Published:Updated:

அம்மாவைப் பிரிந்த மகளுக்கு யார் ஆறுதல்? #Neeli

Vikatan Correspondent
அம்மாவைப் பிரிந்த மகளுக்கு யார் ஆறுதல்? #Neeli
அம்மாவைப் பிரிந்த மகளுக்கு யார் ஆறுதல்? #Neeli

விஜய் டி.வி யில் வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது 'நீலி' சிரியல்.

நீலி என்னும் ஒரு பொம்மையை மையமாக வைத்து தயாராகியிருக்கிறது இந்த சீரியல். தாய் இல்லாமல் வளரும் குழந்தை தனது சித்தியிடம் மாட்டித் தவிக்கும் போது, இறந்து போன அம்மாவே மகளுக்கு உதவி செய்வதாக கதை நகருகிறது.  தாய்க்கு நிகராகப் பாசம்காட்டி வளர்க்கும் தந்தை சூர்யா. குடும்பத்தின் வற்புறுத்தலில் காரணமாக மறுமணம் செய்து கொள்கிறார்.  இரண்டாவது திருமணம் ஆன, அதாவது அபியின் சித்திக்கு கணவர் மீதான அன்பின் காரணமாகவும், சொத்தின் மீதுள்ள ஆசையின் காரணமாகவும் எப்படியாவது அபியை அழிக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அபிக்கு ஆதரவாக, ஆறுதலாக இருக்கிறார் இறந்து போன அபியின் அம்மா. சித்தியின் கொடுமையில் சிக்கும் அபியை காப்பாற்ற அபி ஆசையாக வைத்திருக்கும் பொம்மைக்குள் ஆவியாகப் புகுந்து உதவி செய்து செய்கிறார். அபியுடைய அம்மாவின் ஆவி புகுந்துள்ள பொம்மையின் பெயர் தான் நீலி. அம்மா, மகள் இருவருக்குமான ஆழமான உறவைச் சொல்லும் கதை. இந்த சீரியலில் நடித்திருக்கும் சவி ஷர்மாவிடம் பேசினோம்,

மழலை மாறமல் குறும்புத்தனம் செய்து கொண்டே இருக்கிறார். அவரது அம்மாவிடம் பேசினோம், 

''சவியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?''

''சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், ராம்ராஜ் தோத்தி, சரவணா ஸ்டோர்ஸ், ஹரிஹந்த் டெக்ஸ்டைல்ஸ், லையன் டேட்ஸ், போத்தீஸ் ஹைப்பர், அரோமா மில்க் என 60 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். விஜய் நடித்த 'புலி' படத்தில் ஸ்ருதிஹாசன் சிறு வயது பெண்ணா நடித்திருப்பார். 'ஆறாது சினம்' படத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா மகளாக நடித்திருப்பார். 'தில்லு துட்டு' படத்தில் சேட்டு குடும்பத்தில் ஒருவராக நடித்திருப்பார். சகா, பவர்பாண்டி என தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்''. 

''சென்னை தான் சொந்த ஊரா?''

''இல்லை, ராஜஸ்தான் எங்க சொந்த ஊர். ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். அதனால நல்லாத் தமிழ் பேசுவேன். அவங்களையும் பேசச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்''. 

''இப்போ  எந்த வகுப்பு படிக்கிறார்?''

''திருவல்லிக்கேணியில் உள்ள S J N S jain jadha bai பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்''. 

''சவி வீட்டிலும், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் எப்படி?''

''வீட்ல குறும்பு அதிகமாப் பண்ணுவாங்க. சவி தம்பி சாயம் உடன் குறும்புப் பண்ணிட்டே இருப்பாங்க. என்னோட மாமனார், மாமியாருக்கு இரண்டு பேரும் பசங்கதான் என்பதால் பெண் குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால சவி என்ன குறும்பு பண்ணாலும் திட்டமாட்டாங்க. அதிக செல்லம் கொடுப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல சொன்ன ரியாக்‌ஷனை சரியா செய்வாங்க. வீட்ல அவங்களுக்காக தனியா ஒரு கேமராவே வாங்கி வச்சிருக்கோம். வீட்ல தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போஸ் கொடுக்க சொல்லி நானும் என் கணவர் தருணும் சொல்லிக் கொடுப்போம். அவர் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கிறார். அவருக்கு நேரம் கிடைக்கும் போதும் சொல்லிக் கொடுப்பார்''. 

''எப்படி ஆக்‌டிங் பக்கம் சவிக்கு ஈர்ப்பு வந்தது?''

''ஒரு வயசு இருக்கும், அப்போவே டி.வி யில பாட்டு, டான்ஸ் எல்லாம் பார்த்துட்டு ஆடிட்டே இருப்பாங்க. டான்ஸ்ல ஆர்வம் இருக்கிறதா புரிஞ்சுக்கிட்டோம். இப்போ டான்ஸ் கிளாஸூக்கும் அனுப்பிட்டு இருக்கோம். பரதநாட்டியம் நல்லா ஆடுவாங்க. நடிப்பு நல்லா வந்தது. அதனால், சினிமா, விளம்பரம் என களம் இறக்கிவிட்டோம். இரண்டு வருஷத்துக்கு முன்னடிதான் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். விளம்பரங்களில் ஐந்து வயதாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போ முதன் முதல்ல ஒரு சீரியலிலும் களம் இறங்கியிருக்காங்க சவி''.

''சவிக்குப் பிடித்த விஷயம்?''

''எல்லாக் குழந்தைகள் மாதிரி டெடி பியர் பிடிக்கும். டைரிமில்க் சாக்லெட் ரொம்ப பிடிக்கும். கிரீமியா இருக்கிற சாக்லெட்ஸ்னா விருப்பம். பன்சிட்டி கூட்டிட்டுப் போயிருந்தேன். இப்போ அடிக்கடி போகணும்னு ஆசைப்படுறாங்க. அவுட்டோர் விளையாட்டு ரொம்ப பிடிக்கும். அதுவும் பிரண்ட்ஸோட விளையாட விட்டா நாள் முழுக்க விளையாடுவாங்க''. 

''பேய் கதையை மையமாக எடுக்கப்படும் சீரியலில் நடிக்கும் சவிக்குப் பேய் பயம்?''

''ஐய்யய்யோ... அவங்கதான் எல்லாரையும் பேய் மாதிரி பயமுறுத்துவாங்க. இந்த வயசுலயே அவ்வளவு தைரியம். எங்கப் பொண்ணோட தைரியம் ரொம்ப பிடிக்கும். இந்த சீரியல் நிச்சயமா எல்லாருக்கும் பிடிக்கும். வித்தியாசமான கதைக்களம் இருக்கிறதால எல்லோருமே விரும்பிப் பார்க்கும் சீரியலாக இருக்கும். சவி கண்டிப்பா பெரிய அளவு சாதிப்பாங்க என்கிற நம்பிக்கை இருக்கு''.

- வே.கிருஷ்ணவேணி