Published:Updated:

குழந்தைகளைக் கவரும் அஞ்சனை மைந்தன் 'ஜெய் ஹனுமான்’!

குழந்தைகளைக் கவரும் அஞ்சனை மைந்தன் 'ஜெய் ஹனுமான்’!
குழந்தைகளைக் கவரும் அஞ்சனை மைந்தன் 'ஜெய் ஹனுமான்’!

மிழகத்திலும் சரி, வடமாநிலங்களிலும் சரி சனிக்கிழமையென்றால் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வருகின்ற கடவுள் யார்? சிக்ஸ் பேக் உடலுடன், கைகளில் கதாயுதத்துடன் சிலையாக நிற்கும் அனுமார்தான் அந்தக் கடவுள். ஆனால், இப்போதெல்லாம் விடுமுறை நாளான ஞாயிறன்றும் ஆஞ்சநேயர் குழந்தைகளை மகிழ்விக்க வீடுதேடியே வருகிறார், சன் டிவி மூலமாக ‘ஜெய் ஹனுமான்’ என்ற பெயரில்.

இந்தியில் நம்பர் ஒன் சீரியலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் மகிழ்வித்த டிவி சீரியல்  ‘ஜெய் ஹனுமான்’. தமிழில் டப் செய்யப்பட்டு, சன் டிவியில் ஞாயிறு காலை ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு குட்டி ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். ஹனுமனின் கதையைச் சொல்லும் இந்த சீரியலில், குழந்தைகளுக்கான நற்பண்புகளையும் சேர்த்து சொல்லுகிறார்கள் கதைக்குழுவினர்.

குட்டி ஹனுமனாக  வரும் இசாந்த் பன்சாலிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். அழகான நடிப்பால் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறான் இந்த குட்டிப் பையன். சல்மான் கானுடன் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்திலும் நடித்திருக்கும் இந்தக் குட்டி ஹனுமானுக்கு 7 வயதுதான் ஆகிறது என்பது ஸ்வீட் நியூஸ். உதட்டைப் பிதுக்கி ‘எனக்கு உணவு போதவில்லை அம்மா’ என்று சொல்லும்போது குட்டி ஹனுமனான இசாந்த்தை அப்படியே தூக்கிக் கொஞ்சத் தோன்றும் ரசிகர்களுக்கு. 

பின்னணி இசையே நம்மை மயக்கும்படி செம மாஸ்.’அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன்’ என்று தடதடக்கும் இசை, கதைச் சூழலுக்குள்ளேயே நம்மைக் கொண்டு சேர்த்து விடுகின்றது.  அரண்மனையில் இருக்கும் எல்லா உணவையும் சாப்பிட்டும் பசி அடங்காத குட்டி ஹனுமன், அம்மாவின் சோகத்தைப் போக்க ‘ஆகாகப் பழம்’ என்று நினைத்து சூரியனை விழுங்க செய்யும் பயணம்தான் தற்போதையை ட்ரெண்ட் சீரிஸ். நவக்கிரகங்களின் அகங்காரத்தை அடக்கி, சிவவடிவான ஹனுமனின் புகழை உலகறியச் செய்யவே நாரதர் செய்யும் குறும்புவேலை இது. அடுத்தவாரம் சூரியனை ஹனுமன் விழுங்குவாரா, இல்லையா என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர் கதையைத் தெரிந்து கொள்ள.

வாலியின் திமிர், ராவணனின் அகங்காரம், ராமன் மீதான பக்தி, சீதை மீதான அன்பு, அஞ்சனையின் பாசம் என்று மனிதர்களின் எல்லா உணர்வுகளையும் அழகாகச் சொல்லுகிறது இந்தத் தொடர்.

கிருஷ்ணர் சொல்லும் கதையாக நீளும் ஜெய் ஹனுமானின் வாழ்க்கைச் சித்திரத்தில், ராவணனுக்கும் இடமுண்டு. இலங்கையை எரித்த கதை, சூரியனை விழுங்கச் சென்ற கதை, ராமகாவியம் என அத்தனையும் கிருஷ்ணர் கதையாகச் சொல்வதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சிரஞ்சீவியான ஹனுமன், ராமநாமம் ஒலிக்கும் இடத்திலெல்லாம் இருப்பார் என்பதை மூலக்கதையாகக் கொண்டுள்ளது இந்த ஜெய் ஹனுமான். 

‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று அழகாக தலைசாய்த்துச் சொல்லும் குட்டி ஹனுமன் இதயத்தைக் கொள்ளை கொள்கின்றார் என்றால், புஜபலத்துடன் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று வீரத்தைக் காட்டும் வளர்ந்த ஹனுமன் ரசிகைகளின் மனம் கவர்ந்தவராக வலம் வருகிறார். வளர்ந்த ஹனுமனாக நடிக்கும் ஹீரோ பெயர் நிர்பய். ஹனுமனின் வீரத்தை மட்டும் சித்தரிக்காமல், அவரது அன்னையான அஞ்சனையின் நேசத்தையும், அன்பையும் ‘அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன்’ என்னும் வார்த்தையிலேயே காட்டிவிடுவது இந்த தொடரின் ஸ்பெஷல். குழந்தைகளுக்கு நற்பண்புகளை சொல்லிக் கொடுக்கும் வகையில் ஒளிப்பரப்பாகும் தொடர்களின் எளிதாக இடம் பிடித்துவிட்டது ‘ஜெய் ஹனுமான்’....!

- பா.விஜயலட்சுமி