Published:Updated:

‘‘என்னை பேசாம மட்டும் இருக்கச் சொல்லிடாதீங்க ப்ளீஸ்’’ - ஜாலி கேலி ஜாக்குலின்!

Vikatan Correspondent
‘‘என்னை பேசாம மட்டும் இருக்கச் சொல்லிடாதீங்க ப்ளீஸ்’’ - ஜாலி கேலி ஜாக்குலின்!
‘‘என்னை பேசாம மட்டும் இருக்கச் சொல்லிடாதீங்க ப்ளீஸ்’’ - ஜாலி கேலி ஜாக்குலின்!

விஜய் டி.வியின் சீனியர் வாயாடி டிடி என்றால் ஜூனியர் வாயாடி ஜாக்குலின். 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் கலக்கல் காம்பியர். ”ஜாக்குலினா இவர்?!” என அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம் பியூட்டியாகி இருக்கிறார்.

நடிகையாகப் போறீங்களாமே...? அதுக்குத்தானா இதெல்லாம் என்றால் ஹைடெசிபலில் சிரிக்கிறார்.

''என்ன நடந்ததுனு சொல்லிடறேன்... 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில யாராவது ஒருத்தர் வரலைனா, அவங்களை வச்சு ஏதாவது பேசிடுவோம். அந்த மாதிரி அன்னிக்கு நான் எக்சாம் எழுதப் போயிருந்தேன். அதைச் சொல்லியிருந்தா நல்லாருக்காதுல்ல... அதனால வாய்க்கு வந்தபடி எதையோ கிளப்பிவிட்டுட்டாங்க... அதுதான் உண்மை...'' என்கிறவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் இரண்டாவது வருடம் படிக்கிறார்.

''ஆனாலும் எனக்கு நடிகையாகணும்ங்கிறதுதான் அல்டிமேட் ஆம்பிஷன். எனக்குப் பிடிச்ச ஒரு கதையும் கேரக்டரும் இதுவரைக்கும் வரலை. படம் முடிச்சிட்டு வரும்போது என் கேரக்டரை பத்தி மக்கள் பேசற மாதிரியான கேரக்டரா இருக்கணும்.. ஹீரோயினா பண்ணணும்ங்கிறதுதான் ஆசை. ஆனா அதுல கொஞ்சூண்டு காமெடியும் இருந்தா மகிழ்ச்சி... அப்படியொரு ஆஃபருக்காகத்தான் ஐம் வெயிட்டிங்...'' என கண்டிஷன்ஸ் சொல்பவர், 'பரதேசி' தன்ஷிகா, 'கபாலி' தன்ஷிகா போன்று பவர்ஃபுல் கேரக்டர் என்றால் ஹீரோயின் கண்டிஷனை தளர்த்திக் கொள்ளவும் தயாராம்.

ஹீரோயின் ஆசைக்கும் தனது வெயிட் லாஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் ஜாக்குலின்.

''வரும்போது நான் கொஞ்சம் குண்டாதான் இருந்தேன். பொதுவாகவே ஸ்கிரீன்ல பார்க்கிறபோது வழக்கத்தைவிட யாருமே இன்னும் கொஞ்சம் குண்டா தெரிவாங்க. நான் ஓவர் குண்டாகவே தெரிஞ்சேன்.  ஆனா அதுக்காக நான் எந்த முயற்சியும் எடுக்கலை.  காலேஜ், சேனல்னு எக்கச்சக்க வேலை... ஓடிக்கிட்டே இருக்கேன்.. இது தானா குறைஞ்சதுதான். அதைத் தக்க வச்சுக்க இனிமேதான் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்... தயவுசெய்து நம்புங்க...'' என சாதிக்கிறார்.

ஜாக்குலினுக்கு மன்றமே வைக்கிற அளவுக்கு ரசிகர் பட்டாளம் உண்டு.  ஆனாலும் ஒருவரிடம் இருந்தும் தனக்கு பிரபோசல் வரவில்லை என்பதில் அவருக்கு அநியாய வருத்தம்.

''இதுவரைக்கும் ஒருத்தரும் பிரபோஸ் பண்ணலை. என்ன காரணம்னு தெரியலை. நான் என்ன அவ்வளவு டெரராவா இருக்கேன்...'' கைப்புள்ளை கணக்காகக் கவலைப்படுகிறார்.

ஜாக்குலினின் ஸ்பெஷலே அடுத்தவரின் கலாய்களுக்கு அமைதியாகச் சிரிக்கிற அவரது குணம்தான். நிஜத்திலும் அப்படித்தானா?

''டி.வியைப் பொறுத்தவரை என்னைவிட எல்லாரும் எனக்கு சீனியர்ஸ். ஒருத்தர் நம்மைக் கலாய்ச்சாங்கன்னா திரும்பக் கலாய்க்கிறதுதான் இயல்பு. ஆனா என் விஷயத்துல நான் ஜூனியர். அவங்க பண்றதெல்லாம் காமெடினு தெரியும்.  அதெப்படி என்னைக் கலாய்க்கலாம்னு முறைச்சேன்னா அந்தச் சூழலே மாறிடும். மத்தபடி வெளியில ஃப்ரெண்ட்ஸை எல்லாம் செமயா கலாய்ப்பேன். காலேஜ்ல நான் ரொம்ப சமத்துங்க. ஆனாலும் சும்மா நடந்து போனாலே 'பொண்ணு சீன் போடுது பாரு'னு சொல்வாங்க.   டி.வி ஷோவுல கவுன்ட்டர் கொடுக்கலைங்கிறதால யார் வேணா என்னைக் கலாய்க்கலாம்... வாங்கனு கூப்பிடுவேன்னு நினைச்சா பிச்சிடுவேன்... பிச்சு...'' விடிவி கணேஷ் குரலில் மிரட்டுகிறார்.

''என் குரல்தாங்க எனக்கு பிளஸ்சே... என் வாய்ஸை வச்சு என்னை ஓட்டறவங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கிறேன்... ஸ்வீட்டான வாய்ஸோட இருக்கிறதுக்கு எங்கப்பா உன்னிகிருஷ்ணனும் இல்லை... அம்மா சின்னக்குயில் சித்ராவும் இல்லை...'' பயங்கரமான பன்ச்!

வீட்டுக்குள்ளும் வாயாடி மங்கம்மா என்கிற பெருமை உண்டாம் ஜாக்குலினுக்கு. ரியலி?

''ஸ்கிரீன்ல நிறைய பேசறவங்க, மத்த நேரத்துல அப்படிப் பேச மாட்டாங்கனு சொல்வாங்க. சிவகார்த்திகேயன், டிடினு அதுக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனா நான் விதிவிலக்கு. எப்போதும் அதிகமாத்தான் பேசுவேன். அதுதான் என் ஒரிஜினாலிட்டி. வீட்ல பவர்கட்டானா என்னைப் பேசவிட்டு என்ஜாய் பண்ணுவாங்க. வாழ்க்கையில எனக்கு மிகப் பெரிய சவால்னா பேசாம இருக்கிறதுதான். தயவுசெய்து எனக்கு அந்த தண்டனையைக் கொடுத்துடாதீங்க...'' 

அது ஆடியன்ஸ் தலையெழுத்து!

- ஆர். வைதேகி