Published:Updated:

'என் குழந்தைகள் நல்லா இருக்கணும்னுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!' - 'மதுரை' முத்து #VikatanExclusive

'என் குழந்தைகள் நல்லா இருக்கணும்னுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!' - 'மதுரை' முத்து #VikatanExclusive
'என் குழந்தைகள் நல்லா இருக்கணும்னுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!' - 'மதுரை' முத்து #VikatanExclusive

சின்னத்திரையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் மதுரை முத்து, சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்தக் கட்டப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவிலும் தன்னுடைய திறமையைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு மதிய இடைவேளையின்போது அவரிடம் பேசினோம்,
 

''எதுக்கு உங்க மேல இவ்வளவு வதந்தி?''

''அதுதான் எனக்கும் தெரியல. எது எப்படி இருந்தாலும், என்னைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். என்னோட முதல் மனைவியைப் பத்தியும் தெரியும். முதல் மனைவி பற்றிய சில தேவையில்லாத வதந்திகளை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவங்களுக்கு கடவுள் பக்தி அதிகம். கோயில் கோயிலா அடிக்கடிப் போவாங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவங்களுக்கு பக்தி விஷயத்துல ஈடுபாடு அதிகமா இருந்தது. அப்படி கோயிலுக்குப் போகும்போதுதான் விபத்து ஏற்பட்டிருக்கு. அவங்க மேல நான் அவ்வளவு பாசம் வச்சிருக்கேன். அதனாலதான் ஃபேஸ்புக்ல அவங்களப் பத்தி உருக்கமானப் பதிவு போட்டேன்.  என்னோட அம்மாவுக்கு 77 வயசாகுது. அவங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கு. அப்பாவுக்கு 85 வயசாகுது. அவருக்கு ஹார்ட் பிராப்ளம். இப்படி அவங்களப் பாத்துக்கிறதே கஷ்டமா இருக்கும்போது, இரண்டு பெண் குழந்தைகளையும் பார்க்க வேண்டியிருக்கு. உண்மையில், அதனால தான் திருமணம் பற்றி முடிவெடுக்க வேண்டியதாப் போச்சு. நான் ஃபேஸ்புக்ல முதல்ல போட்ட மாதிரி திருமணம் ஆனது உண்மைதான். என்னோட குழந்தைகளை பராமரிப்பதற்காகத்தான் அந்த முடிவை எங்க வீட்ல எடுத்தாங்க. நிறைய பேர் இதை தவறா எடுத்துக்கிட்டதால்தான் ஃபேஸ்புக்ல இருந்து அந்த போஸ்டை நீக்கிட்டேன்.'' 

''நீங்க இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் பற்றி?''

''அவங்க பேர் நீத்தி. என் மனைவியோட பெஸ்ட் பிரண்ட் இவங்க. இப்போ மதுரையில பல் மருத்துவரா இருக்காங்க. சின்ன வயசுலயே அவங்க அப்பா, அவங்கள விட்டுச் சென்றதால, அம்மா வளர்ப்புல வளர்ந்தாங்க. அதனாலயே அவங்களுக்கு, 'நம்மள மாதிரி இந்த குழந்தைகளும் பாசம் இல்லாம வளர்ந்துடக்கூடாது. அவங்கள பாத்துக்கிறதுக்காகவாவது திருமணம் செய்துக்கிறேனு' சம்மதிச்சாங்க. அவ்வளவு படிப்பு, வசதி இருந்தும் மனித நேயத்தோடு ஏத்துக்கிட்டதுதான் பெரிய விஷயமா நான் பார்க்கிறேன். என்னோட முதல் மனைவி லேகா என்கின்ற வைய்யம்மாள் உயிரோட இருக்கும்போதே அடிக்கடி இரண்டு குழந்தைகளும் இவங்க வீட்டுப் போகும். அவங்களும் எங்க குழந்தைகள் மேல ரொம்ப பாசம் வச்சிருந்தாங்க. இப்போ அவங்கள திருமணம் செய்து கொண்ட பிறகு, என்னோட இரண்டாவது பொண்ணு முத்ரா கிளாஸ் பர்ஸ்ட் வந்திருக்காங்க. முதல் பொண்ணு யாழினியும் இரண்டாம் வகுப்புல நல்லாப் படிக்கிறாங்க. இரண்டு பேருக்குமே வீட்ல டியூசன் சொல்லித் தராங்க நீத்தி.''

''எப்படி தொடர்ந்து உங்களால இவ்வளவு ஜோக்ஸ் எடுக்க முடியுது?''

''எந்நேரமும் இதே நினைவா தான் இருக்கும். புதுசுப் புதுசா கிரியேட் பண்ணிட்டே இருப்பேன். எப்பவும் ஒரு மனுஷனை உயிர்ப்போடு வைக்கிறது கிரியேஷன் தான். அதை கத்துத் தர முடியாது. ஒவ்வொருத்தருக்கும் அதுமேல ஈடுபாடு அதிகம் இருக்கணும். மேலும், எந்த துறையா இருந்தாலும் சரி, அதுல எதாவது ஒரு வித்தியாசத்தை காண்பிக்கணும். அப்பதான் மக்கள் ஏத்துப்பாங்க. இதுவரைக்கும்  320 ஸ்டான்ட் அப் காமெடிகள் பண்ணியிருக்கேன். 60 க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியிருக்கேன். என்னாலயே எது மொக்கை, எது நல்லதுனு டிசைட் பண்ண முடியும். அதனால நானும் ரசிக்கிற விஷயத்தைத்தான் மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கிறேன்.''

''அப்போ ரொம்ப பிஸியா இருக்கீங்களா?''

''நான்கு வருஷமா பட்டிமன்ற நடுவரா இருந்திருக்கேன். அதே சமயத்துலதான், சன் டிவி 'சன்டே கலாட்டா'வுலயும் நடிச்சிட்டு இருந்தேன் இப்போ, சன் டிவில 'காமெடி ஜங்ஷன்', ஆதித்யாவுல, 'ஆதித்யா திருவிழா' என ஓய்வில்லாம ஓடிட்டு இருக்கேன்.'' 

''சினிமாவுல நிறைய படங்களில் கமிட் ஆகியிருக்கீங்களாமே?''

''சினிமாவுல இயக்குநராகணும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை. 2005 ல் விஜய் டிவி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில டைட்டில் வின்னரா வந்தேன். முதன் முதல்ல ஸ்டான்டப் காமெடியனா வந்தது நான் தான். இப்போ சினிமாவுல நடிகனா மாறியிருக்கேன். இப்போ வெள்ளித்திரையில நான்கு படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். ' இவன் ஏடாகுடமானவன்', 'ரோஸ் கார்டன்',  ''தண்ணி வண்டி', 'ஒரு தலை காதல்' இந்த நான்கு படங்களும் பண்ணிட்டு இருக்கேன்.  இது மட்டும் இல்லாம பெயர் வெளியிடப்படாம இருக்கும் சில படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரத்துல வெளியாகவுள்ள இந்த படங்கள் மூலமா நல்ல நகைச்சுவை நடிகனா என்னை நீங்க பார்க்கலாம்.'' 
 

- வே. கிருஷ்ணவேணி