Published:Updated:

'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க!’' - 'என்னம்மா’ ராமர்

'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க!’'  - 'என்னம்மா’ ராமர்
'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க!’' - 'என்னம்மா’ ராமர்

'' 'என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா’னு என் குழந்தைங்க கேப்பாங்க!’' - 'என்னம்மா’ ராமர்

விஜய் டி.வியின் 'அது இது எது' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர்,  தற்போது படங்களில் நடித்து வருகிறார்கள். 'அது இது எது' என்றாலே நினைக்கு வருவது, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' ராமர் தான். சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து, படத்தில் பாடலாகவே பாடப்பட்ட இந்த டயலாக்கிற்கு சொந்தக்காரர் 'என்னம்மா ராமர்'.  அவரிடம் பேசினேன்,

''எப்படி உங்களுக்கு இந்த கலையின் மீது இவ்வளவு ஆர்வம் வந்தது?'' 

''நான் பத்தாம் வகுப்புப் படிக்கும் போதே சினிமா மீதான கனவு அதிகமா இருந்தது. நான் பார்த்து ரசிக்கிற அந்த சினிமா ஸ்கிரீனில், என் முகம் தெரிய வேண்டும் என ஒவ்வொரு நாளும் கனவு கண்டேன். வீட்டில் திட்டு வாங்கினாலும்  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா திரைப்படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். அந்த ஆசை படிப்படியாக டி.வி, சினிமாவரைக்கொண்டு வந்து என் தாகத்தை நிறைவு செய்ததுனு சொல்லலாம். 7 படங்களுக்கும் மேல் பண்ணியிருக்கேன். இப்பவும் வாய்ப்பு வந்துட்டே தான் இருக்கு.''

''காமெடிக்காக மெனக்கெடுவீங்களோ?''

''மதுரைக்காரங்கனால பேச்சுல எப்பவும் நகைச்சுவை உணர்வு இருந்துகிட்டேதான் இருக்கும். அடிப்படையிலயே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். மதுரை, 'நகைச்சுவை மன்றத்தில்' நான், ரோபோ சங்கர், மதுரை முத்து என ஞானசம்பந்தன் ஐயாகிட்ட நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். அந்த மன்றத்தில் 'நியூ காமெடி பாய்ஸ்' என்கிற ஒரு கிளப்பை உருவாக்கினோம். இப்போ வரைக்கும் அந்த நகைச்சுவை உணர்வுதான் எங்களுடைய அடையாளம்.''

''ரோபோ சங்கர், மதுரை முத்து இப்போதும் உங்ககிட்ட பேசுவாங்களா?''

''பல படங்கள், நிகழ்ச்சிகள் என எல்லோருமே பிஸியாகிட்டாலும், நேரம் கிடைக்கும் போது, எப்படியாவது பேசிடுவோம். அப்போ இருந்த அதே நட்பும், அன்பும் இப்பவும் குறைவில்லாமல் இருக்கு. அது எனக்கு சந்தோஷம். 2007 ம் ஆண்டு விஜய் டி.வி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சிக்கான ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். நான், சிவகார்த்திகேயன் எல்லாருமே ஒரே பேட்ஜ். நான் செமி ஃபைனல் வரைக்கும் வந்தேன். சிவகார்த்திகேயன் ஃபைனல்ஸ் வரைக்கும் வந்து வின் பண்ணார். எப்போ பார்த்தாலும், ராமர் அண்ணேனு அன்பா கூப்பிடுவார். ஆறாயிரம் பேருக்கும் மேல் கலந்துக்கிட்ட அந்த ஆடிஷன்ல மிகக்குறைவான நபர்களில் நாங்க செலக்ட் ஆனதை பெரிய விஷயமா நினைக்கிறேன்.''

''முதன் முதலாக மக்கள்கிட்ட நீங்க ரீச் ஆனது எப்படி?''

'' 'அது இது எது' நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட பிறகு, பருத்திவீரன் படம் அப்போதான் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்தப் படத்தில், 'ஊரோரம் புளியமரம்...'' பாட்டுப் பாடும் பாட்டியோட கெட்டப்பைப் போடணும்னு டைரக்டர் சொன்னார். எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. இருந்தாலும், அதைப்பத்தி யோசிக்காம, மீசை எல்லாம் எடுத்துட்டு ஒரு பாட்டி மாதிரியே வந்தேன். அந்த நிகழ்ச்சிக்கும், கெட்டப்பிற்கும் மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது. நிகழ்ச்சியை டி.வில பார்த்துட்டு, ஊர்ல இருக்கவங்க எல்லாம், 'உங்க அம்மாவைப் பார்த்த மாதிரியே இருந்துச்சுடானு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நானும் உத்துப் பார்த்தேன். அப்படியே என் அம்மா சாயல். மனசுக்கு ரொம்பத் திருப்தியா இருந்தது. அதுக்குப் பிறகுதான், 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...' ரீச் ஆச்சு. அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, லட்சுமி மேடம் கூப்பிட்டுப் பாராட்டினாங்க. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில ஃபோன் மிரட்டலும் வந்தது தனிக்கதை.''

''உங்க குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?''

''அப்பா இல்ல. அம்மா மட்டுதான் இருக்காங்க. அவங்க பேர் கருப்பாயி. என் கூடப்பிறந்தவங்க ஐந்து பேர். என்னைச் சேர்த்து மொத்தம் ஆறு பேர். நான் நாலாவது பையன். நான் படிச்சது எல்லாமே மதுரையிலதான். பி.பி.ஏ முடிச்சிருக்கேன். ஸ்கூல் படிக்கும் போதே மிமிக்ரி ஆர்வம் இருந்தது. மனைவி பெயர் கிருஷ்ணவேணி. எங்களுக்கு இரண்டு பொண்ணுங்க, ஒரு பையன். முதல் பொண்ணு யமுனா 3ம் வகுப்பும், இரண்டாவது பொண்ணு ஐஸ்வர்யா 2ம் வகுப்பும் படிக்கிறாங்க, ஹரிஷ்பிரணவ்வுக்கு மூன்றரை வயசு ஆகுது''.  

''பெண்கள் கெட்டப் போடும் போது வீட்ல என்ன சொல்வாங்க?''

''எனக்குப் பெரும்பாலும் லேடீஸ் கெட்டப் தான் வரும். அடிக்கடி அப்படி வர்றதால, என் பிள்ளைகள் படிக்கிற ஸ்கூல்ல பசங்க கிண்டல் பண்றாங்க போல, அதனால, 'ஏம்ப்பா அடிக்கடி லேடீஸ் கெட்டப் போடுறீங்க..? பிடிக்கவே இல்ல’னு என் பிள்ளைங்க சொல்லுவாங்க. இப்போ கொஞ்சம் பரவாயில்ல. வித்தியாசமான ரோல் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு''. 

''நீங்க அடிக்கடி ஆடுற அந்த டான்ஸ் ஸ்டெப் எப்படி இவ்வளவு பிரபலம் ஆச்சு?''

''எதார்த்தமா ஒரு எபிசோட்ல லிஃப்ட் ஓபன் ஆகும்போது இந்த ஸ்டெப்போட வந்தேன். அது எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அப்போ, வடிவேல் பாலாஜி தான், 'இதை நிறையப் பேர் வரவேற்கிறாங்க.. உங்களுக்கான ஒரு ட்ரேட் மார்க்னு நினைக்கிறேன். இதை விட்டுடாதீங்க’னு சொன்னாப்ல. அதனால ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எப்படியாவது அந்த 'டக்கு' ஸ்டெப்பை பண்ணி, அப்ளாஸ் அள்ளிடுவேன். சான்டி மாஸ்டர், மா.கா.பா எல்லாம் சேர்ந்து இதுக்கு, 'பென்குயின் டான்ஸ்'னு பேர் வச்சாங்க. இப்போ இந்த பெயரிலேயே நிறைய ஸ்கூல் காலேஜ்ல ஆடுறாங்க. சில நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது சொன்னாங்க. எல்லாத்தையும் விட, லாரன்ஸ் மாஸ்டரோட காஞ்சனா படம் வந்தப்போ, காஞ்சனா கெட்டப் போட்டு நடிச்சிருந்தேன். அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு லாரன்ஸ் மாஸ்டர் கூப்பிட்டு, 'நான் டென்ஷனா இருக்கும் போது உங்க ஷோவை தான் பார்ப்பேன். நிஜமாவே டென்ஷன் ரிலீஃபா இருக்கு'னு பாராட்டினார். அந்த பாராட்டை என்னால மறக்கவே முடியாது. மேலும், என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஊக்கம் கொடுத்தவர், கொடுத்துக் கொண்டிருப்பவர் 'அது இது எது' நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன். நான் புதுமையாக எதைச் செய்தாலும் பாராட்டுவார். அந்தப் பாராட்டுத்தான் என்னை மெருகேற்றியிருக்கு''.

-வே. கிருஷ்ணவேணி 

அடுத்த கட்டுரைக்கு