Published:Updated:

“விஜய்சேதிபதியை முறைச்சேன்.. நயன்தாரா சிரிச்சாங்க!” - லோகேஷ் லூட்டி

“விஜய்சேதிபதியை முறைச்சேன்.. நயன்தாரா சிரிச்சாங்க!” - லோகேஷ் லூட்டி
“விஜய்சேதிபதியை முறைச்சேன்.. நயன்தாரா சிரிச்சாங்க!” - லோகேஷ் லூட்டி

ஆதித்யாவில் நிகழ்ச்சிகளின் பிரேக்கிற்கு இடையில் ஒளிபரப்பப்படும் ஒரு ஷோ, 'மொக்கை ஆஃப் த டே' அதில் லோகேஷ், கோபி இருவரும் இணைந்து மொக்கை காமெடிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். 'நானும் ரெளடி தான்' படத்தில் ஒரே சீனில் ஓஹோவென பாப்புலர் ஆனார். அவரிடம் ஒரு மினி சாட்,

''எப்படி நீங்க ஆதித்யா காமெடி ஷோவுக்குத் தேர்வானீங்க?''

''நான் சென்னை, அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா காலேஜ்ல பி.காம் படிச்சேன். படிச்சேன் என்பதை விட நடிச்சேன்னு சொன்னாதான் பொருத்தமாக இருக்கும். எப்போதும் கல்ச்சுரல்ஸ் என 30 பேர் கொண்ட குழுவோடு சுத்திட்டே இருப்பேன். அப்படித்தான் தெரு நாடகங்கள், நடிப்பு மீது எல்லாம் ஆர்வம் வந்துச்சு. எங்க காலேஜூக்கும் குருநானக் காலேஜூக்கும் எப்போதும் மேடையில் போட்டி இருந்துட்டே இருக்கும். எத்தனைக் கல்லூரிகள் போட்டிக்கு வந்தாலும் எங்க இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில்தான் போட்டி. அப்படி எதிர் டீமில் இருந்து எங்க காலேஜ் குரூப்போடு சேர்ந்தவன்தான் கோபி.

அதற்குப் பிறகு நல்ல நண்பனாகிட்டான். நாங்க இரண்டு பேரும் சேர்ந்து நிறைய தெரு நாடகங்களில் நடிச்சிருக்கோம். அப்படி நடிக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் ஜாலியாக அடிப்பது போலதான் நடிப்போம். அப்படித்தான் இப்போ நாங்க பண்ற 'மொக்கை ஆஃப் த டே' பண்ணிட்டு இருக்கோம். நாங்க கல்லூரியில படிக்கிறப்ப, விஜய் டிவி ‘அது இது எது’ டைரக்டர் எங்க காலேஜூக்கு வந்திருந்தார். அவர் முன்னாடி நடிச்சுக் காண்பிச்சோம். அப்படித்தான் விஜய் டி.வியில் 'காமெடியில் கலக்குவது எப்படி?' நிகழ்ச்சி செய்வதற்கான வாய்ப்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து ஆதித்யா சேனல் சார்பாக பொங்கலுக்கான ஸ்பெஷல் ஷோ ஒண்ணை நான் பண்ணேன். என்னோட ஷோ பிடிச்சுப் போய், 'காமெடிக்கு நாங்க கேரண்டி' நிகழ்ச்சியைக் கையில கொடுத்தாங்க. இப்போ வரைக்கும் அந்த கிராப் கரெக்டாப் போயிட்டு இருக்கு''.

'' 'நானும் ரெளடி தான்' படத்தில் அந்த முறைக்கிற சீனுக்கு எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தாங்க?''

'' 'நானும் ரெளடி தான்' படத்துக்கான ஆடிசன் நடப்பதை தெரிஞ்சுட்டு அதில் கலந்துக்கிட்டேன். திடீர்னு ஒரு நாள் ‘நீங்க இந்தப் படத்துல நடிக்க செலக்ட் ஆகிட்டீங்க. பாண்டிச்சேரிக்கு நாளைக்கு காலைல வரணும்.. நாலு நாள் ஷூட் இருக்கும்'னு போன் வந்துச்சு. நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிரூத் எல்லாம் வருவாங்களே, அவங்களோட சேர்ந்து நடிக்கிறது எவ்வளவுப் பெரிய விஷயம்.' இப்படி பல கனவுகளோடப் போன எனக்கு அப்படி ஒரு விபரீதம் நடக்கும்னு நினைக்கவே இல்ல.

போனது ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணிட்டு, ‘தம்பி தலையை சாய்ங்க, சாஞ்ச மேனிக்கா உட்காருங்க, முறைச்சுப் பாருங்க’னு சொன்னாங்க. ’என்னடா இது விஜய்சேதுபதியை முறைக்கிறதுதான் நடிப்பா?’ன்னு நினைச்சேன். ஷாட் முடிஞ்சதும் நயன்தாரா உள்பட எல்லோரும் சிரிச்சிட்டாங்க. அதுக்கப்புறமும் எதாவது நடிக்க வாய்ப்புக் கொடுப்பாங்கனு பார்த்தேன். இவ்வளவுதான் உங்க நடிப்பேனு சொல்லி அனுப்பி வச்சுட்டாங்க.

திரும்பி வரும் போது மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தது. இப்படி முதல் வாய்ப்பே சொதப்பிடுச்சே. நடிப்புக்கான வாய்ப்பே இல்லாமப் போயிடுச்சேனு வருத்தப்பட்டேன். ஆனா, படம் வந்தப் பிறகு அவ்வளவு பெரிய ரீச் அந்த ஒரு சீன் மட்டும். அந்த சீன் தான் சினிமாவுல இருக்கிற ஆளுங்களுக்கு என்னைத் தெரிய வச்சது. சீன் நல்லா இருந்தா மக்கள் ரசிப்பாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்''.

''இப்போ என்னென்னப் படத்துல நடிச்சிட்டு இருக்கீங்க?''

'அதர்வா ஹீரோவாக நடிக்கும் 'ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்', கிருஷ்ணா நடிக்கும் 'பண்டிகை', சந்தானம் நடிக்கும் 'சக்கப்போடு போடு ராஜா', சான்டி மாஸ்டர் நடிக்கும் 'பலசாலி'  மற்றும் விதிமதி என படங்களில் நானும் பிசியாகத்தான் இருக்கேன். இதில் எதிலும் காமெடி ரோல் கிடையாது. எனக்கு காமெடி ரோல் நல்லா வரும். வாய்ப்பு வந்தா அதையும் ஒரு கைப் பார்க்கணும்''.

''உங்க குடும்பத்தினர் பற்றி?''

''நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதுக்குப் பின்னாடி, அம்மா தான் எனக்கு முழுக்க முழுக்க சப்போர்ட். நான் படிக்கும் போதே, டெலிவரி ஆளாக வேலைப் பார்த்துட்டு இருந்தேன். அதையும் விட்டுட்டு முழுக்க முழுக்க கல்ச்சுரல்ஸ், படிப்புனு இறங்கிட்டேன். காலேஜ்ல இன்னும் 15 அரியர்ஸ் பாக்கியிருக்கு. ஆனால், ஒரு நாள் கூட என் அம்மா என்னைத் திட்டினதே கிடையாது. அவ்வளவு தூரம் ஊக்கம் கொடுத்தாங்க. அவங்களுக்காகவாவது நான் முன்னேறணும்!”

''இந்த வாய்ப்புக்கு நன்றி சொல்லனும்னா யாருக்குச் சொல்லுவீங்க?''

''நான் இப்போ வரைக்கும் இங்க நிக்கிறேனா அதுக்கு எப்போதும் கூடவே இருந்து உதவி செய்து வருகிற சத்து என்கிற நண்பனுக்குத்தான் நன்றி சொல்லணும். நான் கஷ்டப்பட்ட காலத்துல தங்க இடம் கொடுத்து, டிரெஸ், பைக், செலவுக்கு காசு என பல உதவிகளை செய்திருக்கான். அவன் இல்லனா நான் இல்ல. இப்போ வரைக்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம தொடர்ந்து உதவிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கும் என் உயிர் நண்பனுக்கு 'நன்றி' என்கிற ஒரு வார்த்தை மட்டும் போதாது. ஆதித்யா சேனலும் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்திருக்கு''. 

-வே. கிருஷ்ணவேணி