Published:Updated:

தமிழ் சீரியல்களில் இந்த முகங்களை மறக்க முடியுமா?

வே.கிருஷ்ணவேணி
தமிழ் சீரியல்களில் இந்த முகங்களை மறக்க முடியுமா?
தமிழ் சீரியல்களில் இந்த முகங்களை மறக்க முடியுமா?

வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரைக்கும் ஹீரோ, ஹீரோயின், டைட்டில் சாங், என அத்தனை அம்சமும் இடம் பெற்றிருக்கும். அதில் 1990 ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒளிபரப்பான மெகா ஹிட் சீரியல் மூலமாக மக்கள் மனதில் நின்ற பிரபல முகங்களை இங்கு பார்ப்போம்.

கோலங்கள்: தேவயானி

தமிழ் சீரியல் வரலாற்றில் பல வருடம் தொடர்ந்து வெளிவந்த ஒரு சீரியலை மக்கள் ரசித்தார்கள் என்றால் அது கோலங்கள் சீரியலாகத்தான் இருக்க முடியும். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்த இந்த சீரியலின் கதாநாயகியாக தேவயானி நடித்திருந்தார். 2003 ம் ஆண்டு தொடங்கி 2009 வரை இந்த சீரியல் ஒளிபரப்பானது. கோலங்கள் பாடலும் அப்போது செம ஹிட்.  இந்த சீரியல் டைட்டில் பாடலுக்கு இசையமைத்தவர் டி.இமான். பழனி பாரதி வரிகளில் பாடல் பாடியவர் ஹரிணி. 

மெட்டி ஒலி: சேத்தன்

'அம்மி அம்மி அம்மி மிதித்து, அருந்ததி முகம் பார்த்து...' என தொடங்கும் பாடல் 2002 - 2005 வரை ஒளிபரப்பாகாத வீடு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியின் வருகை குறைவாக இருந்த போதும் கூட, பக்கத்து வீட்டுக்கு சென்றாவது இந்த சீரியலை பார்த்துவிடுவார்கள். மெட்டி ஒலியின் சீரியல் பாட்டு, அப்போது மிகவும் பிரபலம். காரணம், வைரமுத்துவின் பாடல் வரிகளின் உணர்வை தத்ரூபமாக வெளிக் கொண்டுவந்தவர் இசையமைப்பாளர் தீனா. இந்த ஓப்பனிங் சாங்கில் நடனமாடியவருக்காக அப்போது தனி ரசிகர் கூட்டமே இருந்தது. 

சித்தி, அரசி, வாணி-ராணி : ராதிகா

சித்திஇஇஇ.. சீரியலின் புரமோஷனின் போதும், இடைவெளி முடிந்து மீண்டும் சீரியல் தொடரும்போதும் இந்த குரல் வரும். 'கண்ணிண் மணி கண்ணிண் மணி நிஜம் கேளம்மா..' என தொடங்கும் பாடலின் இறுதியில் 'சித்தி' என முடியும். 1999 ம் ஆண்டு டிசம்பர் 20 ம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடருக்கு அவ்வளவு ரசிகர்கள். 2001 வரை செம இன்ட்ரஸ்டிங்காக ஓடியது இந்த சீரியல். அரசி சீரியலில் திருநங்கையாக நடித்து அப்ளாஸ் அள்ளியிருப்பார் நடிகர் பிரித்திவிராஜ். இந்த சீரியலில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ராதிகா நடித்தது கூடுதல் சிறப்பு. அதே போல ராதிகாவும், பிரித்திவிராஜூம் இணைந்து வாணி ராணியில் நடித்து வருகிறார்கள். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வாணி-ராணி சீரியலில் ராதிகா இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாந்தமாகவும், மிடுக்காகவும் அவர் நடிக்கும் தோரணை மக்களை கவர்ந்துள்ளது.  

மர்ம தேசம்: தேவதர்ஷினி

சீரியலில் நடித்து கணவன், மனைவி ஆனவர்கள் வரிசையில் மிகவும் குறிப்பிடப்படவேண்டியவர்கள் சேத்தன், தேவதர்ஷினி. 1995 முதல் 1998 வரை சன் டி.வி யில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்ட 'மர்ம தேசம்' சீரியல், பிறகு ராஜ் டிவியில் 1998 முதல் 2001 வரை மறு ஒளிபரப்பானபோதும் மக்களிடையே நல்ல ரீச். இதன் மூலமாக மக்களிடையே மறக்க முடியாத அடையாளத்தை பெற்றார் தேவதர்ஷினி. சின்னத்திரையில் கிடைத்த வெற்றியின் மூலமாக வெள்ளித்திரையில் கால் பதித்தவர், அங்கும் கொடிகட்டி பறக்கிறார்.

கனா காணும் காலங்கள்​​​​​: பாண்டி​​

விஜய் டி.வியில் 2006 முதல் 2008 ம் ஆண்டு வரை ஹிட்டடித்த சீரியல் 'கனா காணும் காலங்கள்'. சீசன் 1, சீசன் 2 என இரண்டு பார்ட்டுமே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்த சீரியல்களில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் பிற்காலத்தில் பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து ஹிட் ஆனார்கள். 'பட்டாளம்' படத்தில் யுதன் பாலாஜி, 'அங்காடித்தெரு'  பாண்டி என பல முகங்கள் திரைக்கு கிடைத்தன. இந்த சீரியலுக்கான டைட்டில் பாடலுக்கு இசை அமைத்தவர் யார் தெரியுமா? நம்ம 'சைத்தான்' விஜய் ஆண்டனி. 

தெய்வமகள் - வாணி போஜன்

'விளம்பரத்துறை மாடலாக பவனி வந்த வாணி போஜன் 'தெய்வமகள்' சீரியலுக்குள் நுழைந்து, அத்தனை திறமையையும் ஒருங்கே அமைந்த பெண்ணாக நடித்து வருகிறார். இப்படி ஒரு மகள், மருமகள் நம்ம குடும்பத்திலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்மணிகளும் எதிர்பார்க்கும் வகையில் பக்கத்துவீட்டு பெண் பாவணை பலரையும் ஈர்த்தது. தெய்வமகள் சீரியலைத் தொடர்ந்து தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் 'லட்சுமி வந்தாச்சு' சீரியலிலும் அசத்தி வருகிறார் வாணி போஜன். 

'சரவணன் மீனாட்சி' - ஶ்ரீஜா - செந்தில்

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பையும், ஈர்ப்பையும் தந்தது 'சரவணன் மீனாட்சி' சீரியல். முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது இந்த சீரியல். முதல் பாகத்தில் கணவன், மனைவியாக நடித்த ஶ்ரீஜா-செந்தில், நிஜத்திலும் கணவன், மனைவியாகி மீண்டும் 'மாப்பிள்ளை' சீரியலில் ஜோடி சேர்ந்திருக்கிறது இந்த லவ் ஃபேர்ட்ஸ்.

'பிரிவோம் சந்திப்போம்' - கல்யாணி

'ஜெயம்' படத்தில் சதாவுக்கு தங்கச்சியாக நடித்து அப்ளாஸ் வாங்கியவர் கல்யாணி. தொடர்ந்து படங்கள், சீரியல் என கமிட் ஆனார். அவருடைய ஒவ்வொரு ரோலுமே மக்களிடையே பேசப்பட்டது. விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திபோம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற சிரீயல்களிலும் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர். பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்த கல்யாணி 2013ம் ஆண்டு மருத்துவர் ரோகித்தை திருமணம் செய்துகொண்டார். பல விருதுகளை அள்ளிச் சென்ற கல்யாணியை ரசிகர்கள் மீண்டும் திரைக்கு அழைக்கிறார்கள்.

'கஸ்தூரி' - ஈஸ்வரி ராவ்:

பொதுவாக தமிழ் சீரியல்களின் வரலாற்றில் பல சீரியல்களுக்கு கதையை மையப்படுத்தும் கதாபாத்திரங்களின் பெயர்களை வைப்பதுண்டு. அதில் பெரும்பாலானவை பெண்கள் பெயர்தான். கங்கா, யமுனா, சரஸ்வதி என பெண்கள் பெயரின் வரிசையில் கஸ்தூரியும் இடம் பிடித்தது. கிராமத்துப் பெண்ணாகவும், சிட்டிப் பெண்ணாகவும் கஸ்தூரி சீரியலில் அசத்தியிருப்பார் ஈஸ்வரி. 2006 முதல் 2012 வரை காலை 11.30 மணிக்கு சன் டி.வி யில் இந்த சீரியல் ஒளிபரப்பானது. கஸ்தூரி பெண்ணோட என தொடங்கும் பாடலை பாடியவர் எஸ்.பி.பி, பாடல் வரிகள் கபிலன். 

-வே. கிருஷ்ணவேணி