Published:Updated:

காடு... போராடு!

எஸ். கலீல்ராஜா

காடு... போராடு!

எஸ். கலீல்ராஜா

Published:Updated:
##~##
பி
யர் க்ரில்ஸ் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்டு’ (Man Vs Wild) நிகழ்ச்சியில் மிரளவைக்கும் சாகச மன்னன். 'மேன் வெர்சஸ் வைல்டு’ திகில் சினிமாவின் திரைக்கதை போன்ற ஒரு நிகழ்ச்சி. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் என எதுவும் இல்லாத காடு, பனிப் பிரதேசம், பாலைவனம் போன்ற ரிஸ்க்கான இடங்களில் பியரை இறக்கிவிடுவார்கள். ஒரு கத்தி, கயிறு, கூர்மையான குச்சி போன்ற சில பொருட்கள் மட்டுமே பியரின் கையில் இருக்கும். இப்போது ஆட்டம் ஆரம்பம். அங்கே இருந்து பத்திரமாக வெளியேற வேண்டும். அது சரி... அதுவரை உணவுக்கு என்ன செய்வது? அது பியரின் பொறுப்பு!

காடு... போராடு!

இறந்துகிடக்கும் விலங்குகள், புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், இலை தழைகள் என வழியில் என்னென்ன தட்டுப்படுகிறதோ, அவை அனைத்தும் உணவுதான்! விடலைப் பருவத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். பகுதி நேரமாக பிரிட்டிஷ் விமானப் படைப் பிரிவில் Air Tropper ஆகப் பணிபுரிந்தார். 1996-ல் பியருக்கு 21 வயது. ஜாம்பியா மீது பறந்துகொண்டு இருந்தபோது, விமானத்தில் இருந்து குதித்தார். பூமியை நோக்கிப் பாதி தூரம் கடந்த பிறகும் பாராசூட் விரியவில்லை. பியர் அசரவில்லை. அந்தரத்தில் பாராசூட் பையைக் கத்தியால் குத்திக் கிழித்து, ஓரளவு விரிந்த பாராசூட்டில் தொங்கி,  தரையில் மோதி இறங்கினார். முதுகுத் தண்டில் மூன்று இடங்களில் முறிவு. 'இனி, வாழ்க்கை முழுக்க நடக்க முடியாது’ என்றார்கள் மருத்துவர்கள்.

இரண்டு வருடங்கள் கடந்திருந்தபோது, பியர் நடக்கவில்லை. ஓடவே ஆரம்பித்தார். முழுமையாகத் தேறி வந்ததும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்தார். பல முறை மயக்கம் அடைந்து, தோல்வி அடைந்து, பிறகு விடாப்பிடியாக எவரெஸ்ட் சிகரத் தின் உச்சியைத் தொட்டார் பியர். 23 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இங்கிலாந்துக் குடிமகன் பியர்தான்.

காடு... போராடு!

நண்பர்களோடு சேர்ந்து உலகின் உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உச்சியைத் தொட்டார். அட்லாண்டிக் துருவத்தில் படகுச் சவாரி போனார். 25 ஆயிரம் அடி உயரத்தில் பலூனில் பறந்தபடி டின்னர் சாப்பிட்டார். இமயமலைக்கு மேலே பாரா மோட்டாரில் (பாராசூட் கிளைடர்) மைனஸ் 60 டிகிரி  குளிரில் பறந்தார். அந்த சாகசம்தான் பியர் மீது அசகாய மரியாதையை ஏற்படுத்தியது. காரணம், அவ்வளவு உயரத்தில் ஆக்சிஜன் குறைவாகவே இருக்கும். அவ்வளவு குளிரில் ரத்தமே உறைந்து விடும். ஆனாலும், எல்லாம் சமாளித்து பியர் வெற்றிகரமாகப் பறந்து இறங்கினார்.

ஈழப் படுகொலைகளை அம்பலப்படுத்தி வரும் சேனல் 4-தான் முதன்முதலில் பியரை வைத்து 'பார்ன் சர்வைவர்’ (born survivor) என்கிற பெயரில் சாகசப் பயண ஷோவை அறிமுகப்படுத்தியது. அதையே கொஞ்சம் மாற்றி 2006-ல் 'மேன் வெர்சஸ் வைல்டு’ அறிமுகம் ஆனபோது, அதன் பதறவைக்கும் சாகச அனுபவங்களுக் காகவே டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறியது!

ஹெலிகாப்டரில் இருந்து ஆள் இல்லாத காட்டுப் பகுதியில் குதித்து இறங்குவது, பாராசூட்டில் பறப்பது, ஐஸ் மலையில் ஏறுவது, பனியில் சறுக்குவது, காட்டுத் தீயில் ஓடுவது, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் சிறுநீரையே பிடித்துக் குடிப்பது, முதலைகளோடு சண்டை போடுவது, காட்டாற்றைத் தொங்கிக்கொண்டு கடப்பது, சகதியில் மூழ்குவது, அருவியில் சறுக்குவது என பியரின் ஒவ்வொரு சாகசமும் உதறவைக்கும்... பதறவைக்கும்!

காடு... போராடு!

நிகழ்ச்சிக்காக செத்துக்கிடக்கும் வரிக்குதிரையின் அழுகிய கறியைக்கூடச் சாப்பிட்டு இருக்கிறார் பியர். விஷம் நிறைந்த பாலைவனப் பாம்பை யும் பியர் விட்டுவைத்தது இல்லை. தலையைத் துண்டாக்கிவிட்டு, ஸ்பாட்டிலேயே பாம்பு ரோஸ்ட் போட்டு இருக்கிறார்.

'இவர்லாம் ஒரு மனுஷனா?’, 'இந்த ஆளு ஒரு மென்ட்டல்’, 'எல்லாமே செட்டப்’, 'பின்றாம்ப்பா’ இப்படி பியரைப்பற்றி விதவிதமான விமர்சனங்கள். ஆனாலும், எதற்கும் பியர் அலட்டிக்கொள்ளவே இல்லை. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும்போது, பியர் ஏதாவது ஒரு காட்டில் உணவு தேடி உலவிக்கொண்டு இருப்பார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism