ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு போகவில்லை. அம்மாவோடு ஹோட்டலிலேயே விட்டு விட்டு சென்று விடுவேன். எங்களுக்கு எவ்வளவு பிரஷர் இருந்தாலும் விஹான் சிரிக்கும் ஒரு சிரிப்பு அத்தனையையும் காணாமல் போகச் செய்துவிடுகிறது.

சமீபத்தில் வாங்கிய பாராட்டு?

நல்ல மருமகள் என பெயர் எடுத்திருக்கேன். வீட்டையும், வேலையையும் சரியாக செய்து கொண்டிருப்பதாக அடிக்கடி பிரசன்னா பாராட்டுவார். ஒரு மனைவியாகவும், மருமகளாகவும், அம்மாவாகவும் நான் செய்யும் விஷயங்களுக்கு பாராட்டு வாங்கியாச்சு. சந்தோஷம்.

விஹான், பிரசன்னா அட்ராசிட்டி எதுவும்?

அப்பாவும், மகனும் அடிக்கடி செல்ஃபி எடுத்துட்டே இருப்பாங்க. அவங்களுக்கு செல்ஃபி எடுக்கிறது ரொம்ப பிடிக்கும். அப்பாவுக்கு ஏற்ற மாதிரி அவரும் போஸ் கொடுப்பார். நான் எப்பவாவது செல்ஃபிக்கு நிற்பேன். எனக்குப் பொதுவா செல்ஃபி எடுக்கப் பிடிக்காது.

நீங்கள் ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் பற்றி?

மம்முகா(மம்முட்டி) சாரோட இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். இப்போது தி கிரேட் பாதர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மோகன் ராஜா சாரோட படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். படத்தில் நடிக்கின்ற விருப்பம் ஏதும் இல்லாமல், குழந்தை, குடும்பம் என்று இருந்தேன். ஆனால், மோகன் சார், 'இது உங்களுக்கு மிகப்பெரிய என்ட்ரியாக இருக்கும். உங்களுக்கான ஸ்கோப் இதில் நிச்சயம் இருக்கும்.' என்று சொன்னார். கூடவே, அவர் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஓ.கே சொல்லிவிட்டேன்.

உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள்?

எனக்கு விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டபோது கூட, 'உங்க வொர்க் எனக்குப் பிடிச்சிருக்கு' என்று சொன்னேன். இப்போ நிறைய பேர் நன்றாக நடிக்கிறார்கள் ஆனால், விஜய் சேதுபதி எடுக்கும் ரோல், டயலாக் டெலிவரி, போர்ஸ்ட் ஹிரோயிசம் இல்லாமல் ரியலாக இருக்கிறது. அதனால் எனக்கு அவருடைய படங்கள் பிடிக்கும். ஹீரோயின்களில் எல்லோருமே நன்றாக நடிக்கிறார்கள். வித்தியாசம் காட்டுகிறார்கள்.

-வே.கிருஷ்ணவேணி
படங்கள்: எம்.உசேன்

அடுத்த கட்டுரைக்கு