Published:Updated:

“ ‘வித் லவ்’னு சொன்னேன்... ‘ஐ லவ் யூ’னுட்டான்!” - ‘வாணி ராணி’ ஸ்ருதி

“ ‘வித் லவ்’னு சொன்னேன்... ‘ஐ லவ் யூ’னுட்டான்!” - ‘வாணி ராணி’ ஸ்ருதி
“ ‘வித் லவ்’னு சொன்னேன்... ‘ஐ லவ் யூ’னுட்டான்!” - ‘வாணி ராணி’ ஸ்ருதி

கோயம்புத்தூரில் பி.காம், எம்.சி.ஏ, எம்.ஐ.பி என படித்துக் கொண்டே, ‘நாதஸ்வரம்’, ‘பொன்னூஞ்சல்’, ‘வாணி ராணி’ என நடித்துக்கொண்டும் இருக்கிறார் ஸ்ருதி சண்முகப்பிரியா. சின்னத்திரையில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தவர், தனுஷ், த்ரிஷா, அனுபமா நடித்த ‘கொடி’ படத்தில் அனுபமாவுக்கு அக்காவாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பரபர ஷூட்டிங் இடைவெளிகளில் இருந்தவரிடம் பேசினோம். 

“சினிமாக்குள்ள என்ட்ரி ஆகிட்டீங்க, எப்போ ஹீரோயினா நடிக்கப் போறீங்க..?”

“எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்கிறதுதான் பிடிக்கும். அந்த மாதிரியான கேரக்டர்கள் சீரியலில்தான் அதிகம் வருது. அதுக்காக சினிமாவுல நடிக்க மாட்டேன்னு சொல்ல முடியாது. நான் நினைக்கிற மாதிரி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன். ஸ்டைலிஷ்ஷா நடிக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, அதையும் தாண்டிப் போயிடக்கூடாதுனு நினைக்கிறேன்.” 

“அடுத்து எந்த படத்துல நடிக்கிறீங்க..?”

“ ‘முண்டாசுப்பட்டி-2’ படத்துல நடிக்கிறதுக்காக பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. சீக்கிரம் அதுக்கான அறிவிப்பு வரும்.” 

“ ‘கொடி’ படத்துல அனுபமாவுக்கு அக்காவாக நடிச்ச அனுபவம்..?’’

“நான் நடிச்ச முதல் படங்கிறதுனால வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. நிறைய கத்துக்கிட்டேன். இன்னும் நிறைய பேருக்கு என் முகம் தெரிஞ்சது. அதிகமான காட்சிகள் தனுஷோட நடிக்கிற மாதிரி இருந்துச்சு. ஆனால், நாங்க எதுவும் பேசிக்கலை. ஹாய், பாய் அவ்வளவு தான்.” 

“எந்த மாதிரியான ரோல்ல நடிக்கணும் ஆசை..?’’

“எனக்கு நெகட்டிவ் ரோல் நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நான் இதுவரை நடிச்ச சீரியலில் எல்லாம் என்னை ரொம்ப நல்ல பொண்ணாகவே காட்டியிருக்காங்க. நானும் எவ்வளவு நாள் தான் நல்ல பொண்ணாகவே நடிக்கிறது. எனக்கு அது போர் அடிச்சிருச்சு. அதுனால ஒரு நல்ல நெகட்டிவ் ரோலுக்காக காத்திருக்கேன். அப்புறம் விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிக்கணும்.”

“சமீபத்தில் பார்த்த படங்களில் பிடித்த படம்..?’’

‘கொடி’ எனக்கு ரொம்ப பிடிச்சப்படம். நான் நடிச்சிருக்கதால சொல்லல. ஒரு பொண்ணை ரொம்ப போல்டான கேரக்டரா காட்டியிருப்பாங்க. அதுனால எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் நான் டைரக்டர் கௌதமோட ஃபேன். ‘அச்சம் என்பது மடமையடா’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு அப்புறம் ரொம்ப ரசிச்சு பார்த்தப்படம், ‘அச்சம் என்பது மடமையடா’.”

“சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடத்த ஜாலி கலாட்டா..?’’

“ ‘நாதஸ்வரம்’ நாடகத்தில் நடிக்கும்போது தினமும் ஜாலியாகத் தான் இருக்கும். அடுத்த சீன்ல நாங்க எல்லாரும் அழற மாதிரியான காட்சியா இருக்கும். ஆனால், நாங்க அதுக்கு முன்னாடி வர சிரிச்சிட்டு இருப்போம். அப்படியே அந்த சீனுக்கு நடிக்கப்போய், சிரிச்சு சொதப்புன அனுபவம்லாம் இருக்கு. இப்போ ‘வாணி-ராணி’ ஸ்பாட்ல பப்லு சார் தான் செம ஜாலியான ஆள். எங்கக்கூட நடிக்கிற ஆட்கள் எப்படி நடிக்கிறாங்கனு அவங்கள மாதிரி பண்ணிக்காட்டுவார். செம ஜாலியா இருக்கும்.”

“ ‘பிரேமம்’ அனுபமா கூட ’கொடி’ல நடிச்சிருக்கீங்க. அவங்க பத்தி ஒரு ரகசியம் சொல்லுங்க..?’’

“அது எனக்கே தெரியாது பாஸ். ம்ம்ம்ம்....(யோசிக்கிறார்) அவங்க ரொம்ப சிம்பிளான பொண்ணு. ‘பிரேமம்’ படத்துல ஒரு முக்கியமான ரோல், தெலுங்குல செம பிஸினு பெரிய விஷயங்கள் பண்ணினாலும் செம சிம்பிளா இருப்பாங்க. ஸ்பாட்ல யாராவது வந்து செல்ஃபி எடுக்கணும்னு சொன்னாலும் அவங்களோட செல்ஃபி எடுப்பார்! 

“சீரியல்ல நடிக்கிறதுல ஒரு நல்லது, ஒரு சங்கடம்..?’’

“நல்லதுன்னா, ரீச் தான். நம்மை எல்லாருக்கும் தெரியும். சீரியல்ல நடிச்சா அந்த அளவுக்கு ரீச்சாகிடலாம். சங்கடம்னா, நம்மை சீரியல் ஆர்ட்டிஸ்ட்னு ஓரம் கட்டிடுவாங்க. சினிமா வாய்ப்புகள் வராது. சீரியலில் நடிக்கிறதை விட்டால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும்!” 

“ஜோடி நம்பர்-1'ல் யார் கூட ஜோடியா ஆட ஆசை..?’’

“பப்லு சாரோட தான்.”

“உங்களுக்கு என்னலாம் சமைக்கத் தெரியும்..?’’

“சுடு தண்ணி, பாயில் எக், சாம்பார், மட்டன் உப்புக்கறி.”

“உங்களால் மறக்கமுடியாத ஒரு புரபொசல்..?’’

“2011-ல, என் காலேஜ்ல படிக்கிற பையன் லவ்வர்ஸ் டேக்கு ஒரு மாசத்துக்கு முன்னால என்கிட்ட வந்து, ‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. நான் உங்களோட பெரிய ஃபேன். எனக்கு ஒரு ஆட்டோகிராப் போட்டு கொடுங்க’னு கேட்டான். நான் இன்னும் அந்த அளவுக்கு பெரிய ஆள் ஆகலைனு சொன்னதுக்கு, ‘நீங்க பெரிய ஆள் ஆகிட்டா அப்பறம் பார்க்க முடியாது, இப்போ ஆட்டோகிராப் போட்டுக்கொடுங்க’னு சொன்னான். நானும் ’with love forever'-னு எழுதி என்னோட ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன். நான் ’வித் லவ்’னு போட்டுக் கொடுத்தால அடுத்த நாளே என்கிட்ட வந்து ’ஐ லவ் யூங்க’னு சொல்லிட்டான். அதுக்கப்பறம் பெரிய பிரச்னை ஆகி, அப்பறம் என் பக்கமே அவன் வரதில்லை!”

“எப்போ கல்யாணம்..?’’

“நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதெல்லாம் பண்ணிட்டுதான் கல்யாணம்!”

இப்போலாம் கல்யாணமே ஒரு சாதனைதான் ஸ்ருதி!

மா.பாண்டியராஜன்

படங்கள்: பா.காளிமுத்து

பின் செல்ல