Published:Updated:

நாகினியைப் போலவே, பழிவாங்க துடிக்கும் இந்த நந்தினி யார்?

நாகினியைப் போலவே, பழிவாங்க துடிக்கும் இந்த நந்தினி யார்?
நாகினியைப் போலவே, பழிவாங்க துடிக்கும் இந்த நந்தினி யார்?

‘திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...’ என்ற மொமன்ட்டில் டிவியில் ஒளிபரப்பப்படும் புதுப்படங்களையும், வெரைட்டியான டிவி ஷோக்களையும்விட எப்பொழுதுமே டி.ஆர்.பி.யில் உச்சம் பெறுவன சீரியல்கள்தான். சேனலின் வெற்றியை அதில் இடம்பெறும் சீரியல்களே நிர்ணயிக்கிறது. டிவிகளில் புதிதுபுதிதாக எத்தனை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும், சீரியலுக்கான மவுசே தனி. அந்த வரிசையில்... சன் டிவியில் இந்த வார புது வரவு நந்தினி. புத்தம் புதிய நெடுந்தொடர். சரி, யார் இந்த நந்தினி? 

பொதுவாக எந்த ஒரு சீரியலும் குறைந்தது 800 எபிசோட்களையாவது தொட்டுவிடும். ஏதேனும் ஒரு சீரியல் முடியப்போகிறதென்றால், புதிதாக மற்றொரு சீரியல் தயாராகிவிடும். சமீப காலங்களில் சன் டிவியில் ஒளிபரப்பான கலக்கல் சீரியல் நாகினி. டப்பிங் சீரியல் தான் என்றாலும் ஆண்களையும் 10 மணிக்கு டிவிக்குள் இழுத்துவந்தது. ஷிவன்யாவின் நாகினியாட்டம் ரசிகர்களின் மத்தியில் செம ஹிட்; செம ஜில். கடந்த வாரமே நாகினி கிளம்பிவிட்டதால், அதற்கு பதிலாக இந்த வாரம் முதல் ஒளிபரப்பப்படும் புதுத் தொடர் நந்தினி.

நாகினி தினமும் 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நந்தினியை 9 மணிக்கு ஒளிபரப்புகிறது சன் டிவி. ஏற்கெனவே ஒன்பது மணிக்கு வந்த ‛பிரியமானவளே’ பத்து மணிக்கு ஷிஃப்டாகியுள்ளது. ஏன் இந்த மாற்றம் என்று விசாரித்தால், நாகினி அள்ளிக்கொடுத்த லைக்ஸ் தானாம். நாகினிக்கு கிடைத்த வரவேற்பு நந்தினியும் பெறவேண்டும் என்பதால், சன் டிவியின் ப்ரைம் டைமான 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது நந்தினி. 

இந்த சீரியலுக்கான முழுமையான கதையை இயக்குநர் சுந்தர்.சி. எழுதியுள்ளார். தவிர கிரியேட்டிவ் ஹெட்டும் இவரே. அதுமட்டுமின்றி சன் டிவிக்காக சுந்தர்.சியின் ‛அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம், முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தும் கொடுக்கிறது. இசை தினா. ஆனால் ‘நந்தினி நந்தினி’ டைட்டில் பாடலை மட்டும் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளிலும் சன் நிறுவன சேனல்களே ஒளிபரப்புகின்றன. தமிழில் வெளியான மற்ற சீரியல்களை விட அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதுதான், இந்த சீரியலின் ஸ்பெஷல். சின்னத்திரையில் கொடிகட்டிப்பறக்கும் நடிகர்களான விஜயகுமார், நித்யாராம், மாளவிகா, காயத்ரி ஜெயராம், சச்சு, சிங்கம்புலி என காமெடியிலும், ஹாரரிலும் அதகளப்படுத்துகிறார்கள். 

யார் இந்த நந்தினி? 

நீளமான பாம்பு, மிரட்டும் பொம்மை, பயமுறுத்தும் பேய் என்று கமர்ஷியல் சீரியலுக்கான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய, நந்தினியின் பழிவாங்கும் படலம்தான் கதைக்களம். விஜயகுமார் செய்த தவறினால் பாதிக்கப்படும் பாம்பு, விஜயகுமாரின் குடும்பத்தையே பழிவாங்க காத்திருக்கிறது. பழிவாங்க காத்திருக்கும் நந்தினிக்கு வாய்ப்பு கிடைத்ததா? அதன் பிறகு என்னவானது என்பதுதான் ஒட்டு மொத்த சீரியலும். 

மெகா பட்ஜெட், கலர்ஃபுல்  விஸூவல், அதிர வைக்கும் கிராஃபிக்ஸ், சுந்தர். சியின் காமெடி & ரொமாண்டிக் டச் என்று நாகினி விட்ட இடத்தைப் பிடிக்க சன் டிவியின் ப்ரத்யேக தயாரிப்புதான் இந்த நந்தினி. 

நந்தினி சீரியலில் சுந்தர்.சி-யின் அந்த டச்: (வீடியோ)

கொசுறு தகவல்: விஜய் டிவியின் ஹாட் ஸ்டார் போலவே, சன் டிவிக்கு தனியாக புது அப்ளிகேஷனை சன் டிவி தயார் செய்துவருகிறது. தவிர, மொபைலிலும் எந்த நேரத்திலும் சன் டி.வி-யின் அனைத்து சீரியல்களையும் பார்க்க ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனும் தயார் செய்துவருகிறது. 

-’சீரியல்’ கில்லர்