Published:Updated:

“என்னை ஏன் கருப்பா 'பெத்த'னு அம்மாகிட்ட அழுதிருக்கேன்!” - ‘டார்லிங் டார்லிங்’ மைனா

“என்னை ஏன் கருப்பா 'பெத்த'னு அம்மாகிட்ட அழுதிருக்கேன்!” - ‘டார்லிங் டார்லிங்’ மைனா
“என்னை ஏன் கருப்பா 'பெத்த'னு அம்மாகிட்ட அழுதிருக்கேன்!” - ‘டார்லிங் டார்லிங்’ மைனா

“என்னை ஏன் கருப்பா 'பெத்த'னு அம்மாகிட்ட அழுதிருக்கேன்!” - ‘டார்லிங் டார்லிங்’ மைனா


விஜய் டி.வி சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக தமிழக மக்கள் பலரின் வீடுகளிலும் குடும்பத்தில் ஒருத்தியாக மாறினார் நந்தினி என்கிற மைனா. துறுதுறு பேச்சு, ஆக்டிவ் என தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல், டான்ஸ் ஷோ என கலக்கி கொண்டிருக்கிறார். இங்கு வருவதற்கு முன்பாக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை அவரே சொல்கிறார், 
 

''மைனா.. சாரி நந்தினி எப்படி இருக்கீங்க?''

''பாத்தீங்களா நீங்களே மைனானு கூப்பிட ஆரம்பிச்சுட்டீங்க. இதுதான் என் சாதனை. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட கிராப் ஏறிக்கிட்டே இருக்கு. விஜய் டி.வி 'சரவணன் மீனாட்சி' சீரியலில் முதன் முதலில் அறிமுகம் ஆனேன். முதல் அறிமுகமே பல ரசிகர்களை உருவாக்கியிருக்கு.''

''டான்ஸ் போட்டிகளில் எப்படி திடீரென?''

''எனக்கு அந்த அளவுக்கு டான்ஸ் வராது. ஏதோ கொஞ்சம் ஃபோம் மட்டும் தெரியும். பார்ட்னர் யோகேஷ் தான் காரணம். இப்போ நான் ஆடுற டான்ஸ்க்கு எல்லாம் அவர்தான்  காரணம் என நினைக்கிறேன். கோரியோகிராஃபர். நந்தா ஜிக்கிட்ட கத்துக்கிட்டப் பிறகுதான் ஆட ஆரம்பிச்சிருக்கேன். எனக்குத் தெரிஞ்சு இன்னும் முழுமையா டான்ஸ் கத்துக்கல. வீட்ல எந்த கட்டுப்பாடும் கிடையாது. டான்ஸ் ஜோடி டான்ஸ்' ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், ஆரம்பத்தில் என்னோட அப்பா என்கிட்ட அடிக்கடி குறை சொல்லுவார், 'அவசரப்பட்டு ஓடாத, எக்ஸ்பிரஷன் சரியா இருக்கணும், பொறுமையா ஆடு இப்படி பல கரெக்‌ஷன் சொல்லுவார். ஒவ்வொன்றையும் திருத்திக் கொண்டு ஆட ஆரம்பிச்சிருக்கேன். சமீபத்தில் பிரதிக்‌ஷாவோடு பண்ண ஒரு பர்பாமன்ஸுக்கு பல பேரிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. 'சரவணன் மீனாட்சி' சீரியலுக்கு கூப்பிட்டதே 'வம்சம்' 'கேடி பில்லா கில்லாடி ரங்கா ' படங்களைப் பார்த்துதான். அதற்குப் பிறகு என்னோடப் பேரை மறந்து எல்லோருக்கும் ‘மைனா’வாகிட்டேன், இதுக்கு முக்கியக் காரணம் நான் மதுரைக்காரி, மதுரை பாஷை இரண்டும்தான். அடுத்தப்படியா இப்போ ஜீ தமிழில் நடித்துவரும் 'டார்லிங் டார்லிங்' சீரியலில் ருக்மணி கதாபாத்திரம். கோவைத் தமிழைக் கத்துக்கிட்டு இப்போ ஓரளவு நல்லாப் பேச ஆரம்பிச்சிட்டேன்''. 

''இரண்டுக்குமான பேச்சு வழக்கில் எப்படி வித்தியாசம் காண்பிக்கிறீங்க?''

''மதுரைக்காரங்க பேசும்போதே கோபமா பேசுற மாதிரி இருக்கும். கோயம்புத்தூர் ஆட்கள் கோபமா பேசும்போது 'ஏனுங் கோபப்படுறீங்கோ'னு சொல்லுவாங்க. இரண்டு வழக்கிலுமே நல்ல வித்தியாசம் தெரியும்''.

''வீட்டில் எதுவும் கட்டுப்பாடு இருக்கா?''

''எல்லார் வீட்லயும் இருக்கிற சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் இருக்கத்தான் செய்யும். சுத்தமா இல்லவே இல்லனு நான் மறைக்க விரும்பல. பொதுவெளியில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது போன்ற பிரச்னைகள் இருக்கும். ஆனால், எந்த இடத்திலும் என் கணவர் கார்த்திக் விட்டுக் கொடுக்கமாட்டார். எப்பவும் உறுதுணையாகத் தான் இருக்கார். வெளியிலப்போனாக் கூட, மத்தவங்க என்னைப் பார்ப்பது, பேச வருவதை எல்லாத்தையும் இவர்தான் முதல்ல கூப்பிட்டுச் சொல்லுவார்''.

''கருப்பு நிறம் உள்ள நடிகைகளை தற்போது பெரும்பாலும் தவிர்க்கும்போது உங்களுக்கு எப்படி வாய்ப்புகள் கிடைத்தது?''

''இதைச் சொல்லியே ஆகணும். நான் வாய்ப்புக்காக ஏங்கியிருக்கேன். எங்கப் போய் நின்னாலும் ரிஜக்ட் ஆகிடுவேன். அதுக்கு ஒரே காரணம் என்னுடைய கலர்தான். ஹீரோயினுக்கு தோழியாக நடிக்க கூப்பிடுவாங்க. போய் நின்னா, யார் சிகப்பா இருக்காங்களோ அவங்களை முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவாங்க. என்னைக் கடைசி வரிசையில் கூட நிற்க விடல. இப்படி ஒவ்வொரு முறை அவமானப்படுத்தப்பட்டு வீட்டுக்குத் திரும்பி வருவேன். வந்தவுடன் அம்மா எங்கேனு தேடி, ஓடி அவங்க மடியில் விழுந்து அழுவேன். 'என்னை ஏம்மா இப்படி கருப்பா பெத்தே. தம்பி வயித்துல இருக்கும்போது மட்டும் குங்குமப்பூ சாப்பிட்டு அவனை மட்டும் சிகப்பா பெத்துட்ட'. இப்படி தேம்பித் தேம்பி அழுவேன். அம்மா ஒரே விஷயம் தான் சொல்லுவாங்க... 'நிறத்தால் கிடைக்கும் வெற்றியை விட, தன்னம்பிக்கையால் கிடைக்கும் வெற்றிதான் நிரந்தரம்'. கவலைப் படாதே நீ பெரிய இடத்துக்கு கண்டிப்பா வருவ' என தலையைக் கோதி எனக்கு ஆறுதல் சொல்லுவாங்க. இதோ இப்போ அம்மாவோட வார்த்தைகள் பலிச்சிடுச்சு.''

''பிறகு எப்படி வாய்ப்புகள் கிடைச்சது?'' 

''சின்ன வயசுல இருந்து நடிகர், நடிகைகள் எல்லாருமே வெள்ளையா இருப்பாங்க, இங்கிலீஷ்லதான் பேசுவாங்க, பணக்காரங்களாக இருப்பாங்க. இப்படி நானே கற்பனைப் பண்ணி வச்சிருந்தேன். அது ஒவ்வொரு இடத்திலும் உடைய ஆரம்பித்தது. எல்லோருமே நம்மை மாதிரி சாதாரணமாக இருந்து உயர்ந்தவங்கதான். 'வம்சம்' படத்தில் பக்கா வில்லேஜ் கேர்ளா நடிச்சிருந்தேன். அதுக்குப் பிறகு 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. அதற்குப் பிறகு கிடைச்ச வாய்ப்புதான் விஜய் டி.வி 'சரவணன் மீனாட்சி'. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடிக்கும்போது ஒயிட் மேக்கப்பை குறைச்சுட்டு, சாதாரண வில்லேஜ் கேர்ளாக வந்தாலே போதும் என சொன்னார் டைரக்டர். அதுதான் பின்னாளில் என்னை பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தது. சினிமா, சீரியல்களில் பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல் எல்லாத்தையும் நான் சின்ன வயதில் மாற்ற வேண்டும் என நினைத்தது போல அவங்கள மாதிரியே மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். வெள்ளையா இருக்கவன் பொய் பேச மாட்டான் என்பதை மாத்தி கருப்பா இருக்கவணும் பொய் பேச மாட்டான் என்கிற நிலை வர வேண்டும்.'' என்கிறார் நந்தினி.

''வாய்ப்புகள் வந்தப் பிறகு?''

''6, 7 வருடம் முன்னாடி 400 ரூபாய் சம்பளம்.  கூட்டத்துக்குள்ள ஒரு பொண்ணாதான் நடிச்சுட்டு இருந்தேன். இப்போ படங்களிலும் வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா, சினிமாவில் நடிக்கும்போது நமக்கு ஏற்ற மாதிரி மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் பண்ணிக்க முடியாது. ஆனால், டி.வி சீரியலில் அந்தப் பிரச்னை இருக்காது. இன்னும் முக்கியமான விஷயம் டி.வி யில் இருக்கவங்க அடிக்கடி தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்கணும். இல்லனா மக்கள் மறந்துடுவாங்க. நான் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்ததைவிட, அதற்குப் பிறகு வந்த சீரியல்களில் பிரைட்டா, கலரா வர ஆரம்பிச்சுட்டேன். அதை வச்சு நிறைய மீம்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. Before job, After job ' என என் படத்தை வைத்து மீம்ஸ் பண்ணினாங்க. எனக்கு பிடிச்சிருந்தது.''

''அப்போ நீங்க கலராக மாறின ரகசியம்?''

''இயற்கையாக இருக்கும் கலரை செயற்கையாக மாற்றும்போது நிறையப் பிரச்னைகள் வரும். நான் அப்படி எதும் பண்ணல. என்னோட சருமத்தை சரியா பராமரிக்க ஆரம்பிச்சேன். அப்படி செய்தாலே நம் முகம் அழகாக மாறிடும். கலராகத்தான் மாறணும் என முயற்சிகள் மேற்கொள்ளத் தேவையில்லை. கருப்பா இருந்தாலும் கலையாக இருந்தாலே அழகுதான்.

- வே. கிருஷ்ணவேணி 

அடுத்த கட்டுரைக்கு