Published:Updated:

'என் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?’ - கேட்பது அபூர்வ ராகங்கள் ‘ஏகவல்லி’!

'என் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?’ - கேட்பது அபூர்வ ராகங்கள் ‘ஏகவல்லி’!
'என் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?’ - கேட்பது அபூர்வ ராகங்கள் ‘ஏகவல்லி’!

'என் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?’ - கேட்பது அபூர்வ ராகங்கள் ‘ஏகவல்லி’!

’என் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? கண்டுபிடிங்க பார்ப்போம்’ கன்னத்தில் குழி விழ அழகாகச் சிரிக்கிறார் ஏகவல்லி. ‘அபூர்வ ராகங்கள்’ தொடரில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளிவிட்டு ஒரு சாரல் புன்னகை புரிகிறார் ஏகவல்லி. 

’ஏகவல்லினா எல்லாவற்றிற்கும் அரசியானவள்...உரிமை கொண்டாடுபவள்னு அர்த்தமாம். என் அம்மா சொன்ன அர்த்தம் இதுதான். நானும் என் பெயருக்கு ஏற்றமாதிரி எல்லாத்துக்கும் ஆசைப்படுவேன். ஆனால், பேராசை கிடையாது. அதே மாதிரி நடிப்பில் ஒரு கதாபாத்திரத்தை ஏத்துக்கிட்டா அதில் பெஸ்ட் கொடுக்கவேண்டுமென்று ஆசைப்படுவேன்’ பெயர்க்காரணத்துடன் கூடவே ஒரு பஞ்ச் வைக்கிறார். 

‘பிளஸ் 2 படித்து முடித்ததும், பியூட்டிஷியன் கோர்ஸ் முடிச்சுட்டு பியூட்டி அட்வைஸரா வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒரு ரகசியம் தெரியுமா? எனக்கு முதன்முதலில் சீரியல் வாய்ப்பு கிடைச்சதே விகடன் மூலமாத்தான். ‘தென்றல்’ சீரியலில் நடித்த நேரத்திலேயே நிறைய சீரியல் வாய்ப்புகள் கதவைத் தட்ட ஆரம்பித்தன. குட்டிக் குட்டியா நிறையக் கேரக்டர்கள் பண்ணின பிறகு, கிடைச்சதுதான் சன் டிவியின் ‘அபூர்வ ராகங்கள்’ சீரியல் வாய்ப்பு. இப்போது பத்மினியா, அழகான மனைவியா, அன்பான அம்மாவா நடிச்சுட்டு இருக்கிறேன்’’ - தலைசாய்த்துச் சொல்லும்போது ஏகவல்லியின் கண்களும் பேசுகின்றன. 

’ஸ்ருதி அக்கா கூட இது எனக்கு இரண்டாவது சீரியல். தென்றலில் சாஃப்ட்டான, அப்பாவிப் பெண்ணா நடிச்சவங்க இந்த சீரியலில் அட்டகாசமான, தெளிவான, புத்திசாலிப் பெண்ணாக் கலக்குறாங்க. ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப் அவங்க. நடிப்பு சம்பந்தமா என்ன சந்தேகம் கேட்டாலும் பந்தா காட்டாம எளிமையா சொல்லிக் கொடுப்பாங்க’ ஹீரோயின் ஸ்ருதியுடனான நெருக்கம் குறித்து பாயின்ட்டுகளை அடுக்குகிறார் ஏகவல்லி. 

‘அம்மா, அப்பாவுடைய ஃபுல் சப்போர்ட்தான் எனக்கான பலம். சீரியல்களில் நடிக்கப் போறேனு சொன்னதும் திட்டாம, அடிக்காம என்னை என்கரேஜ் செய்தாங்க. வித்தியாசமான கேரக்டர்களில் நீ நடிக்கணும்னு என்னை உற்சாகப்படுத்தினாங்க. அவங்க ஆசைப்பட்டமாதிரியே இன்னும், இன்னும் பெரிய கேரக்டர்களில் நடிக்கணும். எல்லாரையும் மிரட்டும் வில்லி கதாப்பாத்திரம் கிடைத்தாலும் ஓகேதான்’ என்று இடுப்பில் கைவைத்து அழகு காட்டுகிறார்... இயக்குநர்கள் கவனிக்க! 

"சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னாடி பியூட்டி அட்வைஸராக வேலைபார்த்திருக்கீங்க...எங்களுக்கும் கொஞ்சம் அழகுக் குறிப்புகள் கொடுங்களேன்" என்றதும் மடை திறந்த வெள்ளமாகக் கொட்டுகிறார் குறிப்புகளை. 

‘எப்பவும் சரிவிகித உணவு அவசியம். அழகுங்கிறது மேக்கப்பில் இல்லை. இயல்பான சருமத்தில்தான் இருக்கு. அதைக் காக்க தினசரி நிறையத் தண்ணீர் குடிங்க. பழங்கள், காய்கறிகள் உணவில் தினமும் கட்டாயம் இருக்கவேண்டும். முடிந்தவரை காஸ்மெடிக்ஸ் அதிகமா யூஸ் பண்றதைத் தவிர்த்திடுங்க. இயல்பா இருங்கள். நீங்க பார்க்கிற வேலையை  நேசித்துப் பண்ணுங்கள். காலை உணவை எப்பவும் ஸ்கிப் பண்ணாதீங்க. கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்னு எல்லாச் சத்துக்களும் உங்க தட்டில் எப்போதும் இருக்கணும். உணவில் எல்லாக் கலரும் இருக்கவேண்டியது அவசியம். பெரும்பாலும் அரிசி உணவைத் தவிர்த்துடுங்க. முக்கியமா உணவைக் கடித்து, மென்னு சாப்பிடுங்கள். அப்போதுதான் பற்களும் பலமாகும். சிரிப்புதானே முக்கியம் அழகுக்கு’சொல்லிவிட்டுக் கன்னம் குழிய சிரிக்கிறார் ஏகவல்லி.

-பா.விஜயலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு