Published:Updated:

'சீரியல்கள் மக்களுக்கு சலிக்காது. ஏன்னு சொல்றேன் கேளுங்க..!' லகலக ராம்ஜி

'சீரியல்கள் மக்களுக்கு சலிக்காது. ஏன்னு சொல்றேன் கேளுங்க..!' லகலக ராம்ஜி
'சீரியல்கள் மக்களுக்கு சலிக்காது. ஏன்னு சொல்றேன் கேளுங்க..!' லகலக ராம்ஜி

'காதல் கோட்டை' படத்தில் இடம்பெற்றுள்ள 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...' பாடல் அப்போது பட்டி தொட்டியெங்கும் ஹிட். அந்தப் பாடலுக்கு நடனமாடிய பின் பிரபலம் அடைந்தார் நடிகர் ராம்ஜி . பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தவர், திடீரென சீரியல் பக்கம் ஒதுங்கினார். ஜெயா, கலைஞர், சன் என பல தொலைக்காட்சித் தொடர்களில் தலை காட்டியவர், தற்போது  ஜி தமிழில் ஒளிபரப்பாகும் 'டார்லிங் டார்லிங்' தொடரில் நடித்து வருகிறார். அவரிடம் ஒரு சாட்...

நீங்கள் முதலில் நடித்த சீரியல்?

''கே.பாலசந்தர் சாருடைய நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். கையளவு மனசு, ரமணி VS ரமணி, மர்ம தேசம் என தொடர்ந்து அவருடைய சீரியல்களில் நடிச்சேன். அதைத் தொடர்ந்து ஜெயா டி.வி 'மனதில் உறுதி வேண்டும்', கலைஞர் டி.வி 'மடிப்பாக்கம் மாதவன்' இப்போது ஜி தமிழ் டி.வி 'டார்லிங் டார்லிங்' என பல சீரியல்களில் தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன்.''

உங்களுக்கு சீரியலில் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவா?

''நிச்சயமாக இல்லை.  நடிகன் ஆக வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுடன் சினிமாத் துறைக்குள்  நுழைந்தேன். வில்லன், காமெடியன், சென்டிமென்ட், சீரியஸ் என கிடைத்த கேரக்டர்களில் நடித்தேன். யார் யாருக்கு எப்போது வாய்ப்பு வரும் என சொல்ல முடியாது இல்லையா..? அந்த வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இப்போதும்கூட, ஏதாவது ஒரு படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.''

அப்போ... டான்ஸர் ஆனது எப்படி?

''சினிமாத்துறைக்குள் வந்ததுமே நிறைய நடிக்கக் கத்துக்கிட்டேன். கூடவே, எனக்கு சின்ன வயசுல இருந்து நல்லா டான்ஸ் தெரியும்குறதால அந்தத் திறமையையும் வெளியில காண்பிக்க ஆரம்பிச்சேன். இப்படித்தான் எனக்கு டான்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பும் கிடைச்சது. ஆக்டிங், டான்ஸ் என இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதை சிறப்பா பண்ணியிருந்தேன்.''

இத்தனை வருடங்களில் இதை மிஸ் பண்ணியிருக்கோம் என எதையாவது நினைத்திருக்கிறீர்களா?

''நிச்சயமாக. ஒரு விஷயத்தை அடிக்கடி யோசிப்பது உண்டு. ஒவ்வொருவருடைய வெற்றிக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு வழிகாட்டி, உந்துதல் இருக்கும். எனக்கும் சரியான வழிகாட்டி இருந்திருந்தால், நல்லா இருந்திருக்கும் என அடிக்கடி நினைப்பேன். சில விஷயங்கள் மிஸ் ஆகும் போது வருத்தப்பட ஒன்றுமில்லை என என்னை நானே தேத்திப்பேன்.''  

சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்குமான வித்தியாசம்?

''எதுவும் இல்லை. இரண்டுமே நடிப்புதான். சின்னத்திரை ஸ்கிரீன் சின்னது, வெள்ளித்திரை ஸ்கிரீன் பெரியது. அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டிலுமே நடிப்புதானே பேசுது. நம்முடைய  திறமையை எங்கிருந்து காண்பிச்சாலும் அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதை உணர்ந்தவன் நான்.'' 

தொடர்ந்து எல்லா சேனல்லயும் சீரியலை ஒளிப்பரப்புகிறார்களே..? சலிக்காதா?

''ஒவ்வொரு கதையிலும் நிகழ்வுகளும், கதைகளும் மாறி மாறித்தானே வருது. அப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி சலிப்பு வரும்?  முன்பெல்லாம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே சீரியல் ஒளிபரப்பாகும். இப்போது வாரத்தில் ஆறு நாட்கள் ஒளிபரப்பாகிறது. அதையும் ரசிகர்கள் தொடர்ந்து ரசிப்பதால் தான் ஆறு நாட்களும் சீரியல் ஒளிபரப்பாகிறது.'' 

முழுக்க முழுக்க சீரியலில் இறங்கியிருக்கீங்களே? குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியுதா?

''மனைவி அமிர்தா ராம் ‛காஸ்டியூம்’ டிசைனிங் பண்றாங்க. முகமூடியில ஆரம்பிச்சு இப்போ வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படம் வரை நிறைய படங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணிட்டு இருக்காங்க. எங்களுக்கு ஒரே பையன். எங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதை சரியாப் பயன்படுத்திப்போம். எதுவா இருந்தாலும் உடனுக்குடன் பகிர்ந்துப்போம்.  சீரியல் மட்டுமல்ல சினிமாவா இருந்தாலும் சரி, அதற்கு நிறைய நேரம் செலவிடுவேன். நடிகன் என்றாலே எல்லா ரோலையும் பண்ணியாகணும். இதுலயே அதிக நேரம் செலவிடுறதால ஃபேமிலிய மிஸ் பண்ணியிருக்கேன். வருத்தமா இருக்கும்.’’ 

இப்பவும் நீங்க ஃபிட்னஸ் மாறாமல் பார்த்துகிறீங்களே எப்படி?

’’ஒரு நடிகனுக்கு தன்னுடைய உடம்பு மீது அக்கறை இருக்கணும். அது எனக்கு எப்போதுமே இருக்கு. அடிப்படையில் நான் டான்ஸர். ஸோ... நம்ம உடம்பை எப்படி வச்சிக்கணும்ங்கிறது நல்லாவே தெரியும்.  டான்ஸ் என்பதே சிறந்த உடற்பயிற்சிதான். இப்போ வரைக்கும் டான்ஸை விடாம பண்ணிட்டு இருக்கேன். நிறைய ஹீரோக்களுக்கு டான்ஸ் கம்போஸ் பண்ணிக் கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும்போது ப்ராக்டிஸ் பண்றேன். எப்போ மூச்சுப் பயிற்சிப் பண்ணணும், எந்த அளவுக்கு உடலை வச்சிருந்தா, நம்ம உடல்வாகு மாறும் என்பதெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். இதுதான் என் ஃபிட்னஸ் சீக்ரெட்.’’

- வே.கிருஷ்ணவேணி