Published:Updated:

'மறுபடியும் மாடுமேய்க்கவே போறேன்!' - 'நீயா நானா' வைரமுத்து

வே.கிருஷ்ணவேணி
'மறுபடியும் மாடுமேய்க்கவே போறேன்!' - 'நீயா நானா' வைரமுத்து
'மறுபடியும் மாடுமேய்க்கவே போறேன்!' - 'நீயா நானா' வைரமுத்து

விஜய் டி.வி 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர், சிவகங்கை, சிறுகூடல்பட்டி, அரிபுரத்தைச் சேர்ந்த வைரமுத்து. மஞ்சுவிரட்டு பிரச்னை மெரினாவரை பற்றிக்கொண்டிருக்கும் சூழலில், பசு மீது அதிக பாசம் கொண்டவரான வைரமுத்துவிடம் பேசினோம். 'இந்த நேரத்துல பேசினா பப்ளிசிட்டியா போயிடும்க்கா' என்றவரை, கிராம மக்களின் உணர்வுகள் பதிவுபெற வேண்டியது அவசியம் என்று சமாதானப்படுத்தினோம். அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் வேதனை வழிந்தோடியது.

''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துக்கிட்டீங்களா?" 

''அக்கா, நான் இப்போ சிவகங்கையில இல்ல. பாண்டிச்சேரியில டீச்சரா வேலை பார்த்துட்டு இருக்கேன். எதை எதையோ தேடிப் போயிட்டிருக்கிற என் பயணத்துல, இப்போ பாண்டிச்சேரியில நிக்கிறேன். ஸ்கூல் டீச்சரா இருந்தாலும் தீர்ப்புக்கு எதிராக கருப்பு பேட்ச் போட்டுட்டுதான் போனேன். அதுக்கு சிலர் எதிர்மறையான கருத்துகள் சொன்னப்போ, மனசுக்கு கஷ்டமா இருந்தது. ஆனாலும், ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து போராடுவேன். பாண்டிச்சேரி எனக்குப் புது இடம் என்பதால, ஒரு தயக்கமும் இருக்கு. இருந்தாலும் இன்னைக்குப் போராட்டத்துல கலந்துக்கப் போறேன்.''

''உங்க ஊர்ல இந்த வருஷம் பொங்கல் திருவிழா எப்படி இருந்தது?''

''எங்க ஊரு பொண்ணுங்களோட மனசையும் தவிப்பையும் இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்க்கா. ஊருல முன்னயெல்லாம் எல்லாரோட வீட்டுலயும் மாடு நிக்கும். அதுவும் வீட்டுல ஒரு ஆளாதான் வளரும். ஆனா, எங்க கிராமத்து சனங்க, பிள்ளைகளைப் படிக்கவெக்க, பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கனு அதையெல்லாம் வித்துட்டாங்க. இப்போ நெலம், பசு எல்லாம் கையவிட்டுப் போச்சு. 

ஊர்த் திருவிழா, பொங்கல் ரெண்டையும்தான் அவ்வளவு சிறப்பாக் கொண்டாடுவோம். பொங்கல் எங்களோட பாரம்பர்ய பண்டிகைனா, ஜல்லிக்கட்டு எங்க பாட்டன், முப்பாட்டான் எங்களுக்குக் கொடுத்துட்டுப் போன பாரம்பர்ய விளையாட்டு. அதுக்கு தடைனு சொன்னதுக்கு அப்புறம், ரெண்டு வருஷமாவே ஜல்லிக்கட்டு களைகட்டல. 

அப்போவெல்லாம், பொங்கலுக்கு அடுத்த நாளு, 40 ஊர் பங்காளிகளும் ஒண்ணா சேர்ந்து படையல் போட்டு மாட்டுக்கு ஊட்டிவிட்டு, அதுக்கப்புறம்தான் நாங்க சாப்பிடுவோம். அந்த நாள் முழுக்க அத்தனை பேரும் விரதம் இருப்போம். மாடுகளுக்கு பூஜை பண்ணும்போது அதுங்களுக்கு திருஷ்டி சுத்துவாங்க. 

எங்க ஊர்ல கோயில் வீடுனு ஒண்ணு இருக்கும். வருஷா வருஷம் பொங்கல் அப்போ, கபடியில வாங்கின மெடலை எல்லாம் எடுத்துட்டு வந்து அங்க வெச்சு பூஜை பண்ணுவாங்க. அன்னிக்கு ராவே சாமி வந்து ஆடி(சாமினுதான் சொல்லுவோம்) ஒவ்வொரு வீட்டுக்கா வந்து திருநீர் கொடுத்துட்டு ஊர் எல்லையைக் கடக்கும். அடுத்த நாள்தான் மஞ்சுவிரட்டு நடக்கும். 

மஞ்சுவிரட்டுக்கு சுத்துப்பட்டு கிராமத்துல இருந்து 200, 300 மாடுகள் ஜேஜேனு வந்து நிக்கும். ஒவ்வொரு மாட்டையும் களத்துக்கு கூட்டிட்டுப் போறதுக்கு முன்னாடி கும்பிட்டு, அதுங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டுத்தான் அனுப்புவோம்க்கா. அது எங்க சாமி. எங்க சாமிகளா இருந்த மாடுகள, வெவசாயம் தப்பினதால வருமானம் இல்லாமப் போக, வறுமைக்காக வித்துபுட்டோம். பஞ்சம், வறுமைனு பலரும் தங்களோட வெவசாய நெலத்தையும் வித்துட்டாங்க. ஆனாலும், எல்லாம் கைவிட்டுப் போனாலும், வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி இருக்கணும்னு அத்தனை கஷ்டத்துலயும் மாட்டை விக்காம போராடிட்டு இருக்குற எங்க அத்தையைப் போலவும் சில பேரு இருக்காங்கங்கிறதுதான் ஆறுதல்.

இந்த வருஷம் தடையை மீறியும், எங்க ஊருப் பக்கம் நடந்த மஞ்சுவிரட்டுல 70, 80 காளைங்க கலந்துகிச்சுங்க. அப்போ யோசிச்சுப் பாருங்க... தடை இல்லாம இருந்திருந்தா எவ்வளவு காளைகள் வந்து சேர்ந்திருக்கும்? ரெண்டு வருஷமா, பொங்கல் பொங்கலாவே இல்லக்கா." 

''உங்க வீட்ல இப்போ எத்தனை மாடுகள் இருக்கு?"

கேள்வியைக் கேட்டவுடன் உடைந்து அழுகிறார். ''ரொம்ப கஷ்டமா இருக்குக்கா. எங்க அய்யா(அப்பாவின் அப்பா) இருந்தப்போ எங்க கட்டுத்தரையில அவ்வளவு மாடுகள் இருக்கும். காளை, பசுனு தனித்தனியா நிக்கும். அத்தன மாடுகள் நின்னாலும், எனக்கு என் கருப்பழகி லட்சுமியைத்தான் ரொம்பப் பிடிக்கும். அதுக்கும் எனக்கும் ரெண்டு ஒற்றுமை. ரெண்டு பேருமே கறுப்பு. ரெண்டு பேருமே எந்த வம்புதும்புக்கும் போகமாட்டோம். ஆனா, ஒரு கட்டத்துல வீட்டு வறுமையைச் சமாளிக்க அவளை பக்கத்து ஊருல வித்துட்டோம்.  

லட்சுமியை வாங்குனவங்க வீட்டு வழியாத்தான் நான் பள்ளிக்கூடம் போவேன். அவ என் உருவம் மறையுற வரைக்கும் என்னையே பார்த்துட்டு இருப்பா. சில நாட்கள்ல தாங்க முடியாம ஓடிப்போயி அவளைக்  கட்டிக்குவேன். கொஞ்சநேரம் வாயாலயும், நாக்காலயும் தடவிக் கொடுப்பா. அவளுக்கு என்ன கொடுக்குறதுனு தெரியாம, பையில இருக்குற நோட்டுல பேப்பரைக் கிழிச்சு சாப்பிடக்  கொடுத்துட்டு வருவேன்(மீண்டும் அழுகிறார்). இப்போ லட்சுமி எங்க இருக்கானு தெரியல. இதுதான்க்கா நாங்க மாட்டை வளர்க்குற பாசம். எங்களப்போயி அந்த 'பீட்டா' மாட்டைக் கொடுமைப் படுத்துறதா சொல்லுது. 

இப்போ எங்க வீட்ல மாடு இல்லக்கா. 'ஏம்ப்பா நீங்க வறுமைக்காகனு சொல்லி மாட்டை வித்துட்டீங்க..? உண்மையில மாட வித்ததாலதான்ப்பா வறுமையில இருக்கோம்'னு எங்கப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம் நிச்சயமா நான் மாடு வாங்கி வளர்ப்பேன்."

''டீச்சர், மாடு வளர்க்கிறதுக்கான சூழல் அமையுமா?"

''ஜூன் மாசம் கல்யாணம் முடிவாகியிருக்கு. என் சொந்த அத்தை பையனத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். அவரும் வெவசாயக் குடும்பம்தானே... சேர்ந்தே மாடு வளர்ப்போம். படிச்சவங்க விவசாயம் பண்ண, பண்ணை வைக்கனு வரும்போதுதான்க்கா நெலத்தையெல்லாம் காப்பாத்த முடியும். இப்போ மெரினாவைப் பார்க்கும்போது எனக்கு அந்த நம்பிக்கை வந்துருச்சு. என்னை எம்.எஸ்சி.,  பி.எட் படிக்க வைக்க பாதி நெலத்தை வித்த எங்கப்பா, இப்போ என் கல்யாணத்துக்காக மீதியையும் விக்கப் போறாங்க. மனசு ரொம்ப வலிக்குது. இப்படி நெலத்தை அடைமானம் வெச்சு, வித்துப் படிச்ச பிள்ளைங்க எல்லாம் நன்றிக்கடனா அந்த நெலத்துக்கு ஏதாச்சும் செய்யணும்ல? நான் செய்வேன்க்கா."

- வே.கிருஷ்ணவேணி