Published:Updated:

’ 'பாத்து பேசு தம்பி'னு அவர் சொன்னப்போ பயந்துட்டேன்!’ - யாரைச் சொல்றார் அமுதவாணன்?

Vikatan Correspondent
’ 'பாத்து பேசு தம்பி'னு அவர் சொன்னப்போ பயந்துட்டேன்!’ - யாரைச் சொல்றார் அமுதவாணன்?
’ 'பாத்து பேசு தம்பி'னு அவர் சொன்னப்போ பயந்துட்டேன்!’ - யாரைச் சொல்றார் அமுதவாணன்?

2014 ம் ஆண்டு ஜோடி நம்பர் 1 சீசன் டைட்டில் வின்னர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் வின்னர் என டிவியில் தனக்கான ஆடியன்ஸை அமுதவாணன் தக்கவைத்து கொண்ட காலம். இப்போது அரிதாக விஜய் டிவி ஷோக்களில் தலைகாட்டுபவரிடம் பேசினோம். 

''என்னைப் பத்தி ஊரு உலகத்துக்கு தெரிஞ்சதுனா அதுக்கு காரணம் 'அது இது எது' இயக்குநர் தாம்சன் சாரால மட்டும்தான். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றவாரே ஆரம்பித்தார்.

''சத்யராஜ் வாய்ஸை அவ்வளவு தெளிவாகப் பேசுறீங்களே எப்படி?''

''நான் பார்த்து, ரசிச்ச நபர்களை பத்து நிமிஷத்துக்குள்ள எனக்குள்ள உள்வாங்கிட்டு அப்படியே பிரதிபலிச்சிடுவேன். அப்படி நிறைய ஆர்டிஸ்டுகள் வாய்ஸை எனக்குள்ள கொண்டு வந்திருக்கேன். ஆனா என்னால பேச முடியாத வாய்ஸ்னா அது சத்யராஜ் சாரோடதுதான். அவரோட வாய்ஸ் எப்பவும் ஒரே நேர்கோட்ல போகாது. பெரிய பிச்சும் இருக்கும், சைலண்டாவும் இருக்கும். அந்த ஏற்ற, இறக்கங்களை கத்துக்க அதிக நாள் பிடிச்சுது. இப்ப ஆடியன்ஸ்க்கு நான் சத்யராஜ் சார்ல பேசுறதுதான் அவளோ பிடிக்குது.  ஒருமுறை சத்யராஜ் சாரே, 'என்னப்பா சூப்பரா பண்ற'னு பாராட்டினார்.''

''நீங்களும், சிவகார்த்திகேயனும் ஒரே மேடையில் வந்த நிகழ்ச்சி பற்றி?''

'' ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் சிவாவும், நானும் ஒரே நேரத்துல, ஒரே மேடையில ஒண்ணா கலந்துகிட்டோம். ரெண்டு பேரும் செமையா ஹார்ட் வொர்க் பண்ணோம். இறுதிகட்டப் போட்டியில இரண்டு பேருமே டைட்டில் ஜெயிச்சோம். கடந்த ஆறு மாதமாகத்தான் அவர்கிட்டப் பேச முடியல. எப்ப சந்திச்சாலும் நல்லாப் பேசக்கூடிய நண்பர். 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 7' ல ஆடும் ஒவ்வொரு முறையும் போன் பண்ணி எனக்கு ஊக்கம் கொடுப்பார். 'குயிலி மேடத்தை உங்களுக்கு ஜோடியாப் போட்டுட்டாங்களே, காமெடியா இருக்குமே'னு கவலைப்பட வேண்டாம். எல்லாமே ஸ்போட்டிவா எடுத்துக்கோங்க நல்லதே நடக்கும்' என்பார். அவருடைய ஊக்கம்தான் வெறித்தனமா என்னை பெர்ஃபார்ம் பண்ண வைச்சதுனு நினைக்கிறேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கூட வேற ஒருத்தர் வாய்ஸ்ல என்னை கலாய்ச்சார் போன்ல. எப்பவும் நான் பெருமைப்படுற ஃப்ரெண்ட் சிவா.''

''இயக்குநர் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?''

''2014ம் ஆண்டு 'ஜோடி நம்பர் 1 சீசன்' - 7  போட்டியில் டைட்டில் வின் பண்ணேன். அந்த நிகழ்ச்சியப் பார்த்துட்டுத்தான் பாலா சார், அவரோட 'தாரை தப்பட்டை' படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அந்த படம் எனக்கு நிறைய அனுபவங்களை கொடுத்தது. என்னோட சீன் இல்லனாலும் என்னை கூப்பிடுவார் பாலா சார். எதாவது காமெடிப் பண்ணிட்டே இருப்பேன். 'உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குடா, அவரசப்படாதே, கவலைப்படாதே'னு சொல்லிட்டே இருந்தார். அவர் வாயாலயே பாராட்டு வாங்கியாச்சு. இனி என்ன கவலை. கண்டிப்பா ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு. அதுக்கு காலம்தான் பதில் சொல்லணும்.''

''சின்ன வயசுல இருந்தே காமெடி நல்லா வருமோ?''

''எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம், அனகாபுத்தூர். எல்லா ஆர்ட்டிஸ்டும் ஊர் திருவிழாக்களில் இருந்துதான் உருவாகிறாங்கனு யாரோ சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். நானும் அப்படித்தான். ஊர் திருவிழாக்கள்ல பார்க்கிற கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிப்பேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை அடிக்கடி பாராட்டுவாங்க. அந்த மெதப்புல எனக்கு அந்த துறை மேல ஆர்வம் வந்தது. சின்ன வயசுல  என்னோட மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனா, அது தீபன் அருணாச்சலம்தான். அவரைப் பார்த்தப் பிறகுதான் மிமிக்ரியில இவ்வளவு பண்ண முடியுமானு வியந்து கத்துக்கிட்டேன். அவரை அடுத்து உதவியாக இருந்தவர் பாலாஜி. கருணாஸ், பாலாஜி, எல்லாரும் அப்போ 'சரிகமபதநிச'னு ஒரு ட்ரூப் ஆரம்பிச்சிருந்தாங்க. அந்த குழுவில் இணைந்தவர்தான் சந்தானம் சாரும். விஜய் டி.வி 'லொள்ளு சபா' முதல் பார்ட்ல நடிச்ச பாலாஜி தான் மத்த எல்லாருக்குமே இன்ஸ்பிரேஷனா இருந்தார். இப்போ வரைக்கும் அவரை மாதிரி ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் வரமுடியுமானு தெரியல. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் காலமானார்.''

'

''நீங்க அடிப்படையில விளையாட்டு வீரராமே?''

''எனக்கு விளையாட்டுனா உயிர். அதுலதான் பெரிய ஆளா வருவேன்னு கனவு கண்டுட்டு இருந்தேன். நான் ஐ.டி முடிச்சப் பிறகு, மீடியாத் துறை மேல ஆசை அதிகமாகிடுச்சு. அப்பாவும் சவுதியில இருந்து வந்துட்டார். அப்பாவுக்கு எங்க ஆறுபேரை கரை சேர்க்கணும், அக்காக்களுக்கு கல்யாணம் பண்ணணும்... அதனால மீடியாவுல நுழைஞ்சு முதல்ல குடும்பத்தை கரையேத்த நினைச்சேன். நிறைய உழைச்சேன். என்னோட விருப்பமான விளையாட்டை இழந்தேன். அந்த வருத்தம் மனசுல இருக்கு. நேரமிருக்கிறப்ப இப்பவும் விளையாடுறேன்.'' 

''நடிகர் ராமராஜ் மாதிரி அச்சு அசல் அப்படியே பண்றீங்களே அவரை எப்போதாவது சந்திச்சது உண்டா?''

''நாலு வருஷத்துக்கு முன்னாடி மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில அவரை முதன் முதலா சந்திச்சேன்.  'சார் நான் உங்கள மாதிரி அப்படியே மிமிக்ரி பண்ணுவேன்'னு சொன்னேன். 'அப்படியாத் தம்பி எங்க பண்ணுங்க பார்க்கலாம்'னு கேட்டார். நான் உடனே மேடையில் அவர் மாதிரியே பேசி, நடிச்சுக் காண்பிச்சேன். 'எப்படி பண்ணீங்க.. நான் இப்படித்தான் ஆடுறனா'னு கேட்டார். அப்படியெல்லாம் இல்ல சார் காமெடிக்காக அப்படி பண்ணேன். நீங்க நல்லா டான்ஸ் ஆடுவீங்க'னு நான் பதிலுக்கு சொன்னேன். 'பண்ணுங்க தம்பி. ஆனா, எல்லா இடத்திலும் பண்ணிடாதீங்க... பாத்துப் பண்ணுங்க'னு தட்டிக் கொடுத்தார்' நான் பயந்து போய், சார் அப்படியெல்லாம் இல்ல நான் உங்க தீவிரமான ஃபேன்'னு சொல்லி சிரிச்சேன். இந்த சந்திப்பை என்னால மறக்கவே முடியாது.''

''இப்போ என்னப் படத்துல நடிக்கிறீங்க?''

''இயக்குநர் பார்த்திபன் சாரோட அசிஸ்டண்ட் சதீஷ் இயக்கும் 'ஜூலியும் நாலு பேரும்' படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். இந்த படத்தில் எனக்கு லீட் ரோல். எனக்கு எந்த மாதிரியான காமெடி ரோலா இருந்தாலும் சரி அதில் நடிக்க தயாரா இருக்கேன். அப்படி காமெடி ரோல்ல நடிக்கிறதுதான் நியாயம், தர்மம், நல்லதும் கூட. எனக்கு அதுதானே நல்லா வரும், நல்லா தெரியும். தனுஷ் சார் எப்போவாவது டென்ஸனா இருந்தா என்னோட காமெடிகளை யூ-டியூப்ல போட்டுப் பார்ப்பாராம். இதை அவரோட ஃபேஸ்புக்லயே ஷேர் பண்ணியிருந்தார். அப்படி மத்தவங்கள சிரிக்க வைக்கிற காமெடியனா இருக்கிறது வரமாகத்தான் தெரியுது'' என்று முடித்தார்.

--வே.கிருஷ்ணவேணி