Published:Updated:

''பேசுறதுக்கெல்லாம் காசு கொடுக்குறாங்க ஜாலியா இருக்கு..!'' - 'அதிர்ஷ்டலட்சுமி' தொகுப்பாளர் கமல்!

''பேசுறதுக்கெல்லாம் காசு கொடுக்குறாங்க ஜாலியா இருக்கு..!'' - 'அதிர்ஷ்டலட்சுமி' தொகுப்பாளர் கமல்!
''பேசுறதுக்கெல்லாம் காசு கொடுக்குறாங்க ஜாலியா இருக்கு..!'' - 'அதிர்ஷ்டலட்சுமி' தொகுப்பாளர் கமல்!

''என் அக்காவின் ஆசைக்காக 'அழகிய தமிழ் மகன்' நிகழ்ச்சியில சாதாரணமா கலந்துக்கிட்டேன். நான் பேசுறது பிடிச்சுபோக, ஜி தமிழ் 'கொஞ்சம் காபி நிறைய சினிமா' நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. நிறைய பிரபலங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. இதோ இப்ப அதே சேனல்ல 'அதிர்ஷ்ட லட்சுமி' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன்" என பேச ஆரம்பித்ததுமே அருவியாய் கொட்ட ஆரம்பிக்கிறார் தொகுப்பாளர் கமல்.

''அதென்ன உங்க பேர் கமல்?''

''அப்பா கமலோட தீவிர ரசிகர். அதனால எனக்கும் கமல் சார் பேரையே வைச்சுட்டார். அவர் அளவுக்கு பேரு வாங்கதான் முடியல. அட்லீஸ்ட் பேராவது இருக்கட்டுமேனு அந்த பேரை மாத்தலை. ஒவ்வொருத்தரும் 'கமல்'னு கூப்பிடும் போது, ச்சும்மா மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும்." 

''இதுவரைக்கும் நீங்க நிறைவேற்றிய ஆசை?''

''நான் ரொம்ப ரொம்ப சாதாரணமான ஒரு குடும்பத்துல இருந்து வந்த பையன். அப்பா வாட்ச்மேன். பெரிய ஆட்கள் ஒவ்வொருத்தருக்கும் கார் திறந்து விட்டு சல்யூட் அடிப்பார். அவருக்கு இனாமாகக் கொடுக்குறப் பணம், எங்களுக்கு அப்போ அவ்வளவு பெரிய விஷயமா இருக்கும். அப்பா, அம்மா, அக்கா, நான்.. இதுதான் எங்க குட்டியூண்டு ஃபேமிலி. அப்பாவுக்கு சொந்த வீட்டுல குடியேறணும்ங்கிறது ரொம்ப நாள் ஆசை. அம்மா தாலியை அடகு வைச்சு என்னைப் படிக்க வைச்சாங்க. குடும்ப சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு நல்லா படிச்சேன். தனியார் கம்பெனியில் வேலை கிடைச்சது. பத்து வருஷம் வேலைப்பார்த்தேன். கடன் வாங்கி வீடு வாங்கினேன். இப்போ கடன் எல்லாம் அடைச்சாச்சு.''

''அப்பாவோட ஆசையை நிறைவேற்றிட்டீங்க.. அவரை சந்தோஷப்படுத்தின வேற விஷயம்?''

''வீடு கட்டி முடிச்சப்போ அவரோட சந்தோஷத்துக்கு எல்லையே இல்ல. ஆனா அதை அப்பா வெளியில காட்டிக்கலை. கஷ்டம், நஷ்டம் எதுவாக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கத் தெரியாதவர். ஒரு முறை அப்பாவை சொந்த கார்ல கூட்டிட்டு போன அன்னிக்கு நைட்டுதான், ரொம்ப நிம்மதியா தூங்கினேன். அதற்கு அடுத்து அப்பா, அம்மா ரெண்டு பேரையும் ஹைதராபாத்துக்கு ஃப்ளைட்ல கூட்டிட்டுப் போனேன். ஒரு மகனா பெத்தவங்களை சந்தோஷமா வச்சிருக்கேன். எனக்கு இந்த சின்ன வாழ்க்கைப் போதும்."

''நீங்க நிகழ்ச்சியில கலாய்க்கும் போது சில சமயம் டபுள் மீனிங்கில் பேசுவது போலத் தெரிகிறதே?''

''கண்டிப்பா அப்படிப்பட்ட எண்ணத்தோட பேசுறது இல்லை. சென்னை தமிழ்ல சரளமா பேசுவேன். அவ்வளவுதான்.  அதனால கூட அப்படி தோணலாம். பொதுவாகவே நான் நண்பர்களிடம் ஜாலியாகப் பேசுவது உண்டு. அது கண்டிப்பாக தவறான நோக்கத்தில் இல்லை. அப்படி தவறுப் போலத் தோன்றினால் இனி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்கேன்''. 

''தொகுப்பாளராக இருப்பதை எவ்வளவு தூரம் ரசிக்கிறீர்கள்?''

''டி.வியில் தொகுப்பாளர் ஆகி, இரண்டு, மூன்று எபிசோட் வந்ததும் நிறைய பேர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுட்டாங்க. அந்த சந்தோஷம் ஒருபக்கம், மீடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நமக்கு பிடிச்ச மாதிரி பேசலாம் என்பதாலும் இதை ரசிச்சு செய்ய ஆரம்பிச்சுட்டேன். பேசுறதுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறாங்கனா அதை சந்தோஷமா செய்யலாம்ல. அதை நேர்த்தியா செய்துட்டு இருக்கேன்''. 

-வே.கிருஷ்ணவேணி