Published:Updated:

வில்லி நடிகைகள் வீட்டில் எப்படி?

வில்லி நடிகைகள் வீட்டில் எப்படி?
வில்லி நடிகைகள் வீட்டில் எப்படி?

சீரியலில் ஹீரோயினாக நடிப்பவர்களை விட வில்லிகளுக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் இன்றைய சீரியல்களில். ஹீரோயின்களை விட வில்லிகளுக்கு மவுசு அதிகம் எப்படியும் ஒரு சீரியலிலாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சினிமாவில் எப்படி ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்கிறார்களோ அதேபோல சீரியல்களில் வில்லியும், ஹீரோயினும் சவால் விட்டு கொண்டு சண்டை போடுவார்கள். சில சீரியல்களில் வில்லிகள் உறவாடிக் கெடுப்பார்கள். இப்படி தமிழ் சீரியல்களில் வில்லிகளாக மிரட்டிக் கொண்டிருக்கும் சில சூப்பர் வில்லிகள் வீட்டில் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

நீலிமா ராணி: ''வாணி ராணி'' 

வாணி சீரியலில் டிம்பிள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ''வாணி ராணி சீரியலில் தான் முதன் முதலில் வில்லியாக நடிச்சிருக்கேன். எனக்கு இது புது அனுபவம். இந்த சீரியலில் ராதிகா மேடமுக்கு வில்லியாக நடிக்கும்போது மனசு கஷ்டமாத் தான் இருக்கும். அவங்க எவ்வளவு பெரிய லெஜண்ட். அவங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பேன். ஆனா, அவங்க அதை ரசிச்சுப் பார்த்துட்டு இருப்பாங்க. இதைப் பெரிய பொக்கிஷமா நினைக்கிறேன்.  பொதுவாக நான் ரொம்ப பிரண்ட்லி. எந்த உதவியாக இருந்தாலும் முதல் ஆளாப் போயி நிற்பேன். சின்ன வயசுல இருந்தே இந்தப் பழக்கம் உண்டு. நீ, வா, போ என்கிற வார்த்தையையே பெரும்பாலும் பயன்படுத்தினது கிடையாது. சீரியலுக்காத்தான் பேச வேண்டியிருக்கு. என்னுடைய நண்பர்கள் வட்டாரம் அதிகமாக சொல்வது என்னுடைய ஸ்மைலைத்தான். எவ்வளவுப் பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி அதை சிரிப்பை வச்சே சமாளிச்சிடுவேன். அதுக்காகக் கோபமே படமாட்டேன் என சொல்ல வரல. ஒவ்வொரு சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடும்''. 

ரேகா குமார்: ''தெய்வமகள்''

காய்த்ரி என்கிற கதாபாத்திரத்தில் அசத்திக் கொண்டிருப்பவர். அண்ணியாரே தான் இவருடைய டிரேட் மார்க். 

''நான் ரொம்ப எமோஷனலான டைப், அப்பா என்கிற வார்த்தையைக் கேட்டாலோ, சொன்னாலோ உடனே அழுதுடுவேன். அப்பா காலமாயிட்ட பிறகு எப்போ நினைச்சாலும் அழுகை வந்திடும். அடுத்து என் மகள் பற்றி யாராவது பாராட்டிப் பேசினா ஆனந்தத்துல கண்ணீர் வரும். இப்படி சில விஷயங்களில் நான் ரொம்ப சென்சிட்டிவ். நீங்க சீரியலில்  பார்ப்பதற்கும், உண்மையான கேரக்டருக்கும் முழுக்க வித்தியாசம் இருக்கும். சீரியலில் சத்தமாக, கோபமாகப் பேசுவதுபோல நேர்ல பேசவே மாட்டேன். சாஃப்ட்டாதான் பேசுவேன். செம்ம ஜாலி டைப். மார்டன் டிரெஸ்ஸிங் தான் என்னோட ஃபேவரெட்.  கேமராவுக்கு முன்னாடி கத்திக் கத்திப் பேசுவதால பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட்ல யூ டியூப்ல எனக்குப் பிடிச்ச பாடல்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.  ஸ்பாட்லயும் ரொம்ப கம்மியாகத்தான் பேசுவேன். இந்த அண்ணியார் கேரக்டருக்கு கிடைத்த ரீச் இதுவரை என்னோட லைஃப்ல கிடைச்சதே இல்ல. 

நளினி: ''டார்லிங் டார்லிங்''

டாப் ஹீரோயின் அந்தஸ்தில் இருந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நளினி. 'சின்னபாப்பா, பெரியபாப்பா' தெலுங்கு சீரியல் என பல சீரியல்களில் பயமுறுத்தும் மாமியாராக அசத்தியிருக்கிறார்.

'நான் ரொம்ப சாதாரணமாகத்தான் இருப்பேன். சீரியலுக்காக அப்படி மாற வேண்டியிருந்தது. வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்துவதற்காக அப்படியே இருப்பேன். கொஞ்ச நாளில் என் பிள்ளைகள் 'அம்மா நீங்க இப்படி இருக்கிறதே எனக்குப் பிடிக்கல. தயவு செய்து இனிமே இந்த மாதிரி நெகட்டிவ் ரோல்ல நடிக்காதீங்க'னு கேட்டுக்கிட்டாங்க. பசங்க சொல்லைத் தட்ட முடியல. அதுக்குப் பிறகுதான் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் குதிக்க ஆரம்பிச்சேன். இப்போ அது டிரென்டாகியிருக்கு. நான் செம்ம ஜாலியான ஆள். ப்ரண்ட்லியான ஆளும் கூட.  

சான்ட்ரா: ''தலையணைப் பூக்கள்''

தலையணைப் பூக்களில் வேதவல்லிக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வீட்டின் இரண்டு மருமகளில் இவருக்கு வில்லி கதாபாத்திரம். தலையணைப் பூக்களில் கல்பனா என்னும் வில்லிக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சான்ட்ரா. சீரியலில் வில்லியாக இருந்தாலும், வீட்டில் பக்கா ஹவுஸ் ஒய்ஃப். வீட்டுக்குப் போயிட்டா, அதில் முழுகிடுவேன். துணி துவைக்கிறது, வீட்டக் கிளீன் பண்றது, சமைக்கிறது என எல்லா வேலையும் நான் தான் செய்வேன். சீரியலில் அணியற மாதிரி ஹெவியான ஜூவல்லரி, டிரெஸ்ஸூக்கெல்லாம் நோ சொல்லிடுவேன். ரொம்ப சாதாரணமாக இருக்கப் பிடிக்கும். தலையணைப் பூக்களில் தான் முதன் முதலில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறேன். பொதுவாக வெளிப்படையாகப் பேசிடுவேன். அதே போல உண்மையான காரணங்களுக்காக சண்டைப் போடுவேன். அது மாதிரியான ஆட்கள்கிட்டயும் பழக்கம் வச்சுக்க மாட்டேன். என்னைப் பார்க்கும்போது ஆட்டிடியூட் காண்பிக்கிறப் பொண்ணு மாதிரித் தெரியும். ஆனா, உண்மையில் நான் அந்த மாதிரிக் கிடையாது. அமைதியான சுபாவம். சீக்கிரம் யாரையும் நம்பி பிரண்டாக மாட்டேன். பழகினப் பிறகுதான் நன்றாகப் பேசவே ஆரம்பிப்பேன். 

- வே. கிருஷ்ணவேணி