Published:Updated:

'குண்டா இருந்தா குத்தமா?' அர்ச்சனா கேள்விக்குப் பதில் சொல்லுங்க ப்ளீஸ்!

'குண்டா இருந்தா குத்தமா?' அர்ச்சனா கேள்விக்குப் பதில் சொல்லுங்க ப்ளீஸ்!
'குண்டா இருந்தா குத்தமா?' அர்ச்சனா கேள்விக்குப் பதில் சொல்லுங்க ப்ளீஸ்!

சன் டி.வி காமெடி டைம் அர்ச்சனா என்கிற பெயரைத் தெரியாதவர்களே இருக்கவே முடியாது. அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே திருமணம் ஆனாலும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்தார் தொகுப்பாளினி அர்ச்சனா. பிரேக் எடுத்தது டெலிவரிக்கு சில நாட்களுக்கு முன்பு தான். குழந்தை பிறந்த பிறகு மறுபடியும் சின்னத்திரையில் தலைகாட்டும் அர்ச்சனாவைச் சந்தித்தேன். அட,  இளமை, திறமை, துணிச்சல் என அதே அர்ச்சனாதான்!

''காமெடி டைம் அர்ச்சனா என்பது மாறி 'அதிர்ஷ்ட லட்சுமி' அர்ச்சனாவாக மாறியது எப்படி?''

''நான் முதன் முதல்ல மீடியாவுக்கு வந்தது செய்தி வாசிப்பாளராகத்தான். ஜெயா டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக உள்ளே நுழைந்தேன். அந்தப் புகழை வைத்து தொகுப்பாளருக்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பல வருடங்கள் ஜெயா டிவியிலும், சன் டி.வியிலும் தொகுப்பாளரா இருந்தேன். அதுக்குப் பிறகு, குழந்தையைக் கவனிக்க வேண்டிய பொறுப்புகள்னால வேலையை விட்டேன். 
அப்போதான் 'ஜீ தமிழ்'ல்ல இருந்து 'அதிர்ஷ்ட லட்சுமி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற வாய்ப்பு வந்தது.  தொடர்ந்து 120 எபிசோடுகளுக்கு மேல வெற்றிகரமா நடத்திக் காட்டினேன். அப்பதான் அதே டிவியில மற்றொரு நிகழ்ச்சியான 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிக்கு நடுவராகவும் ஆனேன். 

இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்துப் பேசியபோது நம்பாமல் '' போங்க சார்.. பாக்யராஜ் சார், குஷ்பு மேடம் எல்லாம் உட்கார்ந்திருக்கும் போது அவங்ககூட நான் எப்படி?"னு தயங்கினேன். எல்லாரும் ஊக்கப்படுத்தவும், அதுல கலந்துகிட்டு அங்க வந்த குழந்தைகளுக்கு எல்லாம் செல்ல 'அச்சும்மா' ஆனேன். அந்த நிகழ்ச்சி முடிஞ்சு, இப்ப 'சரி கம பா லிட்டில் சாம்ப்ஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட்டு இருக்கேன்" என்கிறவரின் முகத்தில் அதே சிரிப்பு பிரவாகமெடுக்கிறது.

''சீரியல் பக்கம் ஏன் எட்டிப் பார்க்கலை?''

''டப்பிங்னாலே எனக்கு செம பயம். பொதுவாவே நான் வேகமா பேசுவேன். ஆனா சீரியல்ல சில நேரம் அழணும், சில நேரம் சிரிக்கணும், குரல்ல அந்த ஏத்த இறக்கத்தைக் கொடுக்க எனக்கு சுத்தமா வராது. அதனாலதான் அந்த வாய்ப்புகளை மறுத்துட்டேன்''.

''அர்ச்சனாவுடைய மறுபக்கம்?''

''நீங்க வெளியில பார்க்கிற மாதிரியான சிரிச்சு பேசுற அர்ச்சனா வீட்டுல அப்படியே எதிர்மாறா இருப்பா.  செம பர்ஃபெக்‌ஷனிஸ்ட், எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கலைனா செம்ம கோபம் வரும். வீடு சுத்தமா இல்லைனா வீட்டுல உள்ளவங்க கதி அதோ கதிதான். அந்த நேரத்துல வீட்டுக்கு யாராவது வந்துட்டா ஆட்டோமேடிக்கா திரையில பார்க்கிற அர்ச்சனாவா மாறிடுவேன்''.  

''உங்களைப் பேசாம இருக்கச் சொன்னா?

''நம்புவீங்களானு தெரியல. நான் சின்ன வயசுல இருந்து 9-வது படிக்கிற வரைக்கும் செம அமைதியா இருப்பேன்.  என்னைப் பேச வைக்க ஃப்ரெண்ட்ஸ் அவ்ளோ சிரமப்படுவாங்க. 11 வகுப்புல இருந்துதான் சகஜமாப் பேச ஆரம்பிச்சேன்''. 

''ராணுவம் என்கிற வார்த்தையைச் சொன்னாலே கண் கலங்கிடுறீங்களே ஏன்?''

''என் கணவர் ராணுவத்துல இருக்கிறதுதான் காரணம். உண்மையில் அவர்களுடைய அர்ப்பணிப்பும், தியாகமும் நிறைய பேருக்குத் தெரியுறதில்லைனு நினைக்கிறேன். அவங்களுக்கு என்ன அரசாங்க சம்பளம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை விடுமுறைனு பலரும் நினைக்கிறாங்க. தீவிரவாதிகள் தாக்குதலால ராணுவ வீரர்கள் இறக்கிறப்ப அந்த குடும்பத்தை நினைச்சு உடைஞ்சு போயிடுவேன். 
என்னோட கர்ப்பம் உறுதியானப்ப கூட அதை என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்ல முடியல. அவர் எல்லையில் இருந்தார். மூணு மாசம் கழிச்சு வந்துதான் என்னைப் பார்த்தார். இப்படித்தான் எத்தனையோ மனைவி, அம்மாக்கள், தாய்மார்கள் தங்களோட வாழ்க்கையில நடக்குற நல்ல விஷயங்களை, அல்லது மனசுக்கு கஷ்டமான விஷயத்தை பிரியமானவர்கிட்ட உடனே பகிர்ந்துக்க முடியாம தவிக்கிறாங்க. அது பெரும்கொடுமையான தவிப்புங்க''. 

''உடல் பருமனா இருக்கிறதுனால என்ன பிரச்னைனு நினைக்கிறீங்க?''

''ஒரு கம்பெனியில, மத்த வேலையில இருக்கிற பெண்கள் உடல் பருமனா இருந்தா தப்பில்லை. ஆனா மீடியாவுல இருக்கோம்ன்ற ஒரே காரணத்துக்காக நாங்க குண்டா இருந்தா தப்பா? என்ன நியாயம் இது? சீரியல்ல நடிச்சா கல்யாணம் ஆகக்கூடாது. இல்லை அந்த புராஜக்ட் முடியுறவரை கர்ப்பமாக கூடாதுங்கிற அக்ரிமெண்ட் போட்டுறாங்க. இயற்கையாக நடக்குற எந்த விஷயமும் மீடியாவுல உள்ளங்களுக்கு சீக்கிரம் நடக்க கூடாது. இதுதான் வாழ்க்கை நிதர்சனம்.  ஆனா வெளியில 'அவங்களுக்கு என்ன மீடியாவுல இருக்காங்க. அதான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறாங்க. குழந்தை பெத்துக்க மாட்டேங்கிறாங்க'னு ஈஸியா சொல்றாங்க. ஸ்க்ரீன்ல இருக்கும் எங்களுக்கு எத்தனை வயசானாலும் உடம்பு அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்கிறது என்ன மாதிரியான டிசைனோ தெரியல''. 


''மீடியாவில் இருக்கும் பெண்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது?''

'' 'பிங்க்' படத்தில் ஒரு டயலாக் வரும் 'No means No'. இது எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும். தங்களைச் சுற்றியுள்ள சுவரை திடமாகக் கட்டிவிட்டாலே யாருக்காகவும் நாம் இடம் கொடுக்க வேண்டி வராது. நீங்கள் இடம் கொடுத்தால் மட்டுமே ஒருவர் நெருங்க முடியும். நெருங்க முடியாத அளவுக்கு நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில் தான் இருக்கிறது உங்கள் பாதுகாப்பு' என்று முடித்தார் அர்ச்சனா, பல் தெரியும் டிரேட் மார்க் சிரிப்போடு''.

ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் உடல் பருமன் தொடர்பாக கேலி, கிண்டல் என ஏதாவது ஒரு வகையில் மனரீதியாகப் பாதிக்கப்படுவது உண்மை. அப்படி உடல் பருமன் குறித்து அர்ச்சனா பேசியிருப்பதற்கு உங்கள் கருத்துகளையும் பகிருங்களேன் வாசகர்களே...!

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: தி.குமரகுருபரன்