Published:Updated:

'நம்புங்க இதான் என் நிஜ வயசு!’ - 'கல்யாணம் முதல் காதல் வரை' சயித்ரா கலகல

Vikatan Correspondent
'நம்புங்க இதான் என்  நிஜ வயசு!’ - 'கல்யாணம் முதல் காதல் வரை' சயித்ரா கலகல
'நம்புங்க இதான் என் நிஜ வயசு!’ - 'கல்யாணம் முதல் காதல் வரை' சயித்ரா கலகல


விஜய் டி.வி யில் ஒளிப்பரப்பாகி வரும் 'கல்யாணம் முதல் காதல் வரை'  சீரியல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ளது. அமித் பார்கவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடித்து வந்தனர். அண்மையில் தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகினார் பிரியா. அவருடைய விலகல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. தற்போது அந்த இடத்தில் சயித்ரா நடித்து வருகிறார். கடந்த இரண்டரை வருடங்களாக மும்பையில், 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் 'அவுனு மத்தே ஷர்வானி' (avanu mathe shravani)  என்கிற பெயரில் கன்னட மொழி வெர்ஷன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சயித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழிலும் கதாநாயகியாக ரீபிளேஸ் ஆகியிருக்கும் அவரிடம் பேசினோம்.

சயித்ராவிடம் பேச ஆரம்பித்தால் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. கேள்விகளுக்கு அவரிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் வருகிறது. 

உங்களைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் சொல்லுங்கள்? 

என்னுடைய முழுப் பெயர். சயித்ரா என்பது கன்னட மொழியில் ஒரு மாதத்தின் பெயர். எனக்கு ஸ்ரீலதான்னு ஓர் அக்கா இருக்காங்க. அப்பா சந்திரா ரெட்டி பேஷன் டிசைனராக இருக்கார். அம்மா ஹவுஸ் வொய்ஃப்பா இருக்காங்க. நான் பிறந்து வளர்ந்தது படிச்சது எல்லாமே பெங்களூருலதான். அக்கா சென்னையில் ஐ.டி கம்பெனியில வேலை பாக்கறாங்க. அவங்க இருக்கிற தைரியத்தில்தான் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல்ல நடிக்க அனுப்பி வச்சாங்க. இதுதான் தமிழில் என்னுடைய முதல் சீரியல். அதேபோல கன்னடத்திலும் எனக்கு அதுதான் முதல் சீரியல். 

தமிழ் பேசத் தெரியுமா? 

தமிழ் மொழியில நடிக்க ஆரம்பிச்சு ஒரு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள ஓரளவுக்கு கத்துகிட்டேன். சீரியல் டைரக்டர் எனக்கு நாலு முறை சொல்லித் தருவார். ஆனாலும், சில சமயம் சரியா பேச வராது. அதனால் என்னோட நடிக்கும் அமித், கூட அமர்ந்து சொல்லிக் கொடுப்பார். ரெண்டு பேரும் கன்னடம்கிறதால ஈஸியாக புரிஞ்சுக்க முடியுது. தமிழ் கத்துக்கறதுக்கு ஈஸியாகத்தான் இருக்கு. கூடிய சீக்கிரம் எப்படிப் பேசறேன்னு பாருங்க. 

உங்களைப் பார்த்தால், ரொம்ப பக்குவமான பொண்ணா தெரியுதே..?

நீங்க வேற. நான் இப்போதாங்க பி.சி.ஏ படிச்சிட்டு இருக்கேன். நிஜமாவே எனக்கு 21 வயசுதான் ஆகுது. நம்புங்க. பயங்கர ஜாலி டைப். எப்பவுமே கலகலனு இருப்பேன்.  

தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் யாருடன் ஜோடி சேர விரும்புவீர்கள்...?

எனக்கு சூர்யானா அவ்வளவு பிடிக்கும். அவரோட 'ஏழாம் அறிவு', 'அயன்', '24'ன்னு படம் ஒன்னுவிடாம பார்த்திருக்கேன். அவரோட ஸ்டைல், மெனக்கெடல், கதை தேர்வு பண்றதுன்னு நிறைய விஷயங்கள் பிடிக்கும். தமிழ்ல என்ன கதையா இருந்தாலும், அவர் கூட நடிக்க நான் ரெடி. 

நடிப்பைத் தவிர வேற என்ன தெரியும்?

நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் படிக்க ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு ஒன்னு தெரியுமா?  நான் சேத்தன் பகத்தோட தீவிர ரசிகை. ரவீந்தர் சிங்கின் எழுத்தும் ரொம்பப் பிடிக்கும். அப்புறம், பிரண்ட்ஸ் கூட இருந்தா, கார்ல ரொம்ப தூரம் போகப் பிடிக்கும். ஜிம் போகணும்னு ரொம்ப ஆசைப்படுவேன். ஆனா, டைம் கிடைக்கறது இல்லை. அம்மா கையால சமைச்ச சாப்பாடு ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா பண்ற ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கு நான் அடிமை. சென்னை ஷூட்டிங்ல சாப்பிட்ட அப்பம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஐ லைக் அப்பம்.

உங்களுடைய நீண்டநாள் கனவைச் சொல்ல முடியுமா? 

ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்கிறதுதான் சின்ன வயசு ஆசை. அது நடக்கலை. இப்போ ஒரு நல்ல நடிகையா வரணும். அதுதான் என்னோட கனவு. 

உங்களுக்கு என்ன பிடிக்கும்? 

விதவிதமான வாட்சுகளை சேகரிக்கறதுன்னா ரொம்பப் பிடிக்கும். வீட்டுல அஞ்சு செட் வாட்ச் வச்சிருக்கேன். நிறைய கூலிங் கிளாஸ்களை வாங்கறது பிடிக்கும். 

ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்? 

எனக்கு நான்தான் ரோல் மாடல். மத்தபடி தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, நித்யா மேனன், நயன்தாரான்னு இரண்டு பேரையும் பிடிக்கும். இப்போதான் நிறைய தமிழ் படங்கள் பார்த்துட்டு வர்றேன். ' தமிழைக் கத்துக்கனும்னா தமிழ்ப் படங்கள்தான் ஒரே வழி'ன்னு அமித் பார்கவ் சொல்லியிருக்கார். கூடவே, தினமும் இத்தனை படங்களைப் பார்க்கணும்னு அசைன்மென்ட் கொடுத்திருக்கார். சப்-டைட்டிலோட தினமும் தமிழ் படம் பார்த்துட்டு வர்றேன். சீக்கிரம் தமிழை சரளமா பேசணும். ஹீரோயின் ஆகணும்' 

- வே. கிருஷ்ணவேணி