Published:Updated:

'அந்த ஒரு வார்த்தையாலதான் பிரியாம இருக்கோம்!' முல்லை - கோதண்டம் பேட்டி

'அந்த ஒரு வார்த்தையாலதான் பிரியாம இருக்கோம்!' முல்லை - கோதண்டம் பேட்டி
'அந்த ஒரு வார்த்தையாலதான் பிரியாம இருக்கோம்!' முல்லை - கோதண்டம் பேட்டி

'அந்த ஒரு வார்த்தையாலதான் பிரியாம இருக்கோம்!' முல்லை - கோதண்டம் பேட்டி

காமெடியில் கலக்குவது எப்படி', 'கலக்கப் போவது யாரு' போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக நன்கு பரிச்சயமானவர்கள் முல்லை-கோதண்டம். இருவரும் திரைக்கு வெளியிலும் நண்பர்கள். சேர்ந்தே சுற்றும் இருவரிடமும் சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தோம். முதலில் கோதண்டம்...

''என்னோட முழு பெயர் கோதண்டராமன். சின்ன வயசுல என் நடிப்பு, பேச்சைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க பாராட்டினாங்க. ஸ்கூல்ல ஒருமுறை திருவிளையாடல் வசனத்தைப் பேசிக் காண்பிச்சேன். டீச்சர் பாராட்டினதோட, 'இதெல்லாம் நல்லாதான் பண்றே, ஆனா படிப்புல ஆர்வமா இல்லையே'னு சொன்னாங்க. அப்போதான் என் பலமே எனக்குத் தெரிஞ்சது. அந்த லைனை கெட்டியாப் பிடிச்சிக்கிட்டேன். வீட்டுப் பக்கத்துல ஏதாவது நிகழ்ச்சி நடந்தா மைக் பிடிச்சுப் பேசுவேன். என்னோட ஃப்ரண்ட்ஸ் உனக்கு வாய்ஸ் மாறுதுனு சொன்னாங்க. அதுலயும் கவனம் செலுத்தினேன். 

அப்படிக் கத்துக்கிட்டதுதான் மிமிக்ரி.  நிறைய பேருடைய வாய்ஸை அசால்ட்டாப் பேசினேன். 12 வருஷத்துக்கு முன்னாடி மிமிக்ரி நல்ல ரீச்ல இருந்தது. அதற்குப் பிறகு அதுல இருந்து விலகி, காமெடி கான்செப்ட்ல இறங்கிட்டேன். பெரிய பெரிய ஆட்களுடைய மேனரிசத்தைப் பிரதிபலிக்கத் தெரியாது. ஆனால், மூன்றாவது ஆளுடைய எந்த ஸ்டைலையும் என்னால அப்படியே கொண்டு வர முடியும். ஆரம்பத்தில் கேபிள் டி.வியில் வேலை பார்த்தேன். அப்புறம் நடிக்கிறதோடு டான்ஸ், மிமிக்ரி, கதையும் எழுதுவேன்.

'உதிரிப்பூக்கள்' பட இயக்குநர் மகேந்திரன் தலைமையில், 1996-ல சொந்தமா 'சினிமா ஆசை' என்கிற நாடகம் போட்டேன். சினிமா ஆசையால ஒருத்தன் எப்படி கஷ்டப்படுறாங்கிறதை காமெடியா சொல்லியிருப்பேன். அந்த நாடகம் நல்ல ஹிட். அதற்குப் பிறகுதான் நான் வெளியே தெரிய ஆரம்பிச்சேன்.

உங்களுடைய ரோல் மாடல் யார்?

அப்படி யாரும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், யாரை ரோல் மாடலா எடுத்துக்கிறதுனு தெரியல. நான் நடிக்கிறதப் பார்த்துட்டு நிறைய பேர் நாகேஷ், சந்திரபாபு, சுருளி ராஜ் இவங்க பாடி லாங்குவேஜ் அடிக்கடி வருவதாச் சொல்லுவாங்க. அப்படியும் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரைக்கும் 20 வருஷங்களுக்கு ராக்கெட் ராமநாதன் ரொம்ப பிரபலம். அவரை மாதிரி யாராலும் மிமிக்ரி பண்ண முடியாது. அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கணும்.  

நீங்க எப்படிப்பட்ட கேரக்டர்?

ரொம்ப கோபப்படுவேன். எனக்குப் பிடிக்காத எந்த விஷயமா இருந்தாலும் சட்டுனு கோபம் வந்திடும். பெரிய பெரிய நிறுவனங்கள்ல இருந்து கூட வெளிய வந்திருக்கேன். இதுநாள் வரைக்கும் என்னோட குணத்தைப் புரிஞ்சுக்கிட்டவர் முல்லை. எதுவாக இருந்தாலும் பொறுமையா எடுத்துச் சொல்லுவார். எனக்கு நண்பர்கள் ரொம்பக் குறைவு. அதில் மிக முக்கியமானவர் முல்லை' என கலகலவென சிரிக்கிறார். 

அவரைத் தொடர்ந்து பேசினார் முல்லை...

'நாங்க ஷோ பண்ண ஒரு இடத்தில் அவர் ஷோ முடிச்சிட்டு வெளியில வருவார். நான் அப்போதான் உள்ளே போவேன். அப்படி தான் எங்களுக்குள்ள பழக்கம் ஆச்சு. அதற்குப்பிறகு இரண்டு பேரும் சேர்ந்து பண்ணிய புரோகிராம் சூப்பர் டூப்பர் ஹிட். தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் பண்ணோம். சாட்டிலைட் வரதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி பல ஷோக்களைச் சேர்ந்தே பண்ணோம். இதுதான் எங்களுக்கான அடையாளமா மாறிடுச்சு. என்னோட நிஜப்பெயர் தனசேகரன்.

உங்களுக்கு எப்படி இந்த துறை பரிச்சயம்?

சொந்த ஊர் திருவண்ணாமலை, கோணாமங்கலம். திருவண்ணாமலையில் இருக்கிற ஒரு காலேஜ்லதான் பி.லிட் தமிழ் படிச்சேன். எனக்கு காமெடி நல்லா வருதுன்னு  நண்பர்கள் சொன்னாங்க. அவங்க உசுப்பி விட்டதால என்னவோ...  நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டேன். அந்த ஆர்வம் கல்லூரி முடிச்ச பிறகும் தொடர்ந்தது.  மத்தவங்களைப் போலவே நானும் சினிமா ஆசையில் சென்னைக்குக் கிளம்பி வந்தேன். சென்னை நிறையக் கற்றுத் தந்தது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி அதை ஏற்கப் பழகிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. படிப்படியா நிறைய சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். மக்களோட அறிமுகமும் கிடைச்சது. ஒரு கட்டத்துல, எனக்கு உறுதுணையா கோதண்டம் வந்து சேர்ந்தார்.

உங்க இரண்டு பேருக்குமான நட்பில் பிரச்னைகள் வந்ததே இல்லையா?

சினிமா, ஷோ இதுல எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவோம். அவர் கொஞ்சம் முன்கோபியா இருந்தாலும் ‛அட்ஜஸ்ட்’ பண்ணப் பழகிட்டேன். முன்ன  மாதிரி இப்போ அதிகம் கோபப்படுறது இல்ல. ‛பண விஷயத்துல சரியா இருக்கணும், இரண்டு பேரும் ஒண்ணா இருந்தாதான் திரைத்துறையில சாதிக்க முடியும்...’ இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லிப்போம். அதனாலதான் இப்போ வரைக்கும் ஒண்ணா இருக்கோம். எங்களுக்கு சினிமாவில் நடிக்கிறதுக்குத் தனித்தனியா வாய்ப்பு வந்தாலும், நாங்க நடிக்கப்போற தருணத்துல, 'நீங்க இரண்டு பேரும் சேர்ந்து நடிங்க. அதான் செட் ஆகும்'னுசொல்லிட்டாங்க. அதான் சேர்ந்தே நடிச்சிட்டு இருக்கோம்.

சரளமா கலாய்க்கிறீங்களே... எவ்வளவு நேரம் பிராக்டீஸ் பண்ணுவீங்க?

ஆரம்பத்தில் இருந்தே பெருசா பிராக்டிஸ் பண்ணது இல்ல. 25% பேசிப்பார்த்துப்போம் அவ்வளவுதான். மத்தபடி ‛ஆன் தி ஸ்பாட்’ல அடிச்சிவிடுறதுதான். அதைத்தான் மக்களும் ரசிக்கிறாங்க. கான்செப்ட் யோசிக்கிறது எல்லாம் அவருதான். அதை இம்ப்ளிமென்ட் பண்றது நான். 'அவங்க இப்படி பாராட்டினாங்கடா'னு கோதண்டம் சொன்னாக் கூட, 'பாராட்டை எல்லாம் மைண்ட்ல வச்சுக்காத'னு சொல்லுவேன். பாராட்டை எப்பவும் தலைக்கு கொண்டுப்போகக் கூடாதுனு நினைக்கிறவன் நான். அது ஒரு நாள் உயர்த்தும், பல நேரம் கவிழ்த்தும்.

உங்க இரண்டு பேருக்கும் கிடைச்ச உச்சபட்ச பாராட்டு?

நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டா வந்தவங்க, நடுவர்கள், பிரபலங்கள்னு பல பேர் பாராட்டியிருக்காங்க. அது ஒருபக்கம் இருந்தாலும், மக்கள்கிட்ட இருந்து கிடைக்கிற பாராட்டு இன்னொரு சந்தோஷம். ஒரு நிகழ்ச்சிக்காக ஹோட்டல்ல தங்கியிருந்தோம். ரூம்பாய் எங்களுக்குத் தேவையான உதவிகளை செய்துட்டுப் போனார். நாங்க ரெடியாகி கிளம்பி வெளியில் வந்தப்போ, நாங்க என்னென்ன நிகழ்ச்சியில் என்னென்ன கான்செப்ட் பண்ணோம் என்பதை எல்லாம் 'கடகட'னு ஒப்பிச்சார். எனக்கு ஆச்சர்யம். எப்படி எல்லாம் மக்கள் நம்மளை ரசிக்கிறாங்க. கடைசி வரைக்கும் அவங்கள சிரிக்க வச்சுக்கிட்டே இருக்கிற பாக்கியத்தை மட்டும் கடவுள் கொடுத்தாப் போதும்' என்று சொல்லும்போது முல்லையின் குரலில் அவ்வளவு நெகிழ்ச்சி!

-வே.கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு