Published:Updated:

அலமேலு முதல் சத்ய ப்ரியா வரை - தமிழ் சீரியல்களின் 2016 ஹிட் ரேட்!

அலமேலு முதல் சத்ய ப்ரியா வரை - தமிழ் சீரியல்களின் 2016 ஹிட் ரேட்!
அலமேலு முதல் சத்ய ப்ரியா வரை - தமிழ் சீரியல்களின் 2016 ஹிட் ரேட்!

சூரியன் சந்திரனுக்கு பிறகு நிலையானது தமிழ் சீரியல்கள்தான். யார் என்ன ஆனாலும் சரி, எங்கு எது நடந்தாலும் சரி, சீரியல் மட்டும் தன் கடமையிலிருந்து விலகாமல் நேரத்துக்கு வந்துவிடுகிறது. இப்போது எல்லாம் பண்டிகை நாட்களில் கூட சீரியல்களை தவறாமல் ஒளிபரப்ப துவங்கியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டின் கடைசி வாரத்துக்கு முன்பான 51வது வார டீஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில் டாப் 5 இடங்களையுமே, வழக்கம் போல் சன் டிவி அள்ளிக்கொண்டுள்ளது.  

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5-ல்  இடம் பெற்றுள்ள தமிழ் நெடுந்தொடர்களும் அவற்றின் வரிசைகளும்.

5. குலதெய்வம்;  

ஒப்பனிங் சாங்கான "அச்சு வெல்லம் பச்சரிசி மாவிளக்கு" கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு மனப்பாடமாகி வருகிறது. நாதஸ்வரத்தின் வெற்றியினை தொடர்ந்து திருமுருகனின் அடுத்த படைப்பு. நாதஸ்வரத்தின் ஹேங் ஓவர் தனது அடுத்த தொடரில் தெரியக்கூடாது என்று இதில் இயக்குநர் திருமுருகன் நடிக்கவில்லை. ஆனால் மௌலியும் ஸ்ருதிகாவும் அலமேலு கதாபாத்திரம் பெண்களின் ஃபேவரைட் இருக்கிறார்கள்.ஸ்ருதிகாவின்  டான்ஸ் மாஸ்டர் சாந்தி 'மங்கலநாயகி' என்கிற பெயரில் நடித்து வருகிறார். கடந்த 2015-ன்  மத்தியில் தொடங்கப்பட்டது என்றாலும் 'ப்ரைம் டைம்' சீரியலாக உலா வருகிறது. 

4. நாகினி; 

பிற தமிழ் சீரியல்களும், அதன் நடிகர்களும் வேண்டா விருந்தாளியைப் போலத்தான் இந்த சீரியலை டீல் செய்தனர்.  ஆனால் என்ன செய்வது வழக்கமாக பெண்கள் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த நெடுந்தொடர்களை ஆண்களையும் பார்க்க வைத்தது இந்த 'பத்து மணி பாம்பு'. சோசியல் மீடியாவில் நாகினி சிவன்யாவிற்கு செம க்ரேஸ். 'டாக் ஷோ பார்க்க வேண்டும்' என ரிமோட் கேட்டு தொல்லை செய்து கொண்டிருந்த அங்கிள்களை அரை மணி நேரம் மௌன விரதமாக்கிய பெருமையுடன் நான்காவது இடத்தில் நாகினி!

3. பிரியமானவள்;

இடியே வீழ்ந்தாலும் பூமாதேவியை விட அதிகம் பொறுமையான உமா. அவரின் அழகான குடும்பம், சமூகத்திலும் உறவுகளுக்குள்ளும் அந்த குடும்பத்தைச் சூழும் பிரச்னைகள் இதுதான் கதை.  அதை அசாத்திய பொறுமையுடன் புயலை கடக்கும் தேர்ந்த மாலுமியின் நம்பிக்கையுடன்  நடத்திச் செல்லும் பிரியமானவளை யாருக்குத்தான் பிடிக்காது. முற்போக்கு குணமுடைய உமாவின் தம்பி போன்ற பாத்திரப்படைப்புகள் தமிழ் நெடுந்தொடர்களில் எப்போதாவது கண்ணில்படும் பாலைவனச்சோலை. ஒரு பெரிய தெருவை 9 மணிக்கு நடந்தே கடக்க நேர்ந்தால் பிரியமானவளின் அன்றைய முழுக்கதையும் கேட்டுக்கொண்டே நடக்கலாம் என்கிற அளவில் வீடுகள் தவறாமல் புன்னகையாய் பூத்து குலுங்குகிறாள் 'ப்ரைம் டைம் ராணி' பிரியமானவள்.

2.வம்சம்; 

வம்சத்தின் வெற்றியே அதன் வில்லன்கள்தான். "கையில கிடைச்சா அப்படியே சுவத்துல முட்டி அவனை" என பெண்களின் ஏகோபித்த கோபங்களை சம்பாரித்தவர்கள் அவர்கள். இதற்கு முன் பெண் பித்தனாக அலைந்து கொண்டிருந்த டாக்டர் மதன் தற்போது திருந்திவிட்டதால், நந்தகுமார் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். வாழைப்பழம் சாப்பிட்டால் ஹிப்னாடிக் மயக்கம் கலையும் போன்ற 'கெக்கே பிக்கே' ஆங்காங்கே இருந்தாலும் வாழ்வாங்கு வாழுது வம்சம். 

1.தெய்வமகள்;

"நான் இந்தப் பெண்ணைத்தான் லவ் பண்றேன்" என எவ்வளவு கறாரான அம்மாவிடம் கூட்டிச்சென்று நின்றாலும் வாணி போஜனின் முகத்தை பார்த்தவுடன் ஓகே சொல்லிவிடுவார்கள். அவ்வளவு நல்ல பெயர் தெய்வமகள் 'சத்ய ப்ரியா'வுக்கு. எந்த நேரமும் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் சுற்றிக்கொண்டிருந்த பிரகாஷ் சில வாரங்களாக பிபி நார்மலாகி (நமக்கும் நார்மல் ஆகி) பொறுமையுடன் இருந்தார். இருந்தாலும் அண்ணியாரின் அட்டாக் வழக்கம் போலவே அதிரடிதான். அவ்வப்போது சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் போது கிராஸ் ஆகும் ஆண்கள் கூட' நல்ல வேலை நம்ம பொண்டாட்டி ரேகா மாதிரி இல்ல' என நிம்மதி அடைய வைக்கும் டெரர் வில்லி ரேகா. மக்கு வினோ ப்ளஸ் மூர்த்தி காம்போ என படபட பட்டாசு இந்த தெய்வமகள். 

-வரவனை செந்தில்