Published:Updated:

''எனக்கு முதுகெலும்பு இருக்கு... பிரச்னையை கண்டு ஓடி ஒளிய மாட்டேன்' - லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்.

''எனக்கு முதுகெலும்பு இருக்கு... பிரச்னையை கண்டு ஓடி ஒளிய மாட்டேன்' - லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்.

'அம்மணி' படம் வெளியானதை அடுத்து கடந்த வருடம் நடந்த சென்னை பெருவெள்ளத்தை மையமாக கொண்ட கதைக்களத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர், நடிகை என பன்முகம் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன். எல்லாவற்றையும் தாண்டி 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி வாயிலாக மக்களிடையே நெருக்கமாக அறிமுகம் ஆனார். இந்த நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய வார்த்தையை சமூக வலைதளங்கள், சினிமா என பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் படம் தொடங்கி தற்போது ஜி.வி.பிரகாஷ் படம் வரை அவருடைய வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கென பதிலடியும் கொடுத்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன், அவரிடம் பேசினோம்...

'அம்மணி' பட வரவேற்பு எப்படி இருந்தது?

ஜி தமிழ் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி வாயிலாக கிடைச்சதுதான் இந்த கதை. என்னுடைய முதல் படமான 'ஆரோகணம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இந்த படத்திற்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சந்தோஷமும், வாழ்த்தும் தான் அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியை எடுக்க வைச்சிருக்கு.

அடுத்து எடுக்கவிருக்கும் படத்தோட பெயர்? கதை பற்றி?

பொதுவாகவே சினிமாவில் ஹீரோ தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருப்பார். ஆனால், கடந்த வருடம் ஏற்பட்ட சென்னை மழை வெள்ளத்தில் பல ஹீரோக்களைப் பார்க்க முடிந்தது. அந்த ஹீரோக்களையும், மனித நேயத்தையும் மனதில் வைத்துதான் கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட ஸ்கிரிப்ட் முடியும் தருவாயில் இருக்கு. எனக்கு எப்போ கம்ஃபர்டா தோணுதோ அப்போ படம் இயக்க ஆரம்பிச்சுடுவேன்.

கதை எழுதும் போது வீட்ல டிஸ்கஸ் பண்ணுவீங்களா?

கண்டிப்பா... பொதுவாக எந்த கதையை மனசுல நினைச்சாலும், எழுதினாலும் என்னோட குடும்பத்தார்கிட்ட டிஸ்கஸ் பண்ணுவேன். என்னோட கணவர், மகள்கள், மருமகன் என எல்லார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிதான் கதையையே முடிவு பண்ணுவேன். அவங்களும் என்னோட கதையில என்ன மாற்றணும், என்ன சேர்க்கணும் என சொல்லுவாங்க.

'சொல்வதெல்லாம் நிகழ்ச்சிப் பற்றி?

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி என்னைப் பொருத்தவரைக்கும்  சாதாரணமான நிகழ்ச்சி கிடையாது. இங்கே பேசப்படுற ஒவ்வொன்றும் உண்மைதான். நான் பேசுற, செய்யுற விஷயங்களையும் உண்மையா நேசித்து செய்து கொண்டு இருக்கிறேன். பொதுவாக, நிகழ்ச்சியை வெளியில இருந்து பார்க்கும் போது அது குடும்ப பிரச்னை மாதிரி தெரியலாம். ஆனால், பல நேரங்களில் அது சமுதாயப் பிரச்னையாதான் இருக்கும். பொதுவா, கணவன், மனைவி பிரச்னைனா ஒதுங்கிப் போவோம். ஆனா, அதுவே வன்முறையாக மாறும் போது அதை யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம் என சட்டமே சொல்லுது.

அது மாதிரியான நிறைய பிரச்னைகள் குடும்பப் பிரச்னையில் இருந்து சமுதாயப் பிரச்னையாக மாறும் போது அதற்கான தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும் அல்லது வழிகாட்ட வேண்டியிருக்கும். நம்ம வாயில இருக்கிற பற்கள் மாதிரிதான் குடும்பத்திற்குள் நடக்கு வன்முறைகளும். பற்கள் சொத்தையாக மாறுவதற்கு முன்பு சரி செய்யணும். தனி அறையில் கணவன், மனைவி இரண்டு பேரும் எப்படி இருந்தீங்கனு நாங்க கேட்கப் போறது இல்ல. அது மாதிரியான விஷயங்களை ஆலோசிக்கிறதும் இல்ல. குடும்பத்தைத் தாண்டி சமூகத்தை பாதிக்கக் கூடியதைதான் வெளிப்படையா பேசுறேன். இப்போ வரைக்கும் நான் செய்யுற வேலைய புனிதமா செய்துகொண்டு இருக்கேன். மக்கள் எனக்கு துணையாக இருக்காங்க. எப்போதுமே, 95% சதவீதம் பேர் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்காங்க. அறை குறையா பார்க்கிறது, கேட்கிறதுனு இருக்கவங்கதான் தேவையில்லாத வதந்திகளை பரப்பி விட்டுட்டு இருக்காங்க. விமர்சனம் செய்து கொண்டும் இருக்காங்க. 

மற்ற சேனல்களிலும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருக்கிறார்களே?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். அது அவங்களோட தனித்துவம். எந்த நிகழ்ச்சியும் ஒவ்வொருத்தரும் அணுகிற விதத்தில்தான் இருக்கு. தனித்துவமாகப் பேசுவது, எதையும் தைரியமாப் பேசுவது இவை எல்லாம் எனக்குள் இருக்கக் கூடிய உண்மைத் தன்மை தான். இதுதான் என்னோட தனித்துவம். இந்த நிகழ்ச்சியில் தன்னோட பிரச்னைகளை சொல்றதுக்கு ஆரம்பத்திலேயே நிறைய பேர் சேனல் ஆபீஸ் வாசல்ல காத்துட்டு இருப்பாங்க, இப்போ அது இன்னும் அதிகமாகியிருக்கிறது. 

அப்போ பிரச்னைகள் அதிகமாகியிருக்கிறது என்ன சொல்கிறீர்களா?

அப்படியில்ல. தங்களுடைய பிரச்னைகளை மக்கள் தைரியமாக  வெளியில வந்து பேசுறாங்க என்பதே நிஜம். வெளிநாட்டினர் பெரும்பாலும் எந்த பிரச்னைகளாக இருந்தாலும் சரி அதை தீர்க்கவே முடிவெடுப்பாங்க. வெளியில் சொல்ல எப்போதும் வெட்கப்பட மாட்டாங்க. இப்போது நாமும் அது போல வெளிப்படையாக வாழ ஆரம்பிச்சிருக்கோம். இது வரவேற்க வேண்டியது. 

'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என பல இடங்களில் உங்க டயலாக்கை பயன்படுத்துகிறார்களே எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ஆரம்பத்தில் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனா, அதையே திரும்ப திரும்ப தொடர்ந்து செய்யும் போதுதான் எரிச்சலா இருக்கு. சந்தோஷமும் இல்ல, வருத்தமும் இல்ல. எரிச்சல்தான் அதிகமாகுது. ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் உள்ளே என்ன இருக்கோ அதுதான் வெளியில வரும். மக்களுக்கான எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது அரைச்ச மாவையே ஏன் அரைக்கிறீங்க?. கிரியேட்டிவா பண்ணுங்க. ஒருத்தர் செய்ததையே ஏன் இப்படி காப்பி அடிக்கிறீங்க. இப்படித்தான் கேட்க தோணுது.  

இதுவரை மிரட்டல் எதுவும் வந்திருக்கா..?

ஆரம்பத்தில் வந்தது. இப்போது இல்லை.

உங்கள் கணவர் இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறார்?

உண்மைய சொல்லணும்னா கண்டுக்கவே மாட்டார். உன் பாட்டுக்கு உன் வேலையைப் பாரு. இந்த நாய் எல்லாம் இப்படித்தான் குறைச்சிட்டு இருக்கும்' என்பார். 

உங்களை கலாய்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொள்ள விரும்புவது?

எனக்கு முதுகெலும்பு இருக்கு. நான் எந்த பிரச்னையை கண்டும் ஓடி ஒளிய மாட்டேன். அதை தைரியமா எதிர்த்து நிப்பேன். மத்தவங்களால அதை ஏன் செய்ய முடியலங்கறதுதான் என்னோட கேள்வி. என்னால வெளிப்படையா நடந்துக்க முடியும் போது, உங்களால ஏன் முடியல. மத்தவங்க புதுசா ஒரு முயற்சிப் பண்ணும் போது அதை கொச்சைப்படுத்தாதீங்க. இன்னும் முக்கியமா ஒரு விஷயம் சொல்லிக்கிறேன்... இளைஞர்கள் பெரியவங்களை முதல்ல மதிக்கக் கத்துக்கோங்க.


-வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு