என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

சீரியல் கில்லர்ஸ்!

இரா.சரவணன்

##~##

வாய் முழுக்க பான் மசாலாவைக் குதப்பியபடி ஒரு கணவன் கத்துகிறான். மனைவி சளைக்கவில்லை. ''நீ யோக்கியமா?'' என்கிறாள். வாய்த் தகராறு கைகலப்பாக மாறுகிறது. வசனங்களும் காதைக் கிழிக்கின்றன.

 சமீபத்தில் சின்னத் திரையில் பார்த்த சீரியலில்தான் இப்படி ஒரு காட்சி. ஏற்கெனவே, நம் மெகா சீரியல்கள் அதிர்ச்சி தரும் இப்போது இன்னும் உச்சம். உபயம்... மொழி மாற்று சீரியல்கள். சின்னத் திரையில் சீரியல்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்கிற புலம்பல்கள் மலையேறி, இப்போது 'பிற மொழி சீரியல்களின் ஆதிக்கத்தில் இருந்து சின்னத் திரையைக் காப்பாற்றுங்கள்!’ என்கிற கதறல் குரல்கள் கேட்க ஆரம்பித்துஇருக்கின்றன.

சீரியல் தயாரிப்புச் செலவுகளுக்குப் பயந்து, இப்போது பல சேனல்கள் மொழி மாற்று சீரியல்களை ஒளிபரப்பத் தொடங்கி இருக்கின்றன. இதன் பாதிப்பு இயக்குநர்கள் தொடங்கி, லைட்மேன்கள் வரை பாயத் தொடங்கியிருப்பதுதான் சோகம்.

சீரியல் கில்லர்ஸ்!

இதுகுறித்துப் பேசும் சின்னத் திரை இயக்குநர் கவிதாபாரதி, ''கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சின்னத் திரையை நம்பி வாழ்கிறார்கள். சீரியல்கள் எடுத்தால்தான்,  ஜீவனம். தமிழில் வரும் ஆறு சேனல்களை நம்பித்தான் அவர் களின் வாழ்க்கை சுழல்கிறது. ஆனால், டி.வி. நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கை என்று பிற மொழி சீரியல்களின் ரைட்ஸை வாங்கிவிடுகிறார்கள். மிகக் குறைந்த செலவில் அதை டப்பிங் செய்து, தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகிறார்கள்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்துமே மொழி மாற்று சீரியல்கள்தான். சன் டி.வி-யில் ஒன்று, பாலிமர் டி.வி-யில் இரண்டு, விஜய் டி.வி-யில் இரண்டு, ராஜ் டி.வி-யில் ஒன்று என பல்வேறு சேனல்களிலும் மொழி மாற்று சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இப்போதே மொழி மாற்று சீரியல்களின் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் சின்னத் திரை பிறமொழி களின் கபளீகரத்துக்கு ஆளாகிவிடும்.  

கர்நாடகா மாநிலத்தில் மொழி மாற்றப் படங்களுக்கோ, மொழி மாற்றுத் தொடர்களுக்கோ அனுமதி கிடையாது. தமிழில் ஹிட்டான 'கோலங்கள்’ சீரியலை கர்நாடகத்தில் உள்ள சேனல் ஒளிபரப்ப விரும்பினால், கதையை மட்டும்தான் வாங்க முடியும். அதன் பிறகு அதனைத் தொடராக எடுக்க வேண்டும். இப்படி செய்யும்போது அங்கே உள்ள சின்னத் திரைத் தொழிலாளர்கள் பாதிப்பு அடைய மாட்டார்கள். அத்தகைய முயற்சிகள் இங்கேயும் அமலாக்கப்பட வேண்டும்!'' என்கிறார் ஆதங்கமாக.

சீரியல் கில்லர்ஸ்!

சின்னத் திரை இயக்குநர் திருச்செல்வம், ''மொழி மாற்று சீரியல்களை நம்மால் பார்க்க முடிகிறதா என்பதை முதலில் யோசிக்க வேண்டும். நம் கலாசாரத்துக்கும் பேச்சு வழக்குக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சீரியல்களை சேனல்கள் எப்படித்தான் ஒளிபரப்புகின்றனவோ? இந்த மாதிரி சீரியல்களை மக்கள் பெரிதாக விரும்பிப் பார்க்க மாட்டார்கள். தமிழில் தயாரிக்கப் படும் சீரியல்களின் காட்சிகளிலேயே, என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. நம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் குடும்பப் பாங்கான கதைகளை வீடுதோறும் கொண்டுசெல்லும் விதமாகத்தான் நாங்கள் சின்னத் திரை பக்கம் வந்தோம். மொழி மாற்று சீரியல்கள் அதிகரித்தால் சின்னத் திரையை விட்டு வெளியே வருபவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாததாகிவிடும். இந்த அபாயத்தைத் தக்கபடி தடுக்க வேண்டும்!'' என்கிறார் அக்கறையோடு.

சீரியல்கள் தயாரிக்க செலவு அதிகம்ஆகிறதா என்பதைப்பற்றி சின்னத் திரை தயாரிப்பாளர் 'சத்யஜோதி’ தியாகராஜனிடம் கேட்டோம். ''சீரியல்கள் தயாரிக்க செலவு அதிகமாவது உண்மைதான். சினிமாவுக்குக் கேட்பதைவிட சின்னத் திரைக்குக் குறைவாகக் கேட்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனால், சினிமாவுக்கு ஊதியம் அதிகம் வேண்டும் என யூனியன்கள் வலியுறுத்தும் சூழலில், எங்களிடத்திலும் அதிக ஊதியத்தை எதிர்பார்ப்பார்கள். எல்லா சீரியல்களுமே ஹிட்டாகிவிடுவது இல்லை. இத்தகைய சிரமத்தை அனுபவித்தாலும், மொழி மாற்று சீரியல்களை எதிர்ப்பதில் நாங்கள் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறோம். மொழி மாற்று சீரியல்கள் கற்பனையையும் கலாசாரத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிடும். இதை சேனல்கள் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்கிறார் தியாகராஜன்.

இதற்கு சேனல்கள் தரப்பின் பதில் என்ன?

''சின்னத் திரை உலகமே பயப்படுகிற அளவுக்கு மொழி மாற்று சீரியல்கள் அதிகமாகிவிடவில்லை. மக்கள் அதிகமாக டி.வி. பார்க்காத நேரங்களிலும் தமிழ் சீரியல்களைப் போட்டு வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மதியம் 3 மணிக்கு எந்த சீரியலை ஒளிபரப்பினாலும் பார்ப்பவர் களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும். சீரியலைத் தவிர்த்து, வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதும் சாத்தியம் இல்லை. அத்தகைய நேரங்களில்தான் மொழி மாற்று சீரியல்களை ஒளிபரப்புகிறோம். சில சேனல்களில் மொழி மாற்று சீரியல்களே பிரதான நேரங்களிலும் ஒளி பரப்பாகின்றன. ஆனால், டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அந்த சீரியல்கள் கடைக்கோடியில் கிடக்கின்றன. அதனால், சம்பந்தப்பட்ட சேனல்களே அந்த சீரியல்களை புறக்கணித்துவிடும்!'' என்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானவர்களின் வலி புரிந்தால் சரி!