Published:Updated:

“என்னை கலாய்ப்பாங்க, இருந்தாலும் பரவாயில்லை..!” - டான்ஸ் ஷோவிற்குள் டி.ஆர் வந்த கதை

“என்னை கலாய்ப்பாங்க, இருந்தாலும் பரவாயில்லை..!” - டான்ஸ் ஷோவிற்குள் டி.ஆர் வந்த கதை
“என்னை கலாய்ப்பாங்க, இருந்தாலும் பரவாயில்லை..!” - டான்ஸ் ஷோவிற்குள் டி.ஆர் வந்த கதை

ஜோடி நம்பர்-1 சீசன் 9 விரைவில் என விஜய் டிவியில் விளம்பரம் போட்டதில் இருந்து, யார், யார் ஆடப்போறாங்க, யார், யார் நடுவர்களாக வரப்போறாங்கனு அனைவரையும் எதிர்பார்க்க வைத்துவிட்டனர். போட்டியாளர்களை அறிவிக்க வேகம் காட்டியவர்கள் நடுவர்களை பற்றி வாயைத் திறக்கவேயில்லை. நடுவர் யாரு... யாரு... யாரு என கேட்க வைத்து, அட..! நம்ம டி.ஆருனு எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டனர். நடுவரை அறிவிக்க டி.ஆரை வைத்து எடுக்கப்பட்ட டான்ஸ் ப்ரோமோவும் வைரலானது. ஜோடிக்குள் டி.ஆர் எப்படி வந்தார்..? ப்ரோமோ ஷூட்டில் நடந்த சுவாரஸ்யங்கள் என்ன..? அவர்களிடமே கேட்டோம்.

விஜய் டிவியின் ப்ரோகிராம் ஹெட் பிரதீப்பிடம், எப்படி டி.ஆர் ஜோடிக்குள் வந்தார் என கேட்டதற்கு, “எந்த ஒரு புது சீசன் ஆரம்பிச்சாலும் யாரை நடுவராக அழைக்கலாம்னு ஒரு பெரிய லிஸ்ட்டே ரெடி பண்ணுவோம். அப்படி கடந்த சில சீசன்களுக்கே நாங்க டி.ஆர் சார்கிட்ட கேட்டோம். நாங்க சிங்கிங் ஷோவுக்கு கேட்கப்போன அவர் டாக் ஷோ பண்ணலாம்னு சொல்லுவார். டான்ஸ் ஷோவுக்கு கேட்டா சிங்கிங் ஷோ பண்ணலாம்னு சொல்லுவார். இந்த மாதிரி நான்-சிங்லையே போச்சு. இந்த டைம் தான் இது கரெக்ட்டா அமைச்சது. நாங்க இந்த டைம் டான்ஸ் ஷோவுக்கு கேட்டும் போது அவர் படத்தில் பிஸியா இருந்தனால முதலில் கொஞ்சம் யோசிச்சார். அப்பறம் ஓகே சொல்லிட்டார்” என்றவரிடம், டான்ஸ் ஷோவுக்கு எப்படி டி.ஆர் செட்டாவார்னு நினைச்சீங்க..? என்று கேட்டோம்.

 “டி.ஆர் சாருக்கு தெரியாத விஷயமே கிடையாது. எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வைச்சிருப்பார். கடந்த இரண்டு சீசனில் டான்ஸர்சை வைத்து தான் ஷோ பண்ணினோம். ஆனால் இந்த சீசனில் நிறைய பேர் டான்ஸ்க்கு புதுசு. செலிபிரிட்டியோட மனைவி, கணவன், குழந்தைகள்னு டான்ஸ் பண்றாங்க. அதுனால இந்த சீசனில் அதிகமா ட்ராமா டைப் டான்ஸ் தான் இருக்கும். டான்ஸ்க்குள்ள ஒரு கதை சொல்லுவாங்க. காமெடி, சென்டிமெண்ட்னு நிறைய கதை வரும். இதை எல்லாம் கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணனும்னா எல்லாம் தெரிஞ்ச டைரக்டர் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அதே மாதிரி டி.ஆர் சாரும் வந்துட்டார்” என்றவரிடம் ப்ரோமோ ஷூட்டிங் நடந்த விஷயங்களைப் பற்றி சொல்லுங்க என்றதும் ப்ரோமோ டைரக்டர் ராஜுவை அறிமுகப்படுத்தி வைத்தார் பிரதீப். 

“டி.ஆர் சார் டான்ஸ் பண்ணுன ப்ரோமோ ஷூட்டை 4 மணி நேரம் ஷூட் பண்ணினோம். அந்த நாலு மணி நேரமும் சார் செம எனர்ஜியோட இருந்தார். நாங்க அவுட்-புட் எப்படி வரணும்கிறதை மட்டும் தான் அவர்கிட்ட சொல்வோம். அதை அவர் கேட்டுட்டு 10 விதமா பண்ணிக்காட்டுவார். அதில் எது நமக்கு தேவையோ அதை எடுத்துப்போம். அதுக்கப்பறமும் ‘சார் எல்லாம் ஒழுங்கா வந்துச்சா, ஓகேவா, இல்ல நான் வேற ஏதாவது பண்ணனும்னாலும் சொல்லுங்க, நான் பண்றேன்’னு சொன்னார். அந்த அளவுக்கு நல்ல ஈடுபாடோட ஒர்க் பண்ணுவார். அந்த ப்ரோமோ கடைசியில சார் சில வசனங்கள் பேசுவார். அதுல, ‘இது ஒரு டான்ஸ் ட்ரிட், எகுறும் பாரு ஹார்ட் பீட்டு’னு ஒரு வசனம் வரும். அதை பேசி முடிச்சிட்டு அவரே ஹார்ட் பீட் சவுண்ட்டையும் வாயாலையே பண்ணினார்” என்றவரிடம் ஆஃப் தி கேமிரா, டி.ஆர் என்ன சொன்னார் என்று கேட்டோம்.

“டி.ஆர் சாரை பொறுத்தவரை கேமிராவை ஆன் பண்ணினா தான் சத்தமாவே பேசுவார். கேமிரா ஆஃப்ல இருக்கும் போது அவர் பேசுறதே கேட்காது. ஏதாவது சொல்லணும்னா நம்ம காதுகிட்ட வந்து தான் சொல்லுவார். கேமிரா ஆன் பண்ணிட்டா அவர் பேசுற தொணி, பாடி லாங்குவேஜ் எல்லாமே மாறிடும். ப்ரோமோல ஒரு ஷாட் டான்ஸ் பண்ணிட்டு வந்து சார் உட்கார்ந்தார். உட்கார்ந்துட்டு அவரே சிரிச்சார். ஏன் சார் சிரிக்கிறீங்கனு கேட்டதுக்கு, ‘இந்த வீடியோ வெளியானதும் எல்லாரும் என்னை கலாய்ப்பாங்க. ஆனால், பரவாயில்லை. எனக்கு இது பிடிச்சிருக்கு’னு சொன்னார்” என்றவரிடம் ப்ரோமோ ஐடியாவில் டி.ஆரின் பங்கு என்ன என்று கேட்டோம். 

“ப்ரோமோவுக்கு அவர் எதுவுமே சொல்லலை. ரெட்ரோ டைப்ல பண்ணலாம் சார், ’ஐயம் ஏ டிஸ்கோ டான்ஸர்’ பாட்டுக்கு டான்ஸ் பண்ணனும்னு சொன்னோம். அவர் எந்த மாற்றமும் பண்ணலை. சரி ஷூட் போகலாம்னு சொல்லிட்டார். விஷ்வல்ல ரெட்ரோ ஃபீல் வேணும்னு கேமிராமேன் வேல்ராஜ் சாரை கமிட் பண்ணுனோம். அவரும் சூப்பரா பண்ணிக்கொடுத்தார்” என்று ராஜு சொல்லியதும் பிரதீப் தொடர்ந்தார். “ப்ரோமோவுல மட்டும் டி.ஆர் சார் கலக்கியிருக்கார்னு நினைக்காதீங்க, ஷோவோட முதல் ரவுண்ட்லையும் செமயா பண்ணிருக்கார். மற்ற நடுவர்களுக்கெல்லாம் ஷோவோட ஓபனிங்ல இந்த மாதிரி பேசுங்க இதை பேசுங்கனு சொல்லுவோம். ஆனால், டி.ஆர் சார் என்ட்ரி ஆனதும் அரை மணி நேரம் பேசினார். அதில் எது தேவையோ கட் பண்ணிக்கோங்கனு சொல்லிட்டார். முதல் ரவுண்ட் ஷூட் முடியவே ரொம்ப நேரம் ஆச்சு. அவ்வளவு நேரம் ஆகியும் முடியும் போது, ‘போதுமா, உங்களுக்கு திருப்தியா. இல்ல எக்ஸ்ட்ரா வேணும்னாலும் சொல்லுங்க. நான் பண்றேன்”னு தான் சொன்னார். அந்த அளவுக்கு இந்த ஷோ நல்லா வரணும்னு அவருக்கு ஆசையிருக்கு. அதே மாதிரி இன்னொரு ஜட்ஜ்ஜா நடிகை சதா வராங்க. அவங்களும் நல்ல ஈடுபாடோட நிறைய அக்கறை எடுத்துக்கிட்டு பண்றாங்க. ரீல் ஜோடி ரியல் ஜோடின்னு மொத்தம் 40 பேர் இந்த சீசன்ல டான்ஸ் பண்றாங்க. இந்த சீசன்ல இவங்க எல்லாரும் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்” என்று மனநிறைவாக பேசி முடித்தார் பிரதீப்.

டி.ஆர் நடனமாடிய ப்ரோமோ பாடலின் மேக்கிங் வீடியோவை காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்

மா.பாண்டியராஜன்

பின் செல்ல