Published:Updated:

'டி.வில இருக்கிறவங்களுக்கு ஸ்டேஜ் வேல்யூ தெரியலை!' - 'அது இது எது' சிங்கப்பூர் தீபன்

'டி.வில இருக்கிறவங்களுக்கு ஸ்டேஜ் வேல்யூ தெரியலை!' - 'அது இது எது' சிங்கப்பூர் தீபன்
'டி.வில இருக்கிறவங்களுக்கு ஸ்டேஜ் வேல்யூ தெரியலை!' - 'அது இது எது' சிங்கப்பூர் தீபன்

வரும் 2017 ஜனவரி மாதம் வெளியாகவிருக்கும் மூன்று படங்களிலும் நல்ல 'வெயிட்டான' கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் விஜய் டி.வி புகழ் சிங்கப்பூர் தீபன். 'பர்மா' படத்தின் மைக்கேல் ராஜா ஹீரோவாக நடிக்கும் 'பதுங்கி பாயனும் தல', ஆதித்யா சேனல் VJ  அசார் ஹீரோவாக நடிக்கும் 'ஏன்டா தலைல என்ன வைக்கல', கலைஞர் டி.வி, 'நாளைய இயக்குநர் அழகுராஜின் இயக்கத்தில் 'ராஜாவின் பார்வை ரானியின் பக்கம்' ஆகிய  மூன்று படங்கள் தான் அவை. ஷூட்டிங் முடித்து சற்று நேரம் ஓய்வாக இருந்த அவரிடம் பேசிய போது,

''டி.வி ல இருந்து சினிமாவுக்கு வந்த  இத்தனை வருடங்களில் கத்துக்கிட்டது என்ன?''

''நான் டி.வி யில இருந்து சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சு கிட்டத்தட்ட மூன்று வருஷம் இருக்கும். சினிமாவுல சாதிக்க முதல் தகுதி அமைதியா மத்தவங்க சொல்றத கேட்கிறதுதான். நாம பேசுறத குறைச்சுக்கிட்டு, மத்தவங்க  பேசுறதை கேட்க ஆரம்பிச்சிடனும். சரியான நேரத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கிறது ரொம்ப முக்கியம். நம்ம ஷூட்டிங் இருக்கோ, இல்லையோ மத்தவங்க எந்த மாதிரி பண்றாங்க. அவங்ககிட்ட இருந்து என்ன கத்துக்கலாம் என்கிற மனப்பான்மை இருக்கணும். ஷூட்டிங் ஆரம்பிக்கும் நேரத்துக்கு முன்னாடியே ஆஜராகிடணும், எங்க சூப்பர் ஸ்டார் மாதிரி. மொத்தத்துல சினிமாத் துறையில ஜெயிக்கணும்னா அடக்கி வாசிப்பது நல்லது.'' 

''இதுவரைக்கும் மூன்று சுந்தர் சி படங்களில் நடிச்சிருக்கீங்க, அவர்கிட்ட கத்துக்கிட்டது?''

''நிறைய ஹியூமர் சென்ஸ். நான் டிவியில இருக்கும்போதே நிறைய ஜோக்ஸ், டயலாக்ஸ் அதிகம் உருவாக்குவோம், எழுதி பார்ப்போம். அதுமாதிரி எந்தெந்த இடத்துல எப்படி மாற்றம் கொண்டு வரலாம். உடல் மொழியை எப்படி மாற்றுவது இப்படி பல விஷயங்களை அவர்கிட்ட இருந்து கத்திருக்கிறேன். விஷால் நடிச்ச, 'ஆம்பள' படத்தில என்னோட ரோல் ஒரு இடத்துல பெருசா இருக்கும். அதை அவர் நினைச்ச மாதிரி செஞ்சதால கூப்பிட்டுப் பாராட்டினார். அதுக்குப் பிறகு, 'ஹலோ நான் பேய் பேசுறேன்', 'முத்தின கத்திரிக்கா', இந்த இரண்டு படங்களிலும் தொடர்ந்து பாராட்டினார். ஆனா,  பாராட்டையோ, புகழ்ச்சியையோ பெருசா எடுத்துக்கிறதே இல்லை. ஏன்னா, தொடர்ந்து இரண்டு, மூன்று தடவை பார்க்கிறவங்க நான்காவது தடவையும் நம்மகிட்ட வித்தியாசமா எதையாவது எதிர்பார்ப்பாங்க. அதுல நம்மலால் சரியா செய்ய முடியலனா கஷ்டமா போயிடும். அதனால, திட்டுகளை ஏற்றுக்கிட்டாலும், பாராட்டுகளை தலைக்குக் கொண்டு போறதே இல்ல. ''

''முன்ன மாதிரி விஜய் டிவி 'அது இது எது' நிகழ்ச்சியில் உங்கள பார்க்க முடியலையே?''

'' 'அது இது எது' நிகழ்ச்சிதான்  என்னை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு பக்க பலமா அமைஞ்சது எங்க டீம். ஒவ்வொருத்தருமே ஒவ்வொரு விதத்துல திறமையானவங்க. ஒவ்வொருத்தரும் எங்களுக்குள்ள ஷேர் பண்ணிட்டு ரிகர்சல் பண்ணுவோம். அதுக்காக கண்ணு முழிச்சி மெனக்கெடுவோம். ஆனா, இப்போ எல்லோருக்கும் அந்த ஆர்வம் குறைஞ்சிடுச்சுனு நினைக்கிறேன். டி.வி யில நடிக்கிற அந்த ஸ்டேஜ் வேல்யூ தெரியல. அந்த ஷோவுல என்னை அடிக்கடி நடிக்கக் கூப்பிடுவாங்க. அது இது எது ஷூட்டிங் தேதியும், நான் கமிட் ஆகியிருக்க படத்தோட ஷூட்டிங் தேதியும் ஒன்னா வந்திடும். அதனால பெரும்பாலும் டிவி யில நடிக்க முடியறது இல்ல. இன்னொன்று, டி.வி யில இருந்து சினிமாங்கிற இடத்துக்கு வந்தாச்சு. அதே மாதிரி டயலாக், பஞ்ச், ஜோக் எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கும். படத்திலும், டி.வி யில பேசுற மாதிரியே பேசினா மக்களுக்குப் போர் அடிச்சிடும். அதனாலதான், மறுபடியும் டி.வி யில சரியா கவனம் செலுத்துவதில்லை. சினிமாவுல ஒரு முறை வந்தாலும், அது மக்களிடம் நல்ல ரீச் ஆகும். 

''ரொமான்டிக் காமெடியில் கலக்குறீங்களாமே?''

'' 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' படத்தில் நானும், மதுமிதாவும் ரொமான்டிக் காமெடியில் நடிச்சிருக்கோம். நாங்க ரிகர்சல் பார்க்கும்போது செம்மையா கலாய்ச்சிட்டு இருப்போம். ஆனா, எனக்கு பிரகாஷ்ராஜ் மாதிரி, பொன்னம்பலம் மாதிரி டெரர் வில்லனா நடிக்க ஆசை. நம்மல எல்லாம் ரொமான்டிக் ஆக்டரா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. என்னப் பார்த்தாலே சிரிச்சிடுறாங்க. அதான் வருத்தமா இருக்கு.'' 

''உங்க அடுத்தக்கட்ட பிளான்?''

''அது இப்போ சொல்ல வேண்டாம் என நினைச்சேன். இருந்தாலும், நீங்க கேட்டதால சொல்றேன். நான் ஸ்கூல் படிக்கிறப்போ இருந்து ரஜினியோட தீவிர வெறியன். அஞ்சு பசங்க டீமா சேர்ந்து ஆளுக்கு 50 ரூபாய் சேர்த்து, தலைவரோட பிறந்த நாளுக்கு மத்தவங்களுக்கு புளியோதரையும், வடையும் வாங்கிக் கொடுப்போம். இதுவரைக்கும் டாப் 10 படங்கள் வந்தாலும், முதல்ல தலைவர் படத்தைத்தான் பார்ப்பேன். 'கபாலி' படத்துல ஒரு சீன்லயாவது நடிச்சிட மாட்டோமா...? யாராவது கூப்பிட மாட்டாங்களானு ஏங்கியிருக்கேன். இதுவரைக்கும் யாரோட ஆபீஸூக்கும் போய் வாய்ப்பு கேட்டு நின்னது இல்ல. ஆனா, சரித்திரத்துல இடம்பிடிக்க இதையெல்லாம் யோசிக்கக் கூடாது என முடிவு பண்ணிட்டேன். அடுத்து தலைவர் நடிக்கிற எந்த படமா இருந்தாலும் சரி, ஓரமா ஒதுங்கிப் போற சீன்ல நடிக்கக் கூப்பிட்டாலும் மறுக்காம நடிப்பேன். யார் டைரக்டர் என தெரிஞ்ச உடனே அவரை ஆபீஸ்ல போய் பார்த்து வாய்ப்பு வாங்கிடனும். அதுதான் என்னோட அடுத்தகட்டப் பிளான். வரலாறு முக்கியம் அமைச்சரே.'' 

- வே. கிருஷ்ணவேணி 

அடுத்த கட்டுரைக்கு