Published:Updated:

’வெரிகுட்’ ரஜினி... ’ஸாரி’ அஜீத் - ‘ஆதித்யா’ தாப்பா ஃபீலீங்ஸ்...

வே.கிருஷ்ணவேணி
’வெரிகுட்’ ரஜினி... ’ஸாரி’ அஜீத் - ‘ஆதித்யா’ தாப்பா ஃபீலீங்ஸ்...
’வெரிகுட்’ ரஜினி... ’ஸாரி’ அஜீத் - ‘ஆதித்யா’ தாப்பா ஃபீலீங்ஸ்...

'தமிழ் நாட்டில் பிறந்தவர்களே தமிழை சரியாகப் பேசுவதில்லை. அப்படி இருக்கும்போது, நேபாளத்தில் பிறந்து, வளர்ந்த பெண் இவ்வளவு சரளமாகத் தமிழ் பேசிக் கலக்குகிறாரே’ என்று நம்மை ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்த வைத்தவர் ஆதித்யா சேனல் தொகுப்பாளினி தாப்பா. என் ஆச்சர்யத்தையும் அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.

''எப்படி இவ்வளவு சரளமாத் தமிழ் பேசுறீங்க?''

''எல்லாமே பயிற்சிதான். ஆரம்பத்துல நிறையக் கஷ்டப்பட்டேன். ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் தமிழ் சொல்லிக் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்டேன். ஆனா இப்போ வரைக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. வீட்ல யாருக்குமே தமிழ் பேசத் தெரியாது. தமிழ் தெரிந்த ஒரே ஆள் நான் மட்டும்தான். முதன் முதல்ல ஷோ பண்ணும்போதும் கஷ்டமா இருந்தது. ‘ஆதித்யா’ ஆதவன் தொடங்கி, சேனலில் இருக்கிற ஒவ்வொருத்தரும் எனக்கு ரொம்பவே உதவியா இருந்தாங்க. ஆதவன் எனக்கு முதல்ல நல்ல குருவா இருந்தார். அதற்குப் பிறகு, இப்போ குடும்பத்தில் ஒருத்தரா, அன்புத் தங்கச்சிக்கு ஒரு நல்ல அண்ணனா இருக்கார்!”

''முதன் முதலில் கேமரா முன்னாடி நின்ற அனுபவம்?''

''முதன் முதல்ல ஆதித்யா சேனலுக்கு ஆடிஷனுக்குப் போனது அர்ச்சனா மூலமாகத்தான். முதல் லைவ்ல கேமரா முன்னாடி நிற்கும்போது என்னுடன் சேர்ந்து ஆங்கரிங் பண்ணினது வடிவேல் பாலாஜி. கேமராவையே முறைச்சு முறைச்சுப் பார்க்கிறேன். கேமரா மேன், 'ம்மா.. நார்மலாப் பாருங்க'னு சொல்றார்.  ஹலோ, ஹாய், வணக்கம் இதைத்தான் அடிக்கடி சொல்லுவேன். தப்பா எதுவும் சொல்லிட்டா பிரச்னையாகிடுமேனு பயந்துட்டுப் பேசவே மாட்டேன். எப்படியோ வடிவேலு பாலாஜி மேட்ச் பண்ணிக் காப்பாத்திட்டார். அதற்குப் பிறகு ஆதவன் கூட லைவ். அவர் கூட நிகழ்ச்சி பண்ணும்போது நான் பேசுற தமிழில் ஏகப்பட்ட பட்டி, டிங்கரிங் பார்த்து ஒருவழியாத் தயார் பண்ணினார். ‘ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன்’ ஃபீலிங் இப்போ!”

''வீட்ல அப்பா, அம்மா எல்லாம் என்னப் பண்றாங்க''

''அப்பா பிரேம், அம்மா டீகா குமாரி, தங்கை கல்பனா தாப்பா. அப்பாவுக்கு அரசாங்க வேலை. அதனாலதான் 2004ம் ஆண்டு சென்னைக்கு வந்தோம். சென்னை வந்துதான் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தேன். அதுக்கப்புறம் காலேஜ் சேரும் போது பி.ஏ.டூரிசம் கோர்ஸ்ல டீச்சர்ஸ் சேர்த்துக்கிட்டாங்க. நானும், ஜாலியா ஏர் ஹோஸ்டஸ் ஆகலாம் என்கிற ஆசையில படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது, சாப்பாடு கொடுக்கிற வேலைக்குத்தான் போகப்போறோம்னு. அந்த வேலையும் பிடிச்சதால, வேலைக்காக காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா என் உயரம் 5.1 என்பதால அந்த வாய்ப்பும் கிடைக்கலை. எனக்கு காலைல வேலைக்குப் போய், மாலை வீட்டுக்கு வந்து குடும்பத்தைக் கவனிச்சிக்கணும். இதுதான் என்னுடைய விருப்பம்''.

''உங்க முழுப் பெயரே தாப்பா தானா?''

''இல்ல என் பெயர் ஷர்மிளா தாப்பா. ஆதித்யா சேனலுக்கு வந்தப்போ ஷர்மிளா என்பது பொதுவானப் பெயரா இருந்ததால, மாத்தி வேற பெயரை வச்சுக்கச் சொன்னாங்க. அதனாலதான் எங்க குடும்பத்தோட சர் நேமையே என்னோடப் பெயரா வச்சுக்கிட்டேன். இதுதான் என் பெயருக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் மக்களே..!''

''உங்களால மறக்க முடியாத மூன்று பிரபலங்கள்?''

''ரஜினி சார், அஜீத் சார், கோவை சரளா இவங்க மூணு பேரையும் சந்திச்சிருக்கேன். ஆனா இதில் விடுபட்ட ஒரே ஆள் மனோரமா ஆச்சி மட்டும் தான். அவங்கள எப்படியாவது சந்திக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அது கடைசி வரைக்கும் நிறைவேறாமலேயே போயிடுச்சு. ஆதித்யா டிவி சார்பாக ஒரு நிகழ்ச்சிக்கு மலேசியாவுக்குப் போயிருந்தேன். அந்த நேரம் அங்கே ‘கபாலி’ ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்தது. ரஜினி சார் ஷூட்டிங் முடிச்சுட்டு கார்ல கிளம்பிப் போயிட்டார். நான் இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா எப்படியாவது அவர்கிட்டப் பேசியிருக்கலாமேனு வருத்தப்பட்டுட்டு நின்னுட்டு இருந்தேன். அப்போ, ரஜினி சார் கார் திடீர்னு நின்னுச்சு. அந்த கார்ல இருந்து அவர் இறங்கி, என்னை நோக்கி வந்தார். 'நீங்க டிவியில ஹோஸ்ட் பண்றவங்கதானே..? உங்களைப் பார்த்திருக்கேன். நல்லாப் பண்றீங்க'னு சொல்லி தோள்ல தட்டிக் கொடுத்துட்டுப் போனார். அப்படியே சிலை மாதிரி, கண் இமைக்காம கொஞ்ச நேரம் நின்னுட்டு இருந்தேன். அதே போல ‘வேதாளம்’ படத்தில் நடிக்கும் பொழுது அஜீத் சார் ஷூட்டிங்ல இருக்கும் போது, ''ஏம்மா பேச மாட்டேங்கிறீங்க.. நல்லாப் பேசுங்க, பழகுங்க..''னு சொல்லி உற்சாகப்படுத்தினார். அந்தப் படத்தில் நடிக்கும் போது, அஜீத் சார் கூட போட்டோ எடுக்க ஆசையா இருந்தது. அவர் ஓ.கே சொல்ல, இரண்டு மூன்று தடவை செல்போனில் கேட்டுக் கேட்டுப் ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். அவர் எதாவது தப்பா நினைச்சுட்டாரானு தெரியல. அவர்கிட்ட சாரி கேட்டுக்கிறேன். இதே மாதிரி ஆதித்யா சேனல் பேட்டிக்காக குழுவோடு கோவை சரளா அக்காவுடைய வீட்டிற்குப்  போயிருந்தேன். அப்போ அவங்க பேசும் பொழுது எதுவுமே காதுல விழல. நிகழ்ச்சி முடிஞ்சு வந்தப்போ என் கூட வந்தவர் என்கிட்ட கேட்டார், 'கோவை சரளா மேடம் என்ன சொன்னாங்கனு தெரியுமா..? என கேட்கவும், 'நான் கவனிக்கல’னு சொன்னேன். அதற்கு அவர், 'எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருந்திருந்தா.. அதுக்கு உன் வயசு இருக்கும்ல. நீங்க என் பொண்ணு மாதிரி'னு சொன்னாங்க. அதைக் கேட்டவுடனே கண் கலங்கிடுச்சு. இந்த மூன்று நிகழ்வுகளையும் என்னால மறக்க முடியாது''.

''உங்கள் ரசிகர் அனுப்பிய மறக்க முடியாத பரிசு?''

''தேனி, கம்பம் ஜோதிலட்சுமி எனக்கு ஒவ்வொரு பொங்கலுக்கும் சேலை அனுப்புவாங்க. இந்த சேலையைக் கட்டிட்டுத்தான் பொங்கல் தினத்தன்று ஷோ பண்ணனும் என அன்பு கட்டளை வேறு போட்டுடுவார்''. 

''நீங்க நிறைய ஊர் சுத்தியிருக்கிங்க போல?''

''அதெல்லாம் காலேஜ் படிக்கும் போதுதான். அடிக்கடி நான் போற இடம் அபிராமி மெகா மால். இப்போ அங்கப் போறதா இருந்தா முகத்தை மறைச்சுட்டுத்தான் போக வேண்டியிருக்கு. ஸ்கூல் டேஸ் வரைக்கும் என்ன சொன்னாலும், திட்டினாலும் உடனே அழுதுடுவேன். ஸ்கூல் டேஸ்ல சில சமயம் பஸ் ஸ்டாப் மாறி இறங்கிட்டு அழுதுக்கிட்டே வீட்டுக்குப் போயிருக்கேன். ஆனா காலேஜ் வந்தபிறகு, பசங்களுக்கு எங்கே ரூட் தெரியலைனாலும், உடனே எனக்குப் போன் பண்ணி எப்படி போகணும்னு கேட்பாங்க. அந்த அளவுக்கு முன்னேறியிருந்தேன். வேலைக்கு வந்தப் பிறகு எங்கும் போக முடியல.  ’ஃபீலிங் சேட்' என சோகமாகிறார் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த ஷர்மிளா தாப்பா''.

’’சரி, 2017ல் என்ன பண்றதா இருக்கீங்க?”

“கல்யாணம்!”

''என்னது, இந்த சின்ன வயசுலயே திருமணமா?''

''கலாய்க்கிறீங்க.. கல்யாணம் பண்ணக்கூடிய வயசு வந்திடுச்சு. இந்த வருஷத்துக்குள் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கிறேன். கடவுளின் சித்தம் எப்படி இருக்குதுனு பார்ப்போம்''. 

அட்வான்ஸ் வாழ்த்துகள் தாப்பா!

-வே. கிருஷ்ணவேணி